சோலார் பேனல் மோசடி: அரசியல்வாதிகள் தன்னை மிரட்டி கற்பழித்தது உண்மை என்கிறார் சரிதா நாயர்

saritha-nair திருவனந்தபுரம்: என்னை கேரள அரசியல் பிரமுகர்கள் மிரட்டி கற்பழித்து உண்மைதான் என்று கேரளத்தில் நடைபெற்ற சோலார் பேனல் மோசடியில் சிக்கிய சரிதா நாயர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். கேரளாவில் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு சோலார் பேனல் அமைத்துத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக பெண் தொழிலதிபர் சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். இந்த மோசடியில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டின. சிறையில் இருந்து தற்போது சரிதா நாயர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். அப்போது, தன்னுடன் நெருக்கமாக இருந்த அரசியல் பிரமுகர்கள் பற்றிய தகவலை விரைவில் வெளியிடுவேன் என்றும் கூறியிருந்தார். மேலும், சரிதா நாயரின் அரைகுறை நிர்வாணப் படங்கள் யு டியூப் உள்ளிட்ட இணைய தளங்களிலும், வாட்ஸ் அப்-இலும் வெளியாயின. இந்நிலையில், தன்னுடைய நிர்வாணக் காட்சிகள் இணையத்தில் வெளியானதற்கு காவல்துறை அதிகாரிதான் காரணம் என்று சரிதாநாயர் புகார் கூறியிருந்தார். இந்த நிலையில் சரிதா நாயர் சிறையில் இருந்தபோது அவர் எழுதியதாகக் கூறி ஒரு கடித தகவல் வெளியானது. அதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோஸ் கே.மாணி சரிதா நாயரை கற்பழித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் இதை சரிதா நாயரும், ஜோஸ் கே.மாணியும் மறுத்தனர். இந்தப் பிரச்னை குறித்து, திருவனந்தபுரத்தில் சரிதா நாயர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.. சில நேரங்களில் செய்தியாளர்களின் கேள்விக்கு ஆவேசப்பட்டு பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், “நான் சிறையில் இருந்தபோது எழுதப்பட்ட 30 பக்க கடிதம் இதுதான். ஆனால் தற்போது நான் எழுதியதாகக் கூறி வெளியாகி உள்ள கடிதம் உண்மையானது அல்ல. அந்தக் கடிதத்தில் ஜோஸ் கே.மாணியை நான் குறிப்பிடவில்லை இது வேண்டுமென்றே ஒரு அரசியல் கட்சியை பழிவாங்கும் விதத்தில் தெரிவிக்கப்படுவது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் எனத் தெரியாது. இருப்பினும், தற்போது நான் எழுதிய அந்தக் கடிதத்தை வெளியிடும் எண்ணம் இல்லை. ஏனெனில், என்னுடைய தனிப்பட்ட விஷயங்கள் எல்லாம், அரசியல்வாதிகளின் கைகளில் சிக்கி, அவர்களுக்கு நான் ஒரு கருவியாக இருக்க விரும்பவில்லை. நான் வாழ்க்கையில் சந்தித்த உண்மைச் சம்பவங்களையும், கொடுமைகளையும்தான் அதில் வெளிப்படுத்தியுள்ளேன். அதேநேரம் என்னை கேரள அரசியல் பிரமுகர்கள் மிரட்டி கற்பழித்தது உண்மைதான். அவர்கள் அனைவர் பற்றியும் அந்தக் கடிதத்தில் நான் எழுதியிருக்கிறேன். அந்தக் கடிதம் வெளியானால் நிச்சயம் கேரள அரசியலில் பெரும் பூகம்பம் ஏற்படும்” என்று கூறிச் சென்றார். அவரது பேட்டியின் போது சரிதா நாயர் தான் எழுதிய கடிதத்தை செய்தியாளர்களிடம் மேலோட்டமாகக் காண்பித்தார். ஆனால் அதை அவர் வெளியிடவில்லை. வெளியிட இயலாதுஎன்று கூறி மறுத்துவிட்டார். எனினும், அப்போது புகைப்படக்காரர்கள் சிலர், தங்கள் கேமராவால் அந்தக் கடிதத்தை படம் எடுத்திருந்தனர். அதில் சரிதா நாயர் குற்றம் சாட்டி இருந்த சிலரின் பெயர்கள் அரசல் புரசலாகத் தெரிய வந்துள்ளது. இதுவே கூட கேரள அரசியலில் பெரும் புயலைக் கிளப்பும் எனக் கூறப்படுகிறது. சரிதா நாயர் அளித்த பேட்டி: நன்றி: ஏசியாநெட் https://youtu.be/rzokgAtY6dw