அதிமுக பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, என்னை ஒருமனதாக தேர்வு செய்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி என்று தெரிவித்தார்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நாளை (மார்ச் 29) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று இரு நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக பொதுச் செயலாளராக நான் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அறிவித்துள்ளனர். என்னை அதிமுக பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுத்த நிர்வாகிகள் மற்றுதொண்டர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதரவோடு பொதுச் செயலாளர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன். எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை நிறைவேற்றுவேன்” என்று கூறினார்.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றபின் எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர். அதனை தொடர்ந்து மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்திலும் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.