பாஜக., சங்பரிவார் உருவாக்குவதைத் தவிர வேறு வன்முறைகள் கேரளத்தில் இல்லை: பிணராயி விஜயன்!

4

கேரளத்தில் நிகழ்ந்த வன்முறைகளுக்காக 5,769 பக்தர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். 1,869 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த நான்கு நாட்கள் கொதிநிலையில் இருந்த கேரளத்தில் ஞாயிற்றுக் கிழமை அமைதி திரும்பியதாக கேரள கம்யூனிச அரசு கூறியுள்ளது.

ஆளும் கம்யூனிஸ்ட் அரசின் ஆதரவுடன், ஜனவரி 2 ஆம் தேதி ஐயப்பன் சந்நிதி முன் 50 வயதுக்கு உட்பட்ட இரண்டு பெண்கள் வலுக்கட்டாயமாக நிறுத்தப் பட்ட பிறகு, மாநிலத்தில் பெரும் கலவரம் மூண்டது. பாஜக-ஆர்எஸ்எஸ் மற்றும் ஆளும் சிபிஐ (எம்) இருவருமே மாநிலத்தின் நிலைமையை மோசமாக்குவதாக ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டனர்.

கேரள முதல்வர் பிணராயி விஜயன், இந்த அசம்பாவிதச் சம்பவங்கள் எதற்கும் தாம் பொறுப்பேற்க மறுத்துவிட்டார், வன்முறைக்கு பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவார் இயக்கங்களே காரணம் என்று குற்றம் சாட்டினார்.

ஆர்எஸ்எஸ், பிஜேபி மற்றும் சங் பரிவார் ஆகியோரால் உருவாக்கப்பட்ட வன்முறைகளை தவிர வேறு எந்த வன்முறைகளும் மாநிலத்தில் இல்லை, இப்போது அவை, அரசியலமைப்பு ரீதியாக மாநிலத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன, “என பிணராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிஜேபி தேசிய தலைமை அதன் கேரள காரியகர்த்தர்களுக்கு கேரள மாநிலத்தில் வன்முறையை உருவாக்காமல் இருங்கள் என்று அறிவுறுத்த வேண்டும் என்று அதில் கூறியிருக்கிறார்.

மாநிலத்தின் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்த எதிர்க்கட்சியினரை அரசியல் ரீதியாக அடக்கி, கைது செய்வதன் மூலம் கேரள அரசு விமர்சனத்துக்கு உள்ளானது. சி.பி.ஐ (எம்) தலைமையிலான இடதுசாரி அரசாங்கம் மாநிலத்திற்கு எதிராக குரல் எழுப்பும் பி.ஜே.பி. தொண்டர்களை கைது செய்துள்ளது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறிய மறுநாளே பேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டார் பிணராயி விஜயன்.

சபரிமலை உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில், 267 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 677 பேர் இதுவரை கைது செய்யப்பட்டனர். பாலக்காடு மாவட்டத்தில், 283 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 764 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்ணூர் மாவட்டத்தில், தலசேரி எம்.எல்.ஏ. ஏ.எம்.ஷம்ஷீர் மற்றும் பா.ஜ.க. தலைவர் வி.எம்.முரளீதரன் எம்பி., ஆகியோர் வீடுகளில் கையெறி குண்டுகள் வீசப்பட்ட விவகாரம் உள்பட 225 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 394 பேர் கைது செய்யப்பட்டனர்.

பி.ஜே.பி தேசிய செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ், கேரள சிபிஐ(எம்) அரசு அரசியலமைப்பு ரீதியாக கேரளம் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை செய்தார். இதற்கு பதிலளித்துள்ள பிணராயி விஜயன், சபரிமலை வன்முறைகளுக்காக அரசியலமைப்பு ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு தங்களைப் பதவி இறக்க முடியாது என்று கூறியுள்ளார்.

சபரிமலை விவகாரம் அரசியல் ரீதியான வன்முறைப் பாதைக்கு வழிகோலியிருப்பதுடன், கடவுள் நம்பிக்கையாளர்கள், நாத்திகர்கள் என்ற நிலையையும் கடந்து சென்றிருக்கிறது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...