காவல்துறை அடக்குமுறை: மு.க.ஸ்டாலின் கண்டனம்

காவல்துறையின் அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின். திமுக பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் முகனூலில் பதிவு செய்துள்ள கருத்து… வேளாண்மை பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கழகத்தின் சார்பில் கோரிக்கை வைத்தும் இதுவரை அ.தி.மு.க அரசு அந்த விசாரணையை சி.பி.ஐ வசம் ஒப்படைக்கவில்லை. தற்போது நடந்து வரும் சி.பி.சி.ஐ.டி விசாரணையில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லை. அதை விட இந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி என்ற விசாரணை அமைப்பிற்கு உள்கட்டமைப்பு வசதிகளோ அல்லது போதிய எண்ணிக்கையில் போலீஸ் அதிகாரிகளோ – ஏன் இது போன்ற வழக்குகளை விசாரிக்கும் அளவிற்கு மன உறுதியோ அந்த அமைப்பிற்கு இருப்பதாகத் தெரியவில்லை. தற்போது மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் நீதிபதி அவர்கள் “சி.பி.சி.ஐ.டி. அமைப்பின் புலனாய்வு திறமை” பற்றியே சந்தேகம் எழுப்பியுள்ளார். குறிப்பாக வருமான வரித்துறையின் ஓய்வு பெற்ற இணை ஆணையர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இரட்டைக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பத்து வருடமாகியும் சி.பி.சி.ஐ.டி.யால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் இப்படிப்பட்ட கருத்தைக் கூறியுள்ள நீதிபதி அவர்கள், “இந்த சூழ்நிலையில் சி.பி.ஐ. விசாரணை கோருவதைத் தவிர தமிழக மக்களுக்கு வேறு வழி என்ன இருக்கிறது?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். சி.பி.சி.ஐ.டி. அமைப்பின் விசாரணை திருப்திகரமாக இல்லை என்பது ஒரு புறமிருக்க, அ.தி.மு.க. அமைச்சர்கள் தொடர்ந்து அதிகாரிகளை சட்டவிரோதமான காரியங்கள் செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலைமையோ முற்றிலும் சீர்குலைந்து விட்டது. ஆளுங்கட்சியை விமர்சிப்பவர்கள் மீது அ.தி.மு.க. அரசு காவல்துறையைப் பயன்படுத்தி அடக்குமுறை ஏவுகிறது. இது போன்ற அடக்குமுறைக்கும், தவறான காரியங்களுக்கும் காவல்துறையைப் பயன்படுத்தும் அ.தி.மு.க. அரசுக்கும் தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆட்சியில் நடக்கும் அதிகாரிகளின் மரணங்களுக்கு நீதி கிடைக்காமல் போவதை தி.மு.க என்றைக்கும் அனுமதிக்காது. வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டு இறந்தவர்களின் குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் நீதி கிடைக்கும் வரை திராவிட முன்னேற்றக் கழகம் அயராது போராடும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.