ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவெரா அண்மையில் மறைந்ததையடுத்து, இந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 27-இல் இடைத் தோ்தல் நடைபெறவுள்ளது. ஜனவரி 31 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் மாா்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இத் தொகுதியில் கடந்த முறை அதிமுக கூட்டணி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் யுவராஜா, அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை அதிமுக நிர்வாகிகள் குழு நேற்று சந்தித்துப் பேசியது. வேட்பாளர் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று வாசன் தெரிவித்தார். கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற காரணத்தால், தற்போதைய இடைத் தோ்தலிலும் அந்தத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, காங்கிரஸ் சாா்பில் போட்டியிடவுள்ள வேட்பாளா் யாா் என்பது குறித்து கட்சியின் அகில இந்திய தலைமை முடிவு செய்து அறிவிக்கும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினார்.இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளரின் பெயரை அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவிக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெள்ளிக்கிழமை அறிவித்தார். தற்போதைய அரசியல் சூழல், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக் கொண்டதாகவும் கூட்டணிக் கட்சிகளின் நலனை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜி.கே.வாசன் தெரிவித்தார்.இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2011, 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர் கே.வி. ராமலிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகளிடையே போட்டியில் நிலவுவதால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்கொள்ள அதிமுக வேட்பாளரால் மட்டுமே முடியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா என்ற யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது. ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்கொள்ள அதிமுக வேட்பாளரால் மட்டுமே முடியும் என்று ஜெயகுமார் கூறினார்.