ஜெயலலிதா பெயர் கோமளவல்லி என யார் சொன்னது?: டிடிவி தினகரன்

அமைச்சர்கள் படம் பார்த்துவிட்டு இப்படி கருத்துகளைக் கூறியிருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை!  நான் படம் பார்த்துவிட்டு, ஜெயலலிதாவிற்கு எதிராக படத்தில் காட்சிகள் இருந்தால் கருத்து சொல்கிறேன் என்று கூறினார் டிடிவி தினகரன்.

ஜெயலலிதா பெயர் கோமளவல்லி என்று யார் சொன்னது? என கேள்வி எழுப்பியுள்ளார் டிடிவி தினகரன்!

‘சர்ச்சை நாயகன்’ விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகியுள்ள சர்கார் திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்திற்கு கோமளவல்லி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ஜெயலலிதாவின் இயற்பெயர் என தமிழக அமைச்சர்களும் அதிமுக.,வினரும் கூறி, இது வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் து.பொதுச் செயலர் டிடிவி தினகரன், இது தவறு என்று கூறியுள்ளார். ஜெயலலிதாவின் இயற் பெயர் கோமளவல்லி இல்லை என்பது எனக்கே தெரியும். 2002 அல்லது 2003ல் காங்கிரசை சேர்ந்த ஒருவர், ஜெயலலிதாவை கோமளவள்ளி என கூறி விமர்சனம் செய்தார்.

அப்போது ஜெயலலிதாவே என்னிடம், “ஏன் கோமளவல்லி என்று சொல்கிறார்கள்” என்று கேட்டார். மேலும், “நான் திரைப்படத்தில் கூட அப்படி ஒரு கதாபாத்திர பெயரில் நடித்ததில்லையே! பிறகு ஏன் இப்படிச் சொல்கிறார்கள்” என்று என்னிடம் கேட்டார்.

எனவே, அமைச்சர்கள் படம் பார்த்துவிட்டு இப்படி கருத்துகளைக் கூறியிருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை!  நான் படம் பார்த்துவிட்டு, ஜெயலலிதாவிற்கு எதிராக படத்தில் காட்சிகள் இருந்தால் கருத்து சொல்கிறேன் என்று கூறினார் டிடிவி தினகரன்.