
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் மூன்று மொழி சொல்லிக் கொடுக்க கூடிய பள்ளியில் தான் படிக்கிறார், அவரது மகன் இந்தியக் குடிமகனா? அல்லது அமெரிக்கக் குடிமகனா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், எனது இரு மகன்களின் பெயர் பழனி மற்றும் வேல் என்பதுடன், அவர்கள் LKG முதல் பட்டப்படிப்பு வரையில் இருமொழிக் கொள்கையில்தான் பயின்றார்கள் என அண்ணாமலைக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதில் சொல்லியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், “அண்ணன் பிடிஆர் பழனிவேல்ராஜன் அந்த இருமொழிகள் என்ன என்று விளக்கியிருக்க வேண்டும்!” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
முன்னதாக, நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை முன்வைத்து, மத்திய அரசைக் கண்டித்து மதுரை டிஎம் கோர்ட் பகுதியில் திமுக., மதுரை மாநகர் மாவட்டம் சார்பாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில் தமிழக மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர், “நமது எதிரிகளான பாஜக அரசின் அமைச்சர் முன் வைக்கும் வாதம் குறித்து பேச விரும்புகிறேன். இந்திரா காந்தி ஆட்சியில் தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது. பிறகு திருந்த மசோதாவாக நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. NEP 2020, எந்தவித சட்ட மசோதாவும் நிறைவேற்றாமல், விருப்ப மசோதாவாக நிதியை நிறுத்தி வைத்து அடாவடி செய்கின்றனர்.
1968க்கு பிறகு கொண்டு வந்த கல்விக் கொள்கையில் தென் மாநில மொழியைக் கற்கவேண்டும் என்று சிபாரிசு சொன்னார்கள். குறிப்பாக ஆசிரியர்கள் நியமிக்க முடியாத சூழல் நிலவியது, இந்தி பேசாத மாநிலங்களில் அது தோல்வி என்று 20 ஆண்டுகளில் அறிந்து. உத்திர பிரதேசத்தில் கூட ஒருமொழிக் கொள்கையைகூட நிறைவேற்ற முடியாமல் பிஎம்ஸ்ரீ நிதியை நிறுத்தி வைத்துவிட்டு தெருவில் ரவுடி பேசுவது போல் பேசி வருகின்றனர். LKG மாணவன், உயர்கல்வி பயின்ற மாணவனுக்கு கற்பிப்பது போன்று உள்ளது. புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப் படுத்துவது இன்றைக்கு சாத்தியமே இல்லை, அதற்கான நிதி உட்கட்டமைப்பு என்பது இல்லை, அனைவருக்கும் ஒரே கல்வியைக் கொடுக்க வேண்டும் என்ற முடிவால் தமிழ்நாடு சிறந்த முறையில் கல்வியில் சிறந்து காணப்படுகிறது.
அதைவிடுத்து 34 அமைச்சர்கள் மகன்கள் எங்கே படிக்கிறார்கள் என்று தனிப்பட்ட கேள்வியாக மாற்றி வருகின்றார்கள், விருப்பம் உள்ளவர்கள் தனியாக கூடுதல் வகுப்பு சென்று படிக்கட்டும். தமிழ்நாட்டில் 8 கோடி பேருக்கு சேர்த்த கல்விதான் சிறந்தது. பாஜக பிரதிநிதி ஒருவர் எனது மகன்கள் எந்த மொழியில் பயின்றார்கள் என்று கேட்கிறார்கள்., எனது இரு மகன்களின் பெயர் பழனி மற்றும் வேல் என்பதுடன் அவர்கள் LKG முதல் பட்டப்படிப்பு வரையில் இருமொழிக் கொள்கையில் தான் பயின்று வந்துள்ளார்கள்.
எங்காவது ஒரு இடத்தில் மும்மொழிக் கொள்கையில் பயின்று வெற்றி பெற்ற மாணவர்கள் கொண்ட சமுதாயத்தை உருவாக்கிய பிறகு நாங்கள் விவாதத்திற்கு வருகிறோம், அதுவரை இரு மொழிக் கொள்கைதான் தமிழ்நாட்டில்” என்று பேசினார்.
இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அண்ணாமலை வெளியிட்ட சமூகத்தளப் பதிவில்,
நேற்று நான் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கேட்ட கேள்விக்கு, அமைச்சர் திரு பிடிஆர் பழனிவேல்ராஜன் அவர்கள் அளித்திருக்கும் பதிலைக் கேட்டேன். தனது இரு மகன்களும் இரு மொழிக் கொள்கையில்தான் படித்தார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால், அந்த இரு மொழிகள் எவை என்பதை, அண்ணன் திரு. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்ல மறந்துவிட்டார். அவர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள், முதல் மொழி: ஆங்கிலம் இரண்டாம் மொழி: பிரெஞ்சு/ ஸ்பானிஷ் இது தான் உங்க இரு மொழிக் கொள்கையா? வெளங்கிடும்
தமிழ் மற்றும் ஆங்கில மொழியுடன், மூன்றாவதாக ஒரு இந்திய மொழியோ, உயர்நிலை வகுப்புகளில் ஒரு வெளிநாட்டு மொழியோ, நமது அரசுப்பள்ளி மாணவர்கள் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துங்கள் என்று தானே கேட்கிறோம். அதைத் தடுக்க இத்தனை நாடகங்கள் ஏன்? அண்ணன் பிடிஆர் அவர்களது இரு மகன்களும், வாழ்க்கையில் சிறந்த உயரத்தை எட்ட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அவர்களுக்குக் கிடைத்த பல மொழிகள் கற்கும் வாய்ப்பை, நமது அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளியவர்களின் குழந்தைகளுக்கும் வழங்குங்கள் என்று தான் கேட்கிறோம். – என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஏற்கெனவே, திமுக.,வினர் தங்கள் குடும்பத்துக்கு ஒரு கொள்கை, ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு வேறொரு கொள்கை என இரட்டை வேடம் போட்டு செயல்பட்டு வருகின்றனர். இதுவா சமூக நீதி? நாம் சமுக நீதியுடன் சம கல்வியை கோருகிறோம் என்று குறிப்பிட்டு கருத்துகளை முன்வைத்து வருகிறார் அண்ணாமலை.