விஜய்கிட்டே திருடி ‘நல’ம் பெற விஷால் முயற்சி!

சென்னை: திருட்டு விசிடிக்கு எதிராக போராடியவர் விஷால். இப்போது, விஜய் இயக்கத்தின் பெயரை அவரே திருடலாமா என்று கேள்வி எழுப்புகின்றனர் நெட்டிசன்கள்.

திடீர் திடீரென கடைகளுக்குள் புகுந்து திருட்டு விசிடி குறித்து சோதனை செய்வதே விஷாலின் அடையாளமாக இருந்தது. அதன் மூலமே தொடக்க காலத்தில் பிரபலம் ஆனார்.

சிடி விற்பனை செய்யும் கடைகளில் அத்துமீறி நுழைவார். ஏதாவது திருட்டு விசிடி கண்ணில் பட்டால் போதும்… உடனே பொங்கிவிடுவார். உன் வீட்டுக்குள் வந்து நான் திருடினா நீ சும்மா இருப்பியா என்று கேட்டு, கேசட் கடைக்காரர்களை ஒரு வழி பண்ணிவிடுவார்.

அதுமட்டுமல்ல… புதுப்படங்கள் வெளியானதும் உடனே இணையதளத்தில் போட்டு விடும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட தளங்களுக்கு சவால் விட்டு போராடினார்.

இப்படி திருட்டு விசிடி, வெப்சைட் என்று அதற்கு எதிராக போராடிய விஷால், அரசியலில் மட்டும் தான் திருட்டுத்தனத்தை செய்வதை அங்கீகரிக்கிறார் போலும் என்று குமுறுகின்றனர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.

ரஜினி காந்த் இதோ இதோ என்று பிலிம் காட்டிக் கொண்டிருந்த நேரத்தில், யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென அரசியல் களத்தில் குதித்த விஜய் காந்த் குறிப்பிடத் தக்க வகையில் வெற்றிக் கொடி நாட்டினார். எதிர்க்கட்சித் தலைவர் ஆனவருக்கு முதல்வர் ஆவது ஒன்றும் இன்றைய சூழலில் பெரிய விஷயம் இல்லைதான்! ஆனால் அவர் உடல் ஒத்துழைக்கவில்லை!

இப்போது விஜய் அரசியல் பாதை போட்டு, சினிமாவெல்லாம் அரசியல் வாடை வீச எடுத்து, தனக்கான ஒரு தளமாக முதலமைச்சர் கனவில் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் சில பல சர்ச்சுகளின் பின்னணியில் ஒரு தடம் போட்டு வைத்திருக்கும் போது, திடீரென களத்தில் புகுந்துள்ளார் விஷால்.

ஆர்.கே.நகரை எட்டினார். அது எட்டிவிட்டது. இப்போது திருப்பரங்குன்றம் எனும் திருப்புமுனையை எதிர்பார்த்திருக்கின்றார். அப்போது சுயேச்சையாக நின்றார். போணியாகவில்லை. இப்போது அமைப்பு, கட்சி என்று இயங்க முடிவு செய்துள்ளார்.

அதன்படி, இன்று அவர் அரசியல் இயக்கத்தை தொடங்கினார். அதற்கு மக்கள் நல இயக்கம் என பெயரிட்டுள்ளார். கட்சியின் பெயரும், லோகோவும் விஜயிடம் இருந்து அப்படியே சுட்டுப் போட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள். இதனால் கோபமடைந்த விஜய் ரசிகர்கள், திருட்டு விசிடிக்கு பொங்கிய விஷால் இப்படி எங்கள் இயக்கத்தின் பெயரையும் லோகோவையும் திருடுவது நியாயமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.