ஜூன் முதல் பேரவைத் தொகுதி வாரியாக சுற்றுப் பயணம்: ஜி.கே.வாசன்

சென்னை: தமாகா.,வின் பொதுக்குழு வரும் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது; ஜூன் முதல் பேரவைத் தொகுதி வாரியாக சுற்றுப் பயணம் செய்ய வுள்ளேன் என்று அதன் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். சென்னையில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:- தமாகா.,வின் பொதுக்குழு ஏப்.24-ஆம் தேதி, சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், மக்கள் நலன், கட்சி நலன் தொடர்பாக பல்வேறு முக்கிய தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளோம். அடுத்த மாதம் 2-வது வாரத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்படுவர். அதனைத் தொடர்ந்து மே மாதம் 3-ஆவது வாரத்தில் தொடங்கி, மே இறுதிக்குள் நகர, வட்டார, கிராமத் தலைவர்கள் நியமிக்கப்படுவர். மே இறுதியில் தமாகா நிர்வாகிகள் நியமனம் இறுதி வடிவம் பெறும். ஜூன் மாதம் முதல் சட்டப்பேரவை தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் தொடங்க உள்ளேன். ஏப்.14 அன்று மதுரையில் தமாகா சார்பில் அம்பேத்கர் பிறந்த தின விழா பொதுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. அப்போது மக்கள் விடுதலைக் கட்சி தமாகாவில் இணைகிறது. தமிழகத்தில் கடும் வறட்சி காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆழ்துளைக் கிணறு அமைக்க ரூ.5 ஆயிரம் செலுத்தி அரசின் அனுமதி பெற வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவர். எனவே இந்தச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை என்ன காரணத்துக்காக ஆதரித்தோம் என்று அதிமுக விளக்கம் அளிக்க வேண்டும் என்றார் ஜி.கே.வாசன்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.