
மம்தா பானர்ஜி விரைவில் கைது செய்யப்படுவார் என மேற்குவங்காள மாநில பா.ஜனதா தலைவர் சுகந்தா மஜும்தார் கூறி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மேற்குவங்காள பா.ஜனதா தலைவர் சுகந்தா மஜும்தார் கூறியதாவது:- திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி விரைவில் கைது செய்யப்படலாம் டிசம்பர் மாதத்திற்குள் மம்தா பானர்ஜி கைது செய்யப்படலாம். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களின் 41 பெயர்கள் உயர்மட்ட தலைமையிடம் உள்ளன.
டிசம்பரில் அரசு கவிழும் என கூறி உள்ளார். பா.ஜனதா தலைவரும் திரைப்பட நடிகருமான மிதுன் சக்ரவர்த்தியும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறியிருந்தார். “மம்தா பானர்ஜியின் கட்சியின் 21 எம்.எல்.ஏ.க்களுடன் நான் தொடர்பில் இருக்கிறேன், இதை நான் முன்பே கூறியுள்ளேன், எனது கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். தகுந்த நேரத்திற்கு காத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று மிதுன் சக்ரவர்த்தி கூறி உள்ளார்.