ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுகொலை: வேலூரில் பேரணி சென்ற வைகோ உள்ளிட்ட 1000 பேர் கைது

ஆந்திர வனப்பகுதியில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆந்திர அரசை கண்டித்து வேலூரில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து சித்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக ம.தி.மு.க., பொதுசெயலாளர் வைகோ அறிவித்திருந்தார். வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது பேசிய வைகோ ஆந்திரா அரசுக்கு எதிராக கொந்தளித்தார். இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் நடக்காத கொடூரமாக 20 அப்பாவி கூலித் தொழிலாளர்களான தமிழர்கள், ஆந்திர மாநிலக் காவல்துறையால் ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இவை அனைத்தும் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூரமான கோரக் கொலைகள் ஆகும். அரை நிர்வாணமாக உடல்கள் கிடக்கின்ற இடத்தில், செம்மரக் காடுகளே இல்லை. வெட்டவெளியாக இருக்கின்றது. ஆனால், உடல்களுக்கு அருகில் நன்கு செதுக்கப்பட்ட பழைய செம்மரக் கட்டைகளைப் போட்டு வைத்து உள்ளனர். அவர்களை அடைத்து வைத்து இருந்த இடத்திலேயே சுட்டுக்கொன்று விட்டு, இந்தக் கோர நாடகத்தை நடத்தி உள்ளனர். இறந்தவர்களின் உடல்களில் தலை, நெற்றி, மார்பில்தான் குண்டுகள் பாய்ந்து உள்ளன. மிக அருகாமையில் இருந்துதான் சுட்டு இருக்கின்றார்கள். கூலி வேலைக்குச் சென்று கிடைக்கின்ற சொற்ப வருமானத்தில் தங்கள் குடும்பங்களை வாழ வைக்கும் இந்த ஏழைத் தமிழர்களைப் படுகொலை செய்த, காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாகக் கொலை வழக்குப் பதிவு செய்து, அவர்களைப் பணி இடை நீக்கம் செய்து, கைது செய்து சிறையில் அடைக்க வேண்டியது, ஆந்திர அரசாங்கத்தின் தலையாய கடமை ஆகும். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல்துறை நடத்திய படுகொலையை ஆந்திர அரசு நியாயப்படுத்த முனைவது மனித உரிமைகளை நசுக்குகின்ற அக்கிரமம் ஆகும். எனவே, ஆந்திர மாநில அரசைக் கண்டித்தும், இப்படுகொலைக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கக் கோரியும், நீதியை நிலைநாட்டுவதற்கு, உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நேரடி நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து அவர் தொண்டர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு சென்றார். சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக கூறிய வைகோவை, வேலூர் காந்திசிலை அருகே போலீசார் கைது செய்தனர். அவருடன் ஆயிரக்கணக்கான மதிமுகவினரும் கைது செய்யப்பட்டனர். இதனிடையே வைகோவிற்கு திடீர் சோர்வு ஏற்பட்டது. இதனையடுத்து மதிமுக மருத்துவர் மாசிலாமணி வைகோவை பரிசோதனை செய்தார். வெயில் காரணமாக வைகோவின் உடல்நிலையில் சிறிது சோர்வு ஏற்பட்டதாக வைகோ தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனைவரும் வேனில் ஏற்றி அழைத்துச்செல்லப்பட்டனர். 10-04-15 Vai.Ko photo 04 10-04-15 Vai.Ko photo 03 10-04-15 Vai.Ko photo 02 10-04-15 Vai.Ko photo 01