திட்டுறதுதான் திட்டுறீங்க… கொஞ்சம் கண்ணியமா திட்டுங்களேன்! : சுஷ்மா ஸ்வராஜ்

விமர்சிப்பதுதான் விமர்சிக்கிறீர்கள் கொஞ்சம் கண்ணியமாக விமர்சிக்கலாமே..! நல்ல மொழியில் விமர்சிக்கலாமே என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மத்திய அரசையும் பாஜக.,வையும், பாஜக.,வில் உள்ளோரையும் மிக மோசமான மொழிகளால் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் என்ற பெயரில் திட்டித் தீர்ப்பது பலருக்கு வாடிக்கையாக இருக்கிறது. இதற்கு அரசியல் ரீதியான தூண்டுதல்கள் ஒரு காரணமாக இருக்கலாம். மேலும், அவ்வாறு விமர்சிப்பவர்கள் குறித்து எந்தவித எதிர் நடவடிக்கையும், அல்லது சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் கடந்து போவதும் ஒரு காரணமாக இருக்கிறது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், “ஜனநாயக நாட்டில் கருத்து வேறுபாடு இருப்பது இயற்கை. கருத்து வேறுபாடுகளை மோசமான மொழியில் விமர்சனம் செய்யாமல் கண்ணியமாக விமர்சனம் செய்தால் பயனுள்ளதாக இருக்கும்” என தனது டிவிட்டர் பக்கத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

இந்தி மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் தனது வேண்டுகோளை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அவரது பதிவுக்கு பதில் கொடுத்திருப்பவர்களும் கூட மேலும் மோசமான மொழிகளில் பதிவிட்டிருக்கின்றனர். ஒருவர், காங்கிரஸின் திவ்யா ஸ்பந்தனா என்ற குத்து ரம்யா குறித்தும் அவரது பதிவுகள், வீடியோக்கள் குறித்தும் குறிப்பிட்டு, அவை போலி அக்கவுண்ட்கள் மூலம் வந்த பதிவுகள் அல்ல, திவ்யாவின் சொந்த அக்கவுண்ட் பதிவுகள்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.