
தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக திமுக.,வுக்கும், பாஜக.,வுக்கும் இடையே இப்போது கடுமையான வார்த்தை மோதல்கள் ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளும் மாறி மாறி விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன.
இந்நிலையில், கல்வியில் தமிழகம் சிறந்து விளங்கும் நிலையில், சில ஏகாதிபத்திய மனங்களின் வசதிக்காக ஏன் ஏதாவது ஒன்றை திணிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், திமுக.,வினர் சிபிஎஸ்இ பள்ளிகள் நடத்தி அதில் இந்தி மொழி மூன்றாம் மொழியாகக் கற்றுக் கொடுப்பது பற்றி பாஜக., விமர்சனம் செய்து வரும் நிலையில், “தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுக்கப் படுகிறதென்றால் அதற்குக் காரணம், மத்திய அரசின் கல்விக் கொள்கையே தவிர, திமுக.,வினரோ வேறு எந்தக் கட்சியினரோ அல்ல” என்று கூறியுள்ளார் ஸ்டாலின். இதற்கு பாஜக.,வினர் பதில் கொடுத்து வருகின்றனர்.
தமிழக அமைச்சர் தியாகராஜன் அளித்த பேட்டி ஒன்றில், ‘ இரு மொழிக் கொள்கையால், கல்வியில் மிகச்சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. மும்மொழிக் கொள்கை உள்ள மாநிலங்களில் எத்தனை குழந்தைகளுக்கு 3 மொழிகள் தெரியும். இரு மொழிக் கொள்கை அமலில் தமிழகத்தில் உள்ள கல்வி முறையை விட சிறந்தது என மும்மொழிக் கொள்கை அமலில் உள்ள மாநிலங்கள் ஏதாவது ஒன்றை கூற முடியுமா’என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனை பகிர்ந்துள்ள முதல்வர் ஸ்டாலின், தமது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது:
நமது நிலைப்பாட்டை அமைச்சர் தெளிவாக விளக்கி உள்ளார். தமிழகம் கல்வியில் சிறந்து விளங்கும்போது, ஒரு சில ஏகாதிபத்திய மனங்களின் வசதிக்காக ஏன் ஏதாவது ஒன்றை திணிக்க வேண்டும்’ என ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்நிலையில், ஸ்டாலினின் கேள்விக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக., மூத்த தலைவர் ஹெச். ராஜா, மத்திய அரசின் கல்விக் கொள்கையை ஏற்கவில்லை என்றால், திமுக.,வினர் ஏன் சிபிஎஸ்இ பள்ளி நடத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவரது சமூகத் தளப் பதிவில் கூறியுள்ளதாவது…
தமிழ்நாட்டில் CBSE பள்ளிகளில் ஹிந்தி கற்றுத்தரப்படுகிறது என்றால் அதற்கு காரணம் மத்திய அரசின் கல்விக் கொள்கையே தவிர திமுகவினரோ வேறு எந்த கட்சியினரோ அல்ல என்கிறார் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்…
மத்திய அரசின் கல்விக் கொள்கையை ஏற்காத தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறகு ஏன்? எதற்காக? எப்படி? தனது மகள் திருமதி.செந்தாமரை சபரீசன் அவர்கள் சன்ஷைன் மாண்டசோரி ஸ்கூல் (CBSE) நடத்த அனுமதி அளித்தார்?
உண்மையிலேயே தமிழகத்தில் இருமொழி கல்விக் கொள்கை மட்டுமே அமலில் இருக்க வேண்டும் என்பதில் திமுகவின் முன்னணி தலைவர்கள் உறுதியாக இருந்தால் அவர்கள் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளை திமுக தலைவர் திரு.மு.கருணாநிதி அவர்கள் முன்மொழிந்த சமச்சீர் கல்வி பள்ளிகளாக உருவாக்காமல் மும்மொழி கற்பிக்கும் CBSE பள்ளிகளாக உருவாக்கியது ஏன்?
பதிலளிப்பீர்களா Chief Minister of Tamil Nadu திரு. M. K. Stalin அவர்களே?
ஹிந்தி எதிர்ப்பு என்பது திமுகவின் அரசியல் கோஷம்!
தமிழ் பற்று என்பது திமுகவின் அரசியல் வேஷம்!
அரசியலுக்காக மும்மொழி எதிர்ப்பு?
ஆதாயத்திற்காக CBSE பள்ளிகள்!!
இந்த பித்தலாட்டத்திற்கு பெயர்தான் “திராவிட மாடல்”