
— C.P.சண்முகம்
இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வை எழுத சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் வரவில்லை. இந்த அதிர்ச்சியான செய்தி மக்களிடையே பேசு பொருளானது. அதன் பிறகு மாணவர்கள் தமிழ்த் தேர்விற்குக்கூட எழுத ஆர்வம் காட்டவில்லை என்பது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இது ஏன் என்ற கேள்வி மக்களிடமும் சமூக அக்கறை உடையவர்களிடமும் எழுந்தது.
அப்போதுதான் திராவிட அரசியல் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தில் அரசியல் செய்து சீரழித்து வரும் அப்பட்டமான உண்மை வெளிவந்தது.
பொது தேர்வுக்கான நுழைவு சீட்டுகள் தருவதற்கு சில வரைமுறை உள்ளது. அதில் முக்கியமானது மாணவர் 75 சதவீதம் பள்ளி வருகை தந்திருக்க வேண்டும். ஆனால் மழைக்கு கூட பள்ளிக்கூடத்தின் பக்கம் ஒதுங்காத மாணவர்களுக்கும் நுழைவு சீட்டை வழங்கிய பெரிய மனது தெரிய வந்தது. இது மாணவனின் கல்வி தரத்தை உயர்த்தாது. ஆனால் +2 படித்ததாக பொய் சான்றிதழ் பெற உதவும்..
இதனால் திராவிட அரசியலுக்கு என்ன லாபம்? சராசரியாக தமிழக அரசு ஒவ்வொரு மாணவருக்கும் சுமார் 70 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை இலவசமாக தருவதாகவும் சத்துணவு கணக்கும் காட்டி அதனை அமுக்க முடியும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. நாங்கள் அந்த பொருட்களை அப்படியே வைத்திருக்கிறோம் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். படிக்காத மாணவர்களின் புத்தகம் பை இன்னும் பிற பொருட்களை எதற்கு ஓராண்டாக வைத்திருக்க வேண்டும்?
அடுத்து ஒரு சிறப்பு சலுகையை அமைச்சர் அறிவித்ததாக செய்தி வெளியானது. மாணவர்கள் 3நாட்கள் பள்ளிக்கு வந்தாலே போதும் பொதுத்தேர்வு எழுதலாம் என்பது தான் அது. எதற்கு அந்த 3நாள். மூன்று நாட்களிலேயே ஒரு மாணவரால் படிப்பை முடிக்க முடியும் என்றால், வருடம் முழுவதும் எதற்கு பள்ளி நடக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுகிறது..
ஆனால் தற்போது அமைச்சர் அதனை மறுத்து, 75% வருகை இருந்தால் தான் தேர்வு எழுத முடியும் என்ற நடைமுறை பின்பற்றப்படும் என அறிவித்துள்ளார். இத்தகைய குளறுபடி மாணவர்கள் தேர்வு எழுதவோ, கல்வி மேம்படவோ உதவாது. அரசியலில் இருந்து கல்வித்துறையை பிரித்தால் மட்டுமே எதிர்கால மாணவ சமுதாயத்திற்கு நன்மை பயக்கும்.
பாடநூல் கழகத்தின் வாரியத் தலைவராக திண்டுக்கல் லியோனி, கல்வி ஆலோசனை குழுவில் சுப. வீரபாண்டியன் போன்ற நியமனத்தில் அப்பட்டமாக தனது நாத்திக சித்தாந்தத்தை புகுத்தியது. தமிழகத்தில் நடுநிலையான சிறந்த கல்வியாளர்களே இல்லையா? ஆனால் நடுநிலையான கல்வியாளர்கள் பள்ளி மாணவனின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு செயல்படுவார்களே தவிர, திராவிட சித்தாந்தத்தை மாணவனின் மூளையில் திணிக்கும் அடிமை வேலையை செய்ய மாட்டார்கள்.
இத்தகைய கல்வி சீரழிவு, குளறுபடிகளை செய்வதால் தேசிய அளவில் தமிழக மாணவர்களின் கல்வித்தரம் 27வது இடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது. உயர்கல்வி படிக்கும் மாணவர்களில் பெரும்பாலோர் கணக்கில் தடுமாறுகிறார்கள் என்பது ஒருபுறம் என்றால். தமிழை எழுதிப் படிக்கத் திணறும் மாணவர்கள் நிறைந்திருப்பது இன்னொரு புறம்..
எனவே தமிழக அரசு பொருட்களை இலவசமாக கொடுத்து ஓட்டு வாங்குவது போல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஏராளமான பொருட்களை இலவசமாக வழங்குகிறது என்பதே உண்மை. ஆனால் அரசு பள்ளிகளில் அத்தியாவசியமான கட்டமைப்பு, சுத்தம் சுகாதாரம், பண்பாடு, நாகரிகம் பேணப்படுகிறாதா என்றால் இல்லை.
எந்த கல்வி நிறுவனத்தால் அவன் மேம்படுகிறானோ.. அதே பள்ளியின் நாற்காலி மேஜைககளை உடைத்து நொறுக்குவதை பார்க்கிறோம். இது நாகரிகமான செயலா?
எனவே ஏழைகள் வாழ்க்கை மேம்பட இலவசங்கள் உதவுகின்றன. மாணவர்கள் கல்வித்தரம், திறமை உயர, தேவையான பொறுப்புணர்வு வளர தேவையான மாற்றங்களைச் சிந்தித்து செயல்படுத்த வேண்டும். எந்த கொள்கை முடிவும் அரசியல்வாதிகள் அறிவிப்பது அரசியல் தான். கல்வி சம்பந்தப்பட்டவற்றை கல்வியாளர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் தான் செய்ய வேண்டும்.
அரசியல் எல்லாவற்றிலும் மூக்கை நுழைப்பது அழிவுக்கு தான் கொண்டு செல்லும். எனவே தமிழ்நாடு மாணவர்கள் கல்வித்தரம் உயர, பல்வேறு கல்வியாளர்கள் ஆலோசித்து ஒருமித்த கருத்துடன் தயாரித்து வழங்கியதும், மத்திய அரசு அறிவித்துள்ளதுமான தாய் மொழி கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் புதிய கல்விக் கொள்கையை ஏற்று நடைமுறைபடுத்த வேண்டும் என இந்து இளைஞர் முன்னணி கேட்டுக்கொள்கிறது!
(கட்டுரையாளர் இந்து இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர்)