spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் போட்டியிட‌ பாஜக காங் தாமாக தீவிரம்-அண்ணாமலை போட்டியிடுவாரா..,?

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் போட்டியிட‌ பாஜக காங் தாமாக தீவிரம்-அண்ணாமலை போட்டியிடுவாரா..,?

- Advertisement -

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் சார்ந்த போஸ்டர்கள், பேனர்கள் அகற்றப்படுகின்றன.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவும் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவன் மகனுமான திருமகன் ஈவெரா சமீபத்தில் காலமானார். இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், நேற்று வெளியானது.

அதன்படி பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி ஆரம்பமாகிறது. இச்சூழலில் நேற்றே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அதன்படி அரசியல் கட்சிகள் சார்ந்த போஸ்டர்கள், பேனர்கள் அகற்றப்படுகின்றன. அது மட்டுமில்லாமல் அரசு சார்ந்த கல்வெட்டுகளும் கட்சி தலைவர்களின் சிலைகளும் மூடப்படுகின்றன. இதேபோல பொங்கலுக்கு வெளியான விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்களுக்காக ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்களும் அகற்றப்படுகின்றன.

தேர்தல் பணிக்குழு அமைத்த பாஜக..

இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக பல்வேறு கட்சி தலைவர்களும் முக்கிய ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்வதற்காக தேர்தல் பணிக்குழுவை பாஜக அமைத்துள்ளது.

இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கவனிக்கவும் 14 பேர் கொண்ட பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இது தொடர்பான பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் நாளை கடலூரில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்க உள்ளார். கூட்ட முடிவில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது. இந்நிலையில் மாலை மையக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் இடைத்தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடலாமா? வேண்டாமா? என்று இருவிதமான எண்ணத்தில் தவிக்கிறது..

அ.தி.மு.க. போட்டியிட்டால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் வரும். இரட்டை இலை சின்னத்தை பெற எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் கையெழுத்து போட வேண்டும். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தயாரில்லை. அவர் தனியாக வருகிற 23-ந்தேதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். எனவே கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்து விடலாம் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

த.மா.கா.விலும் போட்டியிட தயக்கம் உள்ளது. கடந்த தேர்தலில் த.மா.கா. வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால் இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைப்பது சிக்கலாகி உள்ளது. சின்னம் கிடைக்காத பட்சத்தில் த.மா.கா.வின் சின்னங்களான ஆட்டோ அல்லது தென்னந்தோப்பு சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும். அது இந்த குறுகிய காலத்தில் மக்களிடம் பிரபலமடையுமா? என்ற சந்தேகம் உள்ளது. அது மட்டுமல்ல இடைத்தேர்தலில் போட்டியிட அதிகமான பணச்செலவாகும். பொதுத்தேர்தல்களில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் போட்டி போட்டு பணத்தை தண்ணீராக செலவு செய்வார்கள்.

ஆனால் இடைத்தேர்தலில் போட்டி அந்த அளவுக்கு இருக்காது என்பதால் பணம் செலவழிப்பது சாத்தியமில்லை. இப்படிப்பட்ட சூழலில் எப்படி தேர்தலை சந்திக்க முடியும்? என்றுதான் தயங்குகிறார்கள்.

இந்த நிலையில் இது பற்றி ஆலோசிப்பதற்காக டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, கோகுலஇந்திரா, பெஞ்சமின் ஆகிய அ.தி.மு.க. நால்வர் குழு இன்று காலை 11 மணி அளவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. அலுவலகத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து பேசினார்கள். அப்போது இருதரப்பிலும் தங்கள் விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் பற்றி விளக்கமாக விவாதித்ததாக கூறப்படுகிறது.

ஜி.கே.வாசன் தெரிவித்த கருத்துக்கள் அ.தி.மு.க. தலைமைக்கு சொல்லப்படும். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார். சந்திப்பு முடிந்ததும் தலைவர்கள் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது ஜி.கே.வாசன் கூறியதாவது:- இடைத்தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினேன். நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் நாங்கள் இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்டோம். இன்று அ.தி.மு.க. தலைவர்கள் எங்கள் அலுவலகத்துக்கு வந்ததை வரவேற்கிறோம். இன்றைய அரசியல் சூழலை கவனத்தில் கொண்டு எங்கள் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டியது எங்கள் கடமை. அதற்கான வியூகங்களை வகுப்பது பற்றி இரு தரப்பினரும் ஆலோசித்தோம். எங்கள் இலக்கு கூட்டணி உறுதியாக வெற்றி பெற வேண்டும் என்பதுதான். தி.மு.க. அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக, மக்கள் செல்வாக்கை இழந்த அரசாக மாறிவிட்டது. எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ஆட்சியின் மீது அவநம்பிக்கை அதிகரித்துள்ளது. இவையெல்லாம் ஆட்சிக்கு எதிரான எதிர்மறை உணர்வுகளையே அதிகரிக்க வைத்துள்ளது. இது எங்களுக்கு சாதகமாக இருக்கும். கூட்டணி கட்சிகள் கூடிப்பேசி எந்த கட்சி போட்டியிடுவது? வேட்பாளர் யார்? என்ற விபரங்கள் அடுத்த ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இப்படி இரு கட்சிகளும் தயங்குவதை காரணம் காட்டி கூட்டணியில் இருக்கும் பா.ஜனதா போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் போட்டியிட தயாராகி வருகிறது. இதற்கான ஆயத்த பணிகளை தொடங்கி விட்டன. முதற்கட்டமாக 14 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. அந்த குழுவில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தா, சரஸ்வதி எம்.எல்.ஏ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிசாமி, கரூர் மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிர மணியன், மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில், மாவட்ட பொதுச்செயலாளர் விநாயகமூர்த்தி, வேல் பாண்டியன் உள்ளிட்ட 14 பேர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார்கள். பா.ஜனதா களம் இறங்கி பலத்தை காட்ட வேண்டும் என்ற எண்ணமும் கட்சியினரிடையே உள்ளது. டெல்லி சென்றுள்ள பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று இரவு சென்னை திரும்புகிறார். நாளை இது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை காளிங்கராயன் பாளையத்தில் காளிங்கராயன் நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்த அ.தி.மு.க.வின் செங்கோட்டையன், த.மா.கா.வின் விடியல் சேகர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சென்றனர். அப்போது தேர்தல் தொடர்பாக அவர்கள் தனியாக சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்கள். நாளை (21-ந்தேதி) மாலை அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடக்கிறது. இந்த ஆலோசனைகள் முடிந்த பிறகே அ.தி.மு.க. கூட்டணியில் யார் களம் இறங்குவார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- அண்ணாமலை போட்டியிடுவாரா? என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.கடந்த சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். அண்ணாமலை களம் இறங்கினால் பா.ஜனதாவுக்கும் காங்கிரசுக்கும் நேரடி போட்டி ஏற்படும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற தொகுதி. எனவே இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் தான் போட்டியிடும். வேட்பாளர் யார் என்பது இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். எங்கள் கூட்டணி கட்சிகளான தி.மு.க., ம.தி.மு.க.. விடுதலை சிறுத்தைகள் மற்றும் பொதுவுடைமை கட்சி தலைவர்களை இன்று மாலை முதல் சந்திக்க உள்ளோம். ஈரோட்டில் காங்கிரஸ் வெற்றிக்கு அவர்கள் ஆதரவை கோர இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,100SubscribersSubscribe