ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று ஓ.பன்னீர்செல்வம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிட உள்ளோம். இரட்டை இலை சின்னத்தை பெற எங்களுக்கு முழு உரிமை உள்ளது. 2026 வரை ஒருங்கிணைப்பாளராக செயல்பட தொண்டர்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ளனர். இரட்டை இலை சின்னம் கோரி ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடுவேன். பாஜக போட்டியிட விரும்பினால் நாங்கள் ஆதரவு அளிப்போம் என்றார்.
இரட்டை இலை சின்னத்தை முடக்க எந்த காலத்திலும் தடையாக இருக்க மாட்டோம். அதிமுக பழைய நிலைக்கு வரும் வரை சட்டப் போராட்டம் தொடரும். தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை நான் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர். நாளை மறுநாள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நல்ல முடிவெடுப்போம். இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவோம். பாஜக, பாமக, த.மா.கா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோருவோம். சசிகலா தரப்பில் இதுவரை எந்த பேச்சு வார்த்தையும் நடத்தப்படவில்லை.
அதிமுக பிளவுபட்ட அணிகளாக தேர்தலை சந்திக்க எங்களுக்கு விருப்பம் இல்லை. சசிகலாவை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். ஒன்றிணைந்து செயல்படுவது தொடர்பாக பழனிசாமி அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார். ஒன்றிணைந்து செயல்படுவது தொடர்பாக இதுவரை பழனிசாமி தரப்புடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எங்கள் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார என்று கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளன. இருவரும் போட்டியிடுவது குறித்து இன்று அறிவிக்கின்றனர். இதனால் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா அல்லது ஓபிஎஸ்சுக்கு மட்டும் சின்னம் கிடைக்குமா என்ற பரபரப்பு தமிழக அரசியலில் எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிடுவது தொடர்பாக கூட்டணி கட்சியினரான தமாகா தலைவர் ஜி.கே.வாசனை ஓ. பன்னீர்செல்வம் அணியினர் சந்தித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவையடுத்து இத்தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் தற்போதைய இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சம்மதம் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி அணி தங்கள் தரப்பு போட்டியிடும் என்று கூறிய நிலையில் ஓபிஎஸ் தரப்பும் வேட்பாளரை நிறுத்துவதாக சனிக்கிழமை அறிவித்துள்ளது அரசியல் சூழ்நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் சனிக்கிழமை காலை 11 மணிக்கு ஜி.கே.வாசனை சந்தித்து பேசி வருகின்றனர்.
தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் ராமதாஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தியை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.