ஜெயந்தி நடராஜன் – அரசியலில் இருந்து ஓய்வு முடிவு?

jayanthi_natarajan சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று விலகியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் முடிவில் உள்ளதாகக் கூறப்படுகிறது. கட்சியில் இருந்து விலகல் முடிவை அறிவித்த அவர், காங்கிரஸ் கட்சி தலைமை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறினார். கட்சியில் தம்மை ஒரங்கட்டுவதாகவும், அமைச்சக விவகாரங்களில் தலையிட்டதாக ராகுல் காந்தி மீதும் அவர் புகார் கூறியுள்ளார். விலகல் முடிவை அறிவித்த அவர், எந்தக் கட்சியிலும் சேரமாட்டேன் என்றும் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேருவது பற்றி மறுபரிசீலனை செய்ய மாட்டேன் என்றும் கூறியுள்ளார். இதனால் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் முடிவுக்கு வந்துள்ளதாக விமர்சனம் முன் வைக்கப்படுகிறது. முந்தைய ஐ.மு.கூட்டணி அரசில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவர் ஜெயந்தி நடராஜன். கடந்த 2013 டிசம்பரில் திடீரென பதவி விலகினார். நானே தான் ராஜினாமா செய்கிறேன், எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்றும் அப்போது அவர் கூறியிருந்தார். கட்சிப் பணிகளில் ஈடுபட வசதியாக அவர் ராஜினாமா செய்ததாக காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்பட்டது. ஆனால், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, புதிய திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் துறையிடம் ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறினார். இது, அப்போது பலரின் புருவத்தை உயர்த்த வைத்தது. ஜெயந்தி நடராஜன் ராஜினாமா பின்னணியில் அவரது அமைச்சகத்தில் நிலவும் தாமதத்தைத் தவிர்க்கவும், செயல்படும் நிலையை விரைவாக்கவும் ராகுல் காந்தியின் திட்ட நோக்கமாக விளம்பரப் படுத்தப் பட்டது. இவ்வாறு, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் ஜெயந்தி நடராஜன் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதன் பின்னர் கட்சி செயல்பாடுகளிலிருந்து அவர் ஓரங்கட்டப்பட்டார். இந்நிலையில், அவர் கடந்த ஆண்டு நவம்பரில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில் “நான் ஏன் அமைச்சர் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டேன் என்பதற்கான காரணம் இன்று வரை எனக்குத் தெரியாது” என குறிப்பிட்டுள்ளார். இதுவே இப்போது ஒரு முரண்பாடான நிலையை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. தற்போது கட்சியில் இருந்து விலகுவதாக தான் எடுத்த முடிவுக்கு தேசியத் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே காரணம் என்றும் மாநில நிர்வாகிகளுடன் எந்த மனக்கசப்பும் இல்லை என்றும் அவர் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அவர் முன்னர் எழுதிய கடிதத்திலும், 30 ஆண்டு காலமாக எனது களங்கமற்ற அரசியல் வாழ்க்கைக்கும், என் குடும்பப் பெருமைக்கும் ஊறு விளைவிப்பதுபோல் ஊடகங்களில் என் மீது விமர்சனங்கள் எழ மேலிட நெருக்கடிக்கு நான் வளைந்து கொடுக்காததே காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் திட்டமிட்டு தம்மைப் பற்றிய அவதூறுகள் ஊடகங்களில் பரப்பப்பட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளார். ஜெயந்தி நடராஜனுக்கு பாரம்பரிய குடும்பப் பின்னணி உண்டு. முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தின் பேத்தியான இவர், பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். வழக்குரைஞரான இவர், 1986, 1992 ஆம் ஆண்டுகளில் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். ஜி.கே.மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய போது தனது ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மூப்பனாரின் த.மா.கா., கட்சியில் இணைந்தார். 1997 ஆம் ஆண்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜ்யசபா உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தபோது, சோனியா காந்தியால் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். 2011 ஜூலையில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக ஜெய்ராம் ரமேஸுக்கு பதிலாக நியமிக்கப்பட்டார். இப்போது காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகியுள்ள இவர், ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் அல்லது பாஜக.,வில் இணைவார் என்று கூறப்பட்டது. ஆனால் தான் எந்தக் கட்சியிலும் இணையப் போவதில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். நான் ஒரு கசப்பான சூழலில் இருக்கிறேன். காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்த என்னை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதித்து, புறக்கணித்துள்ளது. அந்தக் கசப்புணர்வில் இருந்து நான் விடுபட சற்று கால அவகாசம் வேண்டும் என்று இவர் கூறியுள்ளதால், பின்னாளில் வேறு கட்சியில் இணைந்து செயல்படவும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும் தற்போதைய அவர் பேச்சில் இருந்து, தாம் அரசியல் களத்தில் இருந்து ஓய்வு பெறும் முடிவிலேயே இருப்பது போல் வெளிக்காட்டியுள்ளது தெரிகிறது.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...