காங்கிரஸ், ராகுல் கடைந்தெடுத்த பொய்யர்கள்: ரஃபேல் மூலம் நிரூபித்தது உச்ச நீதிமன்றம்!

ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் அது ஏதோ உண்மை என்பது போல் தோன்றும் என்பது போல், காங்கிரஸ் தலைவர் ராகுல் அண்மைக் காலமாக, ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக மீண்டும் மீண்டும் கூறிவந்தார்.

2004 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சி செய்த 10 வருடங்களில் எண்ணற்ற ஊழல்களால் நாட்டின் பொருளாதாரம் நிலைகுலைந்து போனது. விலை வாசி உயர்வு ஏற்பட்டது. பருப்பு, எண்ணெய், காய்கறி விலைகள் ஏகத்துக்கும் எகிறியது. விவசாயிகள் பிரச்னை, கடன்கள் பிரச்னை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்று தள்ளாட்டத்தில் இருந்தன. அதற்குக் காரணம், விண்ணளாவிய ஊழல்கள்தான் என்பது வெளிப்படை. போபர்ஸ் ஊழல் தொடங்கி, 2ஜி, நிலக்கரி சுரங்கம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போதான முறைகேடு என பத்து வருடங்களும் ஊழல்களின் உச்சக்கட்டமாக வாய்மூடி மௌனியாக ஆட்சி செய்த மன்மோகன் சிங்கை பொம்மையாக வைத்து ஊழல்களை அரங்கேற்றினர் சோனியா, ராகுல், மற்றும் காங்கிரஸின் கைதேர்ந்த தலைவர்கள்.

பின்னர் வந்த மோடி ஆட்சியில், வெளிப்படையான நிர்வாக முறை பின்பற்றப் படுவதால், ஒளிவு மறைவற்ற நிலையில் ஊழல்களுக்கு இடமில்லாமல் போனது. ஆனால், எந்த வகையிலும் ஊழல்குற்றச்சாட்டுகளையோ, முறைகேடு புகார்களையோ தெரிவிக்க இயலாத நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல், மீண்டும் மீண்டும் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தையே பிடித்துத் தொங்கிக் கொண்டு, கூவிக் கொண்டிருந்தார். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரம் என்றாலும், ரகசியம் காக்க விடாமல் வெளிப்படையாக அனைத்தையும் அறிவிக்கக் கோரினார்.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, ரஃபேல் ஒப்பந்தத்தில் தேவைப்படும் தகவல்களை உறை மூடி சீலிட்ட கவரில் சமர்ப்பிக்குமாரு கோரி, அதனை ஆய்வு செய்தது.

இதன் பின்னணியும் இதுதான்! பிரான்ஸை சேர்ந்த, டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் தயாரிக்கும் ரபேல் ரக போர் விமானங்கள் வாங்குவதற்கு 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் மேடை தேறும் கூறி வந்தார். மீடியாக்களில் பேசி வந்தார். அவரது பேச்சைப் பின்பற்றி, எதிர்க்கட்சிகளும் இது குறித்து பேசி வந்தன.

இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, வழக்கறிஞர் வினீத் தண்டா, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், பாஜக.,வில் வெளியேறிய யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் தனித் தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த அமர்வு இந்த வழக்கில், டிசம்பர் 14 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்தது. அதன்படி இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் அரசின் கொள்கை முடிவுகள் சரியானதுதான். இந்த ஒப்பந்தத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஏதும் இல்லை. முறைகேடு எதுவும் நடந்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை.

126 விமானங்களுக்கு பதில் 36 விமானங்கள் வாங்க முடிவெடுத்தது ஏன் என புரிந்து கொள்ள முடியவில்லை.

டசால்ட் நிறுவனம் இந்தியாவில் துணை நிறுவனம் தேர்வு செய்ததில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாகத் தெரியவில்லை. வர்த்தக ரீதியாக சில நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டதற்கான ஆதாரமும் இல்லை. இந்த ஒப்பந்தம் மூலம் நிதி ஆதாயம் யாரும் பெற்றதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை – என்று கூறியது உச்ச நீதிமன்றம் .

மேலும், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 5 பொது நல மனுக்களையும் தள்ளுபடி செய்தது. இதன் மூலம், மோடி ரபேல் விவகாரத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில், ரபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆரம்பம் முதலே இது தெளிவாகத் தெரிந்ததுதான். அரசியல் ஆதாயத்திற்காகவே காங்கிரஸ் இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்தது. இதில் அடிப்படை ஆதாரம் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார்.

காங்கிரஸும், ராகுலும் கடைந்தெடுத்த பொய்யர்கள் என்று மீண்டும் ஒரு முறை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் நிரூபிக்கப் பட்டுள்ளது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.