துரை முருகன் தொடங்கி வைத்தது! வைகோ… வன்னியரசு… திருமாவளவன் மோதலில் நிற்கிறது!

விடுதலைச் சிறுத்தைகளும் மதிமுக.,வும் கூட்டணிக் கட்சிகள் இல்லை, தோழமைக் கட்சிகள்தான் என்று திமுக., பொருளாளர் துரை முருகன் சொன்னாலும் சொன்னார்… இப்போது விடுதலைச் சிறுத்தைகளுக்கும் மதிமுக.,வுக்கும் பிரச்னை வேறு வகையில் திரும்பியிருக்கிறது!

தலித்தியம் திராவிடியம் என்று இரு வேறு திசைகளில் இருந்து ஒருவருக்கு ஒருவர் தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருக்கின்றனர். திராவிட இயக்கங்களால் தலித்துகள் முன்னேறவில்லை இடை நிலை சாதிகளே பயன் பெற்றன என்ற ரீதியில் கருத்துகளைப் பதிவிட்டார் வன்னியரசு. இதை அடுத்து, வைகோ பகிரங்கமாக சில கருத்துகளை வன்னியரசு மற்றும் திருமாவளவனை முன்வைத்து தெரிவித்தார்.

விருதுநகர் கூட்டத்தில் அவர் பேசிய பேச்சுகள் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. வன்னியரசுவுக்கு பதில் சொன்ன வைகோ, தான் ஒரு தீக்குச்சி, உரசாதீர்கள் என்றார். மேலும், விடுதலைச் சிறுத்தைகளின் தேர்தல் செலவுக்காக முன்னர் தாம் ரூ.30 லட்சம் பணம் கொடுத்ததாகவும் ஒரு தகவலைக் கூறினார்.

இந்நிலையில், வைகோவின் கோபம் என்மீதா, இல்லை வன்னிஅரசு மீதா? என்று எதிர்ப்பை நேரடியாக பதிவுசெய்வதை தவிர நான் யாரையும் தூண்டிவிடுவதில்லை என்று திருமாவளவன் அதற்கு பதிலளித்திருக்கிறார்.

வைகோ பற்றி வன்னிஅரசு பதிவு செய்த கருத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்தல்ல என்று கூறியுள்ள திருமாவளவன், வன்னியரசு சர்ச்சைக்குள்ளான பதிவை நீக்கிவிட்டார், தனது வருத்தத்தையும் பதிவு செய்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

முன்னர் திராவிட இயக்கம் தலித்துகளை உயர்த்தவில்லை என வன்னிஅரசுவை எழுத வைத்தது யார்? என்று திருமாவளவனை குற்றம் சாட்டி நேற்று வைகோ கேள்வி எழுப்பி இருந்தார்.

இதே போன்ற ஒரு கேள்வி புதியதலைமுறை சேனலின் கார்த்திகைச்செல்வன் மீண்டும் மீண்டும் வைகோவிடம் முன்வைக்க, தன் வீட்டில் வைத்து பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த வைகோ, அந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல் எழுந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.