சேலம் 8 வழிச் சாலைக்கு எதிராக போராட்டம்! அறிவித்தார் சீமான்!

சேலம்- சென்னை 8 வழி சாலை திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னையில் இருந்து சேலத்துக்கு 277 கி.மீ., தொலைவுக்கு பசுமை வழி சாலை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இதை அடுத்து, இந்தத் திட்டத்துக்கான நிலம் கையகப் படுத்தும் நடவடிக்கைகள் முறையாக அறிவிக்கை வெளியிடப் பட்டு தொடங்கப் பட்டுள்ளன. இந்நிலையில், தங்கள் நிலஙக்ளை இந்தத் திட்டத்துக்காக கையகப் படுத்துவதை விவசாயிகள் சிலர் எதிர்த்து வருகின்றனர். இந்தத் திட்டத்தால் தங்கள் விளை நிலத்துக்கான விலை கிடைக்காது என்ற எண்ணத்தில் போராட்டத்தில் பலர் குதித்துள்ள நிலையில், நேற்று விவசாயி ஒருவர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனிடையே இன்று காலை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின் போது, போலீஸார் மீது கண்மூடித்தனமாக கொலை வெறித்தாக்குதல் நடத்திய வழக்கில் சீமான் சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், சர்வதேச விமான நிலையங்கள் கூட குறைவான பரப்பளவில் செயல் பட்டுவரும் நிலையில் சென்னை – சேலம் 8 வழி சாலைக்காக 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவது தேவையற்ற ஒன்று. இதற்காக நாம் தமிழர் சார்பில் போராட்டம் நடத்தப் படும் என்று கூறினார்.

சேலம் 8 வழி சாலை திட்டம் குறித்து தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி, போராட்டத்தை தூண்டிவிடும் நபர்கள் குறித்து அரசு எச்சரித்து கைது நடவடிக்கைகளைத் துவக்கியுள்ளது. இந்நிலையில் சீமான் தாம் இந்தத் திட்டத்தை எதிர்த்துப் போராடப் போவதாக அறிவித்துள்ளார்.