ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை அதிமுக வேட்பாளர் யார் என இபிஎஸ் அறிவிக்காததும் இன்று இபிஎஸ் யை ஜிகே.வாசன் சந்தித்து பேசியதும் அரசியலாளர்கள் உற்று நோக்கி கவனித்து வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்கி பிப்ரவரி 7-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதனிடையே, இடைத்தேர்தல் நெருக்கி வருவதால் அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதேபோன்று தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மற்றும் ஏபிஎஸ் அணி இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக நடவடிக்கைகளை அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு ஓபிஎஸ் தரப்பினரும் தீவிரமாக இறங்கியுள்ளது. அதேவேளை, அதிமுக வேட்பாளர் யார்? என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அதேவேளை, பாஜகவும் இந்த இடைத்தேர்தலில் இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை. பாஜக வேட்பாளரை அறிவித்தால் நாங்கள் இடைத்தேர்தலில் போட்டியிடாமல் விட்டு தருவோம் இல்லையேல் வேட்பாளரை நிறுத்துவோம் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி உடன் ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்தியுள்ளது அரசியல் பிரமுகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் திமுக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். வரும் தேர்தலில் நிச்சயம் மாற்றம் நிகழும். அதிமுகவுடனான கூட்டணி தொடர்கிறது என்று கூறினார்.இதன் அர்த்தம் என்ன என்று பலரும் விவாதித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது: சென்னையில் ஆட்சி மன்ற குழு கூட்டம் கூடி இடைத்தேர்தல் வேட்பாளரை முடிவு செய்யும். ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்த தகவல் 2 நாள்களில் அறிவிக்கப்படும்.மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இந்த இடைத்தேர்தல் முடிவு நாடளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். வாக்கு சேகரிக்கும் பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டோம். இந்த இடைத்தேர்தல் முடிவுகள் மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜவின் ஆதரவு தேவையில்லை என்ற முடிவுக்கு எடப்பாடி அணி வந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், பாஜகவை கழட்டி விட எடப்பாடி அணி திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் பாஜவுடன் இனி எந்த பேச்சு வார்த்தையிலும் ஈடுபட வேண்டாம் என்று இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு எடப்பாடி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் அதிமுகவுக்கு உரிமை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் வழக்குத் தொடர்ந்துள்ளனர். தற்போது இரட்டை இலைக்காக மீண்டும் தாக்கல் செய்துள்ள மனு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது. இது தொடர்பாக நாளை ஓபிஎஸ் தரப்பும் மனு தாக்கல் செய்ய உள்ளது. மனுதாக்கல் செய்ய நேரம் கேட்பார்கள். இதனால், நீதிமன்றம் என்ன பதில் சொல்ல போகிறது என்று தெரியவில்லை. இடைத் தேர்தல் இருக்கிறது. அதனால், நேரம் கொடுக்கமுடியாது என்று நீதிமன்றம் சொன்னால், எங்களுக்கு நேரம் வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு கேட்கும். அப்படி இழுத்தார்கள் என்றால், அதனால், நாளையே முடிவு வருமா? என்று சந்தேகம் இருக்கிறது. ஓபிஎஸ் தரப்பு இழுத்தார்கள் என்றால் வழக்கு தள்ளிப்போக வாய்ப்பு ஏற்படும்.இப்படி திரிசங்கு சூழலில் அதிமுக தவிப்பது அக்கட்சியின் ஒருமித்த முடிவு தள்ளிப்போகிறது.இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார்.
இடைத்தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளராக மேனகா போட்டியிடுகிறார். வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் இடைத்தேர்தலில் மேனகா போட்டியிடுவார் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளது அக் கட்சியினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது . அதிமுக நிலைப்பாடு தான் முடிவுக்கு வராதது அக்கட்சியில் தொண்டர்கள் நிர்வாகிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.