November 30, 2021, 2:44 am
More

  இருட்டு அறையில் முரட்டுக் குத்து: ஆபாசப் படங்களுக்கு எதிராக ராமதாஸ் போர்க்கொடி!

  தமிழ்நாட்டு திரையரங்குகளில் கடந்த வாரம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ என்ற தலைப்பிலான திரைப்படம் ஏற்படுத்தி வரும் பண்பாட்டு சீரழிவுகள் குறித்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றன.

  Iruttu Araiyil Murattu Kuththu Official Teaser Gautham Karthik Santhosh P Jayakumar 1 - 1

  திரைப்படங்கள் கலையாக இருக்க வேண்டும்: களையாக கூடாது – ஆபாசத்தை தடை செய்ய வேண்டும் என்று  பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில்  கேட்டுக் கொண்டுள்ளார்.

  இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

  தமிழ்நாட்டு திரையரங்குகளில் கடந்த வாரம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ என்ற தலைப்பிலான திரைப்படம் ஏற்படுத்தி வரும் பண்பாட்டு சீரழிவுகள் குறித்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றன.

  மக்களை மிக எளிதில் சென்றடைவதற்கான ஊடகமாக கருதப்படும் திரைப்படங்கள் சமூக சிக்கல்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மாறாக, அவர்களை மயக்குவதற்காக மலிவான ஆபாசங்களை திணிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

  ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ என்ற தலைப்பிலான திரைப்படம் வெளியானதுமே சமூக ஆர்வலர்கள் பலரும் என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, அந்தப் படத்தால் ஏற்பட்டுள்ள சமூக சீரழிவுகள் பற்றி விளக்கியதுடன், இதைக் கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையிலும், அந்தப் படத்தின் தலைப்பு வடிவமைக்கப்பட்டுள்ள விதத்தில் இருந்தும் அப்படம் எவ்வளவு மோசமான ஆபாசக் களஞ்சியமாக இருக்கும் என்பதை உணர முடிகிறது.

  அந்தப் படத்தைத் தயாரித்த நிறுவனமும், அதை இயக்கிய இயக்குனரும் இதே பாணியிலான ஓர் ஆபாசத் திரைப்படத்தை ஏற்கனவே தயாரித்து வெளியிட்டிருக் கிறார்கள். முதல் படத்தின் வெற்றியும், வசூலும் அவர்களை மீண்டும் அதேபோன்ற படத்தைத் தயாரிக்கத் தூண்டியுள்ளது. இந்தப் படமும் வெற்றி பெற்றால், அதுவே வெற்றிக்கான சூத்திரமாக மாறி, இன்னும் பல படங்களை அதன் இயக்குனரும், தயாரிப்பாளரும் தயாரிக்கக்கூடும். இதே வழியை மற்ற இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் பின்பற்றத் தொடங்கினால் இளைஞர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதை நினைக்கவே அச்சமாக உள்ளது.

  தமிழகம் இப்போது மிகவும் கடினமான காலக்கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது. நீட் தேர்வு, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி பாசன மாவட்டங்களை சீரழிக்கும் வகையிலான மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், நியூட்ரினோ ஆய்வு மையம், ஸ்டெர்லைட் ஆலை என மத்திய அரசால் திணிக்கப்படும் அழிவுத் திட்டங்கள், அநீதிகள் ஆகியவற்றுக்கு எதிராக தமிழக மக்களும், இளைஞர்களும் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

  இந்த உணர்வுகளை மழுங்கடிக்கும் வகையில் இதுபோன்ற ஆபாசப் படங்கள் வெளியிடப்படுவதை அனுமதிக்க முடியாது. மக்கள் சிந்தித்து விடக் கூடாது என்ற தீய நோக்கத்துடன் மதுவை வெள்ளமாக ஓட விட்டும், மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசங்களை வாரி வழங்கியும் சீரழித்துக் கொண்டிருக்கும் தமிழக ஆட்சியாளர்களுக்கு இன்னொரு ஆயுதமாகவே இது போன்ற திரைப்படங்கள் அமையும். இது மிகவும் ஆபத்தான கலாச்சாரம்; இது தடுக்கப்பட வேண்டும்.

  திரைப்படங்கள் மிகவும் சிறப்பான கலை வடிவம் ஆகும். அதை சமுதாயத்தைக் கெடுக்கும் களையாக மாற்றிவிடக்கூடாது. இதுபோன்ற திரைப்படங்களை திரைப்பட தணிக்கைச் சான்று வாரியம் எவ்வாறு அனுமதிக்கிறது? பெண்மையை இழிவு படுத்தும் இத்தகைய படங்களுக்கு எதிராக போராட்டம் நடத்த மகளிர் அமைப்புகள் முன்வராதது ஏன்? ஆகியவை தான் விடை தெரியாத வினாக்களாக உறுத்துகின்றன.

  பாட்டாளி மக்கள் கட்சியோ, நானோ திரைத்துறைக்கு எதிரிகள் அல்ல. நல்ல திரைப்படங்களை நான் தொடர்ந்து பாராட்டி வருகிறேன். சில மாதங்களுக்கு முன் ‘அப்பா’ என்ற படத்தைப் பார்த்தேன். கல்வி எந்த அளவுக்கு சுகமானதாகவும், சுமையற்றதாகவும், விளையாட்டு மற்றும் நீதிபோதனையை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கையை விளக்கும் வகையில் இருந்தது.

  அதேபோல், நான் பார்த்த தர்மதுரை என்ற திரைப்படம் மருத்துவர்கள் எந்த அளவுக்கு மக்கள் நலன் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற பாடத்தை வழங்கியது. இதற்காக அப்படங்களின் இயக்குனர்கள், மற்றும் தயாரிப்பாளர்களை பாராட்டினேன். அங்காடித்தெரு, நீர்ப்பறவை, வழக்கு எண். 18/9, விசாரணை போன்ற மேலும் பல நல்ல திரைப்படங்கள் வெளிவந்து திரையுலகம் குறித்த நம்பிக்கையை விதைத்தன. மேற்கண்ட அத்தனைப் படங்களும் கூட்டாக ஏற்படுத்திய நம்பிக்கையை சிதைக்கும் வகையில் இந்த ஒரு படம் வெளியாகிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. இத்தகைய சூழல் மாற்றப்பட வேண்டும்.

  மது, புகை மற்றும் பிற போதைப் பொருட்கள் ஏற்படுத்தும் சமூகச் சீரழிவுகளை விட மோசமான சீர்கேட்டை இதுபோன்ற ஒற்றைத் திரைப்படம் ஏற்படுத்தி விடும். இத்தகைய மலிவான, அருவருக்கத்தக்க ஆபாசப் படங்களை பார்ப்பதிலிருந்து இளைஞர்களும், மாணவர்களும், தமிழ் சமுதாயத்தின் பிற அங்கங்களும் விலகி இருக்க வேண்டும். கருத்து சுதந்திரம் என்ற போர்வைக்குள் புதைந்து கொள்ளாமல் தமிழகத்தில் பண்பாட்டு சீரழிவை ஏற்படுத்தும் இந்தத் திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்… என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,106FansLike
  369FollowersFollow
  46FollowersFollow
  74FollowersFollow
  1,756FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-