ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் அதிமுக ஏபிஎஸ் அணி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த அதிமுக இபிஎஸ் அணி வேட்பாளர் வரும்7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தோ்தல் 27 ஆம் தேதி நடக்கிறது. இந்த தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறாா். காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தனது தோ்தல் பிரசாரத்தை கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாக்கல் செய்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கை சின்னத்தில் போட்டியிடுவதற்காக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெறுவதைக் காட்டிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெறுவதை அதிகமாக விரும்புகிறேன். எனது மகன் பணியை நான் தொடர்ந்து செய்ய எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஈரோடுக்கு ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டத்திற்காக நான் பாடுபடுவேன். இதற்காக அமைச்சர் முத்துசாமி, முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலினுடன் இணைந்து செயல்படுவேன். இந்த தேர்தலில் நிச்சயமாக நாங்கள் மிகப் பெரும் வெற்றியை பெறுவோம். ஈரோடு மாநகர் பகுதியில் ஏற்பட்டிருக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பாடுபடுவேன். இதைப்போல் சாயக்கழிவு நீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண பாடுபடுவேன். திமுகவினர் தேர்தல் பணிகளை சிறப்பான முறையில் பணியாற்றி வருகின்றனர். நிச்சயமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள் மிகப் பெரிய வெற்றியை பெறுவோம் என்று இளங்கோவன் கூறினார்.
பாஜக தலைவர் அண்ணாமலையை பொறுத்தவரை அவர் என்னைவிட பெரிய மனிதர். நான் அவரை விட சின்ன மனிதர். அவர் பேச்சுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை. மேலும் எதைப் பற்றியும் நான் கவலைப்பட மாட்டேன். என்று கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே.எஸ். தென்னரசு அறிவிக்கப்பட்டார். அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவிருந்த நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை இபிஎஸ் சந்திப்பிற்கு பிறகு, அவரது வேட்பு மனுத்தாக்கல் 7-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.ஓபிஎஸ் அண்ணாமலை சந்திப்பிற்கு பின், ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர் செந்தில் முருகன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இதனிடையே, ஈரோடு முனிசிபல் காலனி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் அணியின் தேர்தல் பணிமனையில், தேசிய ஜனநாய கூட்டணி பாசறை கூட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. இதில், ஒருபுறம் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் முழு உருவப் படங்களும், மறுபுறம் பிரதமர் மோடி, ஓபிஎஸ் படங்களுடன், வேட்பாளர் படமும் இடம் பெற்றுள்ளது.இதோடு, பெரியார், காயிதேமில்லத், அம்பேத்கார், முத்துராமலிக்கத் தேவர், தீரன் சின்னமலை, காமராஜர் ஆகியோரின் படங்களுடன், பாஜக அகில இந்திய தலைவர் ஜெ.பி.நட்டா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஏ.சி.சண்முகம், தனியரசு, ஜான் பாண்டியன் ஆகிய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் படங்களும் உள்ளன.