வைகோவை காலி செய்ய சீமான் எடுத்துள்ள அஸ்திரம்!

ஸ்டாலினுக்குப் பின்னர் திமுக., வைகோ வசம்; அதற்கான வேலைகளை தொடங்கிவிட்டார்கள்! – இதுதான், சமூக வலைத்தளங்களின் தற்போது பரப்பப் படும் செய்தி. இதனைப் பரப்புபவர்கள், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமானின் சொல்படி கேட்கும் தங்கத் தம்பிகள்!

திமுக.,வில் இருந்த வைகோ.,வை இப்படியே விட்டால் கட்சியை கபளீகரம் செய்துவிடுவார், தனது வாரிசுகளுக்கு ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவார் என்ற  ‘நல்ல’ எண்ணத்தின்  காரணத்தால், வைகோ மீது கொலைப்பழி சுமத்தி கட்சியை விட்டு வெளியேற்றினார் திமுக., தலைவர் கருணாநிதி. பின்னாளில் தன் வாரிசுகள் என்பதில் வாரிசு என்ற ஒன்றை மட்டும் கொண்டு, மு.க.அழகிரியை வேண்டாத வாரிசு ஆக்கிக் கொண்டு, மு.க.ஸ்டாலினை விரும்பும் வாரிசு ஆக்கிக் கொண்டு,  மகன் ஸ்டாலினுக்காக இன்னொரு மகன் அழகிரியை ஓரம் கட்ட அவர் மீதும் கொலைப் பழி சுமத்தினார் கருணாநிதி.

இப்படி ஸ்டாலின் என்ற ஒற்றை மகனுக்காக அனைத்தையும் தியாகம் செய்து, கட்சியை கெட்டியாக வளைத்து வைத்திருக்கும் கருணாநிதி மீது, அண்மைக் காலமாக வைகோ.,வுக்கு தாய் வீட்டுப் பாசம் பொங்கியிருக்கிறது. உடல் நலம் சரியின்றி ஓய்வில் இருக்கும் கருணாநிதியை வீடு தேடிச் சென்று பாசப் பிணைப்புடன் கண்ணீர் மல்க நெஞ்சத்தில் இடம் இருக்கிறது என்றவாறு பார்த்து வருகிறார் வைகோ. திமுக.,வை ஸ்டாலின் மற்றும் ஸ்டாலின் வாரிசுகளுக்கே என்று பட்டா போட்டு எழுதிக் கொடுத்திருக்கிறாரோ என்னவோ?

மு.க.அழகிரி வீட்டு வாசலில் வந்து, தன் குடும்பம் குழந்தைகள் மகன்கள் இங்கு இருக்கிறார்கள், அவர்கள் வீட்டுக்கும் வந்து செல்லுங்கள் என்று அப்பாவிடம் கெஞ்சும் அளவுக்கு ஒரு இரும்புத் திரையை கோபாலபுரத்தில் போட்டு வைத்திருக்கிறார்கள்! இப்படி ஸ்டாலினுக்காகவே எல்லாம் என்று இயங்கிக் கொண்டிருக்கும் திமுக., என்கிற குடும்பச் சொத்தில், திடீரென்று புகுந்து குட்டையைக் குழப்பப் பார்க்கிறார் வைகோ என்பது திமுக.,வினர் பலரின் குற்றச்சாட்டு. அதனால்தான், கடந்த வருடம் காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கருணாநிதியைப் பார்க்க வந்த வைகோவை., அடித்துத் துரத்தி ஆவேசப் பட்டனர் திமுக., தொண்டர்கள்.

இப்போது மதிமுக.,வில் சிலரே வைகோ.,வின் அரசியல் பிடிக்காமல், உங்களுக்காகத் தீக்குளித்து மரணித்த தொண்டர்களின் நிலையை எண்ணிப் பாருங்கள் என்று குரலெடுத்து குமுறு வருகின்றார்கள். ஆனால் வைகோவுக்கு இப்போது தாய் வீட்டுப் பாசம் தலைக்கு ஏறிவிட்டது. உடனே அடுத்த கட்டளை இட்டார்… எவரெல்லாம் ஸ்டாலினை விமர்சித்துப் பேசுகிறார்களோ அவர்கள் கட்சியை விட்டு விலக்கப் படுவர் என்று!

இந்தச் செய்தி பலருக்கும் அதிர்ச்சியளித்தது. ஸ்டாலினைப் பற்றி பேசுகிறார் என்ற ஒரே காரணத்தால்தானே திமுக.,வை விட்டு வைகோவை விலக்கிவைக்க நேர்ந்தது கருணாநிதிக்கு என்று கூறும் மதிமுக., தொண்டர்கள், வைகோவின் அறிவிப்பை விநோதமாகவே பார்க்கிறார்கள்.

இதுதான் சரியான சமயம் என்று இப்போது குழம்பிய குட்டையில் மீன் பிடித்தலைப் போல் இறங்கியிருக்கிறார்கள் பங்காளிகளாத் திகழ்ந்த பகையாளிகள் நாம் தமிழர் கட்சியினர்.  நாம் தமிழர் கட்சியினர் பெருவாரியாக சமூக வலைத்தளங்களில் இப்போது பதிவிடும் கருத்து, இதுதான்… ஸ்டாலினுக்குப் பின்னர் திமுக.,வை கைப்பற்ற வைகோ முயற்சி செய்கிறார் என்பது!

காரணம், திமுக., பக்கம் வைகோ.,வை நெருங்க விடாமல் செய்வதற்கு ஒரு வழி இது என்று அவர்கள் கருதுகின்றார்கள். ஸ்டாலினுக்கும் வைகோவுக்கும் மீண்டும் ஒரு போரை துவக்கி வைத்து, வைகோவை., திமுக. பக்கம் ஒதுங்க விடாமல் செய்வது நாம் தமிழர் கட்சியினர் மேற்கொள்ளும் அடுத்த அரசியல் தந்திரம். அதற்காக என்னவெல்லாம் அஸ்திரங்களை விட முடியுமோ அதை எல்லாம் இப்போது சமூக வலைத்தளங்களில் மேற்கொண்டு வருகிறார்கள். அதன் மூலம் தங்கள் சாதீய குடும்ப செய்தி டிவி.,யில் பரபரப்பைக் கிளப்ப தயாராகி வருகின்றார்கள்!

 

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.