- Ads -
Home அரசியல் குறைந்த விலை, அதிக கையூட்டு; கரும்பு விவசாயிகள் துயர் துடைக்க வேண்டும்: அன்புமணி இராமதாஸ்!

குறைந்த விலை, அதிக கையூட்டு; கரும்பு விவசாயிகள் துயர் துடைக்க வேண்டும்: அன்புமணி இராமதாஸ்!

குறைந்த விலை, அதிக கையூட்டு, வாங்க மறுக்கும் அதிகாரிகள் - பொங்கல் கரும்பு விவசாயிகளின் துயரைத் துடைக்க வேண்டும்!

#image_title
#image_title

குறைந்த விலை, அதிக கையூட்டு, வாங்க மறுக்கும் அதிகாரிகள் – பொங்கல் கரும்பு விவசாயிகளின் துயரைத் துடைக்க வேண்டும்! : அன்புமணி இராமதாஸ்

பொங்கல் கரும்பு இனிப்பானதாக இருந்தாலும், அதை கொள்முதல் செய்வதில் நிகழும் முறைகேடுகள், கையூட்டு ஆகியவற்றால் கரும்பு விவசாயிகளுக்கு கசப்பு தான் பரிசாகக் கிடைத்திருக்கிறது. பொங்கல் கரும்பு சாகுபடியில் உழவர்களுக்கு குறைந்த லாபமே கிடைக்கும் நிலையில், அதையும் பறிக்கும் வகையில் கையூட்டு கொடுத்தால் தான் கொள்முதல் செய்வோம் என அதிகாரிகள் கூறுவது கண்டிக்கத்தக்கது.

பொங்கல் திருநாளையொட்டி அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் 2.20 கோடி குடும்பங்களுக்கு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய ரூ.113 மதிப்புள்ள பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக் கடைகள் வாயிலாக பொங்கல் பரிசுத் தொகுப்புகள் இன்று முதல் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், பரிசுத் தொகுப்புக்குத் தேவையான செங்கரும்புகளை கொள்முதல் செய்வதில் நடைபெறும் முறைகேடுகள் உழவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒரு முழு கரும்புக்கான கொள்முதல் விலையாக போக்குவரத்து செலவினம், வெட்டு கூலி, கட்டுக்கட்டும் கூலி, ஏற்றி இறக்கும் செலவு ஆகியவற்றையும் சேர்த்து ரூ.35 வழங்கப்படும் என்று தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  பிரபல பின்னணிப் பாடகர் பி. ஜெயசந்திரன் காலமானார்!

ஆனால், உழவர்களுக்கு ஒரு முழு கரும்புக்கு ஊர்களைப் பொறுத்து ரூ.22 முதல் ரூ.26 வரை மட்டும் தான் வழங்கப்படுகிறது. கரும்புக்கான வெட்டுக் கூலி, கட்டுக்கட்டும் செலவு ஆகியவற்றை உழவர்கள் தான் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனாலும் அவர்களின் கரும்புக்குக்கு உரிய விலை வழங்கப்படுவதில்லை. அதுமட்டுமின்றி, அனைத்து விவசாயிகளின் கரும்புகளையும் அதிகாரிகள் கொள்முதல் செய்வதில்லை. கமிஷன் என்ற பெயரில் கையூட்டு கொடுப்பவர்களிடமிருந்து மட்டும் தான் செங்கரும்புகள் கொள்முதல் செய்யப்படுவதாகவும், அதற்காக ஒரு சரக்குந்தில் ஏற்றப்படும் கரும்புக்கு ரூ.10 ஆயிரம் வரை கையூட்டு வாங்கப்படுவதாகவும் உழவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக உழவர் ஒருவர் வேதனையுடன் புலம்பும் ஒலிப்பதிவு சமூக வலைத்தளங்களில் கடந்த இரு நாட்களாக வேகமாக பரவி வருகிறது.

செங்கரும்பு சாகுபடி என்பது மிகவும் எளிதான ஒன்றல்ல. ஒரு ஏக்கரில் நடுவதற்கான செங்கரும்பு விதைப் புற்களுக்காக மட்டும் ரூ.30 ஆயிரம் செலவாகும். கரும்பு வளர, வளர அதன் தோகையை உரிப்பது, மழைக்காலங்களில் கரும்பு சாய்ந்தால் அதை நிமிர்த்து வைப்பது உள்ளிட்ட அனைத்துக்கும் சேர்த்து ஏக்கருக்கு ரூ.2.50 லட்சம் வரை செலவாகும் என்று உழவர்கள் கூறுகின்றனர். அவ்வாறு வளர்த்தெடுக்கப்படும் கரும்புகளை அரசு நல்ல விலை கொடுத்து வாங்கினால் கூட, விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.3.25 லட்சம் மட்டும் தான் கிடைக்கும். 10 மாதங்களுக்கு உழவர்கள் அரும்பாடு பட்டால் தான் உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.75,000 மட்டும் தான் லாபம் கிடைக்கும். அதுவும் கூட செங்கரும்பை கொள்முதல் செய்ய உழவர்கள் மறுத்து விட்டால், உழவர்களுக்கு ரூ.2.5 லட்சம் இழப்பு தான் ஏற்படும்.

ALSO READ:  ஒப்புமை இல்லா உயர்வு! பட்டொளி வீசும் பாரதத்தின் புகழ்!

பொங்கல் திருநாளுக்கு படைப்பதைத் தவிர, செங்கரும்புக்கு வேறு எந்த பயன்பாடும் கிடையாது. தமிழ்நாட்டில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலான குடும்பங்களுக்கு அரசு சார்பில் இலவசமாக செங்கரும்பு வழங்கப்படும் நிலையில், வெளிச்சந்தையிலிருந்து பொதுமக்கள் செங்கரும்பு வாங்கும் வழக்கம் முற்றிலுமாக ஒழிந்து விட்டது. பொங்கல் திருநாளுக்கு இன்னும் 6 நாட்கள் மட்டும் தான் உள்ளன. அதற்குள்ளாக செங்கரும்புகளை தமிழக அரசு கொள்முதல் செய்யாவிட்டால், உழவர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாவதுடன், மீள முடியாத கடன் சுமையில் சிக்கிக் கொள்வார்கள். உணவு படைக்கும் கடவுள்களான விவசாயிகளுக்கு அப்படி ஒரு நிலை ஏற்படுவதை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

தமிழ்நாட்டில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க தமிழக அரசை நம்பித் தான் உழவர்கள் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர். அவற்றை கொள்முதல் செய்யாவிட்டால் உழவர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாவார்கள். எனவே, பொங்கல் திருநாளுக்குள் தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்காமலும், கையூட்டு எதிர்பார்க்காமலும் உழவர்களிடமிருந்து செங்கரும்பை முழுமையாக கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

ALSO READ:  தமிழகத்தைப் பற்றிய கவலைகள்; ஒட்டுமொத்தமாக வெளியிட்ட ஆளுநர் ரவி!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version