

உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமியின் படத்துக்கு பாலாபிஷேகம் செய்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்கின்றனர்.
ஜூலை 11-ந்தேதி நட ந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதே போல் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. இதையடுத்து அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி வசமாகி உள்ளது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு அ.தி.மு.க. தொண்டர்களுக்கிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

தீர்ப்பை கேட்டதும் அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். அவர்கள் சென்னை ராயப்பேட்டை யில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் குவிந்தனர். அவர்கள் உற்சாக கோஷம் எழுப்பி கொண்டாடினர். பட்டாசு வெடித்தும் மகிச்சியை வெளிப்படுத்தினார்கள். மேலும் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர். எடப்பாடி பழனிசாமியின் படத்தையும் கையில் ஏந்தியபடி உற்சாகமாக கோஷமிட்டனர்.
இதற்கிடையே எடப்பாடி பழனிசாமியின் படத்துக்கு ஒருசில தொண்டர்கள் பாலாபிஷேகம் செய்தனர். அ.தி.மு.க. தலைமை கழகம் ஒரே மகிழ்ச்சி ஆரவாரத்துடன் காணப்பட்டது. அதே போல் தமிழகம் முழுவதும் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது, இந்த தீர்ப்பு தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றியாகும். கடவுள் எங்கள் பக்கம் உள்ளார். மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மா எங்களை வழிநடத்திச்செல்கிறது. தர்மத்தின் பக்கம் தீர்ப்பு கிடைத்துள்ளது. இனி அ.தி.மு.கவுக்கு தொடர் வெற்றிகள்தான் கிடைக்கும். ஓ.பன்னீர்செல்வம் பொய்யாக ஒரு அணியை உருவாக்கி பொம்மை போல் செயல்பட்டு வந்தார். இன்று காலை 10.30 மணியுடன் அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை கோர்ட்டு உறுதி செய்துள்ளது. அவருடன் கடைசியாக இருந்த 106 பேர்களும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்றுக்கொண்டனர்.
இதனால் ஓ.பன்னீர்செல்வம் இனி எந்த வழக்கும் தொடர முடியாது. ஈரோடு இடைத்தேர்தலிலும் எங்களுக்கு அமோக வெற்றிகிடைக்கும். குறைந்தபட்சம் 50ஆயிரம் முதல் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தென்னரசு வெற்றிபெறுவார். 1972-ம்ஆண்டு கட்சியை தொடங்கிய எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து நான் இந்த இயக்கத்தில் உள்ளேன்.
கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலை அ.தி.மு.க சந்தித்து ஒருலட்சத்து 62 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றிபெற்றது. பிரதமர் இந்திராகாந்தி, அப்போதயை முதல்-அமைச்சர் கருணாநிதி, காமராஜர் ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டும் எங்கள் வெற்றியை தடுக்க முடியவில்லை. அதேபோன்ற வெற்றி ஈரோடு இடைத்தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றார்.
அடுத்து எந்த நீதிமன்றம் போகலாம்-ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஓபிஎஸ்..

அ.தி.மு.க பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பின் முடிவு குறித்தும், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போதும் நீதிமன்ற தீர்ப்பு எவ்வாறு இருந்தாலும் தொண்டர்கள் தன்பக்கம் எப்போதும் இருப்பார்கள். தீர்ப்பு பாதகமாக வந்தால் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொண்டர்கள் சோர்ந்துவிடக்கூடாது என உற்சாகப்படுத்தினார்.
திண்டுக்கல்லில் இன்று ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் திருமணம் விவேகானந்தா நகரில் நடைபெறுகிறது. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் வருகை தர இருந்தார். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் அவரது ஆதரவாளர்கள் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
ஆனால் திடீரென திருமண நிகழ்ச்சியில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என தெரிவித்துவிட்டார். தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், இதனால் வேறு ஒரு நாளில் மணமக்களை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளதாகவும் கூறினார். இதேபோல் திண்டுக்கல்லில் நடக்க இருந்த ஆதரவாளர்கள் கூட்டமும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.