December 6, 2021, 5:06 am
More

  குட்கா ஆலை விவகாரம்: தமிழர்களின் உயிரோடு விளையாடும் திமுக., அதிமுக., கட்சிகள்!

  gutkha - 1

  சென்னை: கோவை குட்கா ஆலை விவகாரத்தில், தமிழர்களின் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் திமுக., மற்றும் அதிமுக., இரண்டு கட்சிகளும் என்கிறார்கள் அப்பகுதியினர். காரணம், இதில் அமைச்சர்கள், ஆளும் தரப்பினர், காவல் துறை உயரதிகாரி உள்ளிட்ட காவல் துறையினர், சுகாதாரத் துறை என பலரையும் குற்றம் சாட்டி திமுக., கூறிக் கொண்டிருக்க, இந்த விவகாரத்தில் முக்கியப் புள்ளியே உள்ளூர் திமுக.,காரர்கள்தான் என்று காவல்துறை கட்டம் கட்டியிருக்கிறது.

  இந்த விவகாரம் குறித்து திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:-
  கோவை கண்ணம்பாளையத்தில் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையைக் கண்டுபிடித்த விவகாரத்தில், ஒளிவுமறைவற்ற வெளிப்படையான சோதனை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தி அறவழிப்போராட்டம் நடத்திய திமுக.,வினர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பொய் வழக்குப்பதிவு செய்து, கோவை மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக்கை கைது செய்ய தேடுதல்வேட்டை நடத்திக் கொண்டிருப்பதற்கும் அதிமுக., அரசுக்கு திமுக., சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  குட்கா ஊழலில் சிக்கிக் கொண்டுள்ள அதிமுக., அமைச்சரை காப்பாற்றுவதோடு, தமிழக டிஜிபி., தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும், கண்ணம்பாளையம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் தளபதி முருகேசன், திமுக., ஒன்றிய செயலாளர் செல்வராஜ், இளைஞரணியை சேர்ந்த சுரேஷ், சண்முகம் உள்ளிட்ட 7 பேரை நள்ளிரவில் கைதுசெய்து சிறையில் அடைத்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளையில், குட்கா வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் ஈரம் காய்வதற்குள், அந்த சி.பி.ஐ. விசாரணையை சீர்குலைத்து திசைதிருப்பும் விதத்தில் இதுபோன்றதொரு அராஜக நடவடிக்கையை எடுக்க, கோவை காவல்துறையினருக்கு டிஜிபி., டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டிருப்பது நீதிமன்ற அவமதிப்பு மட்டுமல்ல, நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நடைபெற வேண்டிய சி.பி.ஐ. விசாரணைக்கான ஆதாரங்களையும், தடயங்களையும் அழிக்கும் முயற்சி.

  stalin - 2

  ஏற்கனவே, குட்கா விவகாரத்தில் வருமான வரித்துறை, தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் கொடுத்த கோப்புகள் காணவில்லை. ஊழலில் சம்பந்தப்பட்ட இன்னொரு டிஜிபி., ஓய்வுபெற அனுமதிக்கப்பட்டார். இப்போது குட்கா வழக்கிற்கு மிகவும் முக்கியமான ஆதாரமாகத் திகழும் இதுபோன்ற உற்பத்தி ஆலைகளில் நடத்தப்படும் சோதனைகளும், திட்டமிட்டு உண்மைகளை மறைக்க நடைபெறுகின்றன. தட்டிக்கேட்கும் பிரதான எதிர்கட்சி மீதே பொய் வழக்குப்போட்டு கைது செய்யும் அத்துமீறிய நடவடிக்கையில் அதிமுக., அரசும், அதன் டிஜிபி.,யும் ஈடுபடுவதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது, பொறுத்துக் கொள்ளவும் முடியாது.

  இதுபோன்று வழக்கு விசாரணையை முடக்க சூழ்ச்சி செய்வார்கள் என்பதால்தான் தீர்ப்பு வெளிவந்தவுடன் டிஜிபி.,யும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன். ஆகவே, அறவழியில் போராட்டம் நடத்திய திமுக.,வினர் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்பதோடு, கைது செய்யப்பட்ட திமுக.,வினர் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதுமட்டுமின்றி, தமிழக டிஜிபி., டி.கே.ராஜேந்திரன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகிய இருவரையும் உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். – என்று கூறியுள்ளார்

  அதே நேரம், இந்த விவகாரத்தில், திமுக.,வின் கை எப்படி உள்ளது என்பதை கோவை எஸ்.பி. தெளிவாகப் போட்டுடைக்கிறார். கோவை கண்ணம்பாளையத்தில் செயல்பட்டு வந்த சட்டவிரோத குட்கா ஆலைக்கு, திமுக-வின் முன்னாள் ஊராட்சி தலைவர் பலவகையில் உதவி செய்துள்ளதாக அவர் கூறுகிறார்.

  குட்கா ஆலை சோதனை, திமுக.,வினர் போராட்டம், திமுக.,வினர் கைது ஆகியவை குறித்து கோவை மாவட்ட எஸ்.பி மூர்த்தி இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ”ரகசிய தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டது. அன்றைய இரவே தடயவியல் சோதனையும் நடத்தப்பட்டது. வி.ஐ.பி என்ற பெயரில் குட்கா இருந்தது. மூலப்பொருள்கள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, மொத்தம் ரூ.75.5 லட்சம் மதிப்பிலான குட்கா போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

  ஆலை நிர்வாகம் பான் மாசலா, சுவீட் பாக்கு தயாரிக்க மட்டுமே உணவு பாதுகாப்புத் துறையிடம் அனுமதி பெற்றுள்ளது. ஆனால், குட்கா பொருள்களை தயாரித்து வந்தது சோதனையில் தெரியவந்தது. மேலும், திமுக-வைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் தளபதி முருகேசன் பொறுப்பில் இருந்த போதுதான், ஊராட்சியில் அமித் ஜெயினின் கட்டடத்திற்காகச் சொத்து வரி, குடிநீர் வரி ,தொழில் வரி போன்றவை பெறப்பட்டுள்ளது.

  அந்த ஆலையைத் தொடங்க ஊராட்சியில் முறையான அனுமதி பெறப்படவில்லை. இந்த முறைகேட்டில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அமித்ஜெயினுக்கு திமுக-வின் தளபதி முருகேசன் பல வகைகளில் உதவியுள்ளார். மேலும், இந்த ஆலையின் மாசு பெரிய பிரச்னை. இங்கு சோதனை நடத்தப்பட்ட வழக்கின் விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது. 20 போலீஸார் கொண்ட 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், ஓரு தனிப்படை, அமித் ஜெயினை பிடிக்க தில்லி விரைந்துள்ளது.

  இந்த வழக்கு ஆரம்ப நிலையில் இருக்கும்போதே, திமுக-வைச் சேர்ந்த தளபதி முருகேசன் உள்ளிட்டோர் உள்நோக்கத்துடன் போராட்டம் நடத்தினர். அரசு நிறுவனங்களில் இருப்பவர்கள், அதிகாரிகள் இந்த சட்டவிரோத குட்கா ஆலையுடன் தொடர்பில் இருந்தால் அவர்கள் மீதும் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
  ஆலையின் மேலாளர் ரகுராமை விசாரிக்கவுள்ளோம். போராட்டத்தில் ஈடுபட்ட திமுக-வினர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர் என்பது தவறு. அதிகாலையில் போராட்டம் நடத்திய திமுக-வினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கைதில் அரசியல் அழுத்தம் இல்லை. இந்த குட்கா ஆலையின் டீலர், ஏஜென்ஸி உள்ளிட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது” என்றார்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,107FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,798FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-