மோடி பூச்சாண்டியை காட்டி… எங்களுக்கு சோறூட்டாம… நீயே திங்கிறியே ராகுல்..! அறிவாளி ஆகிவிட்ட அகிலேஷ்!

உத்தரப் பிரதேசத்தில் கூட்டணி போட்டுள்ள மாயாவதியும் அகிலேஷ் யாதவும் காங்கிரஸுக்கு ஒரு செய்தியைக் கூறியுள்ளனர். காங்கிரஸ் கட்சி முன்பு போல் வலிமையான மக்கள் செல்வாக்குள்ள கட்சி இல்லை என்பதால், நாங்கள் அதற்கு உதவ வேண்டியதில்லை. அக்கட்சிதான் மாநிலத்தில் எங்களுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி, மாநிலங்களில் உள்ள கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் போது, மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் பாதிக்குப் பாதியும், நாடாளுமன்றத் தேர்தல் எனில் மிகக் குறைந்த அளவிலும் தொகுதிகளை ஒதுக்குவது வழக்கம். அதன் மூலம் காங்கிரஸ் கட்சி மத்தியில் தொடர்ந்து ஆட்சியில் இருந்துவந்தது. ஆனால் பின்னாளில் ராஜீவுக்குப் பின்னர், நரசிம்ம ராவ் அமைச்சரவைக்கு முன்பும் பின்பும் அமைந்த சிறு கட்சிகளின் கூட்டணி ஆட்சியால் மாநிலக் கட்சிகளின் மனப்போக்கும் மாறிவிட்டது. தேவேகவுட, ஐகே குஜ்ரால், சந்திரசேகர், விபி சிங் என இவர்களெல்லாம் பிரதமர் நாற்காலியில் அமர்ந்துவிட்டதால், தங்களுக்கும் அத்தகைய வாய்ப்பு வேண்டும் என்று போர்க்கொடி துவக்கியுள்ளனர் அகிலேஷ், மாயாவதி, மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, சரத்பவார் உள்ளிட்டோர்.

இந்நிலையில், வரும் தேர்தலில் பாஜக,வை தோற்கடிக்க வேண்டுமென்றால் ராகுல் எங்களின் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாடு முழுவதும் மாநில அளவில் கட்சிகள் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி கூட்டணி அமைத்து கூடுதல் தொகுதிகளை வென்று தங்கள் செல்வாக்கைக் காட்ட முயற்சி செய்துவருகின்றனர். தற்போது காங்கிரஸ் பெற்றுள்ள தொகுதிகளைப் போல், அது மீண்டும் பெற்றாலோ, காங்கிரஸை விட கூடுதல் தொகுதிகளைத் தாங்கள் பெற்றாலோ, தாங்களே பிரதமர் ஆகிவிடலாம் என மாநிலக் கட்சிகள் எண்ணுகின்றன.

அதைவிட, கர்நாடகத்தில் மிகக் குறைந்த அளவே தொகுதிகளைப் பெற்றிருந்தாலும், குமாரசாமியை முதல்வர் பதவியில் அமர்த்தியுள்ள காங்கிரஸின் செயல்பாடு, அக்கட்சிக்கு பாஜக.,வை வரவிடக் கூடாது என்பதற்காக எத்தகைய சமரசத்துக்கும் தன்னை வரச் செய்து கொள்ளும் என்ற நம்பிக்கையை மாநிலக் கட்சிகளுக்கு விதைத்திருக்கிறது. எனவே, மத்தியிலும் அப்படி ஒரு நிலை வரும் என்று மாயாவதியும் அகிலேஷும் கணக்கு செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் மமதாவும் கூட ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளருக்கு முன்னிறுத்தத் தயங்குகிறார்.

ஆளும் கட்சியான பாஜக.,வுக்கு எதிராக மெகா கூட்டணி அமைத்துக் காட்டுவேன் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சூளுரைத்துக் கிளம்பினார். ஆனால் தெலங்கானா தேர்தல் முடிவு அவரை திருப்பிப் போட்டுவிட்டது. நாயுடுவுக்கு சொல்வாக்கும் இல்லை செல்வாக்கும் இல்லை என்று காங்கிரஸ் தீர்மானித்தது. அதனால் இப்போது ஆந்திராவில் தனித்துப் போட்டி என்ற முடிவுக்கு வந்துவிட்டது.

தெலங்கானா மாநிலத் தேர்தலில் மட்டும் தனது செல்வாக்கைக் காட்டிவிட்ட சந்திரசேகர ராவ், நாயுடுவுக்குப் போட்டியாக ஒரு கூட்டணி முடிவுடன் சுற்றத் தொடங்கினார். அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். ஆனால் மோடியை எதிர்ப்பது என்ற கொள்கையில் ஒன்றாக இருக்கும் இவர்களால், யாரை தலைமையில் முன்னிறுத்துவது என்ற உடன்பாட்டுக்கு வர இயலவில்லை!

அதிக எம்பி., தொகுதிகள் கொண்ட மாநிலமான உ.பி. யில் அதிக தொகுதிகளைப் பெற்று விடுபவர்கள் பிரதமர் ஆகி விடலாம் என்ற நிலை உள்ளது. மாநிலத்தில் பாஜக.,வின் யோகி ஆதித்யநாத் அசுர பலத்துடன் ஆட்சியில் உள்ளார். எனவே, இப்போதைக்கு மாநிலத்தில் தங்களுக்கு வேலை இல்லை என்பதால், மத்தியில் ஒரு கணக்கைப் போடுகின்றனர் அகிலேஷும் மாயாவதியும். தாங்கள் அதிக தொகுதிகள் பெற்றால் பிரதமர் நாற்காலி வாய்ப்பும், அதை தீர்மானம் செய்வதில் முக்கியத்துவமும் தங்களுக்கு இருக்கும் என்பதால்,அகிலேஷ் இப்போது காங்கிரஸுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். “பாஜக.,வை தோற்கடிக்க வேண்டுமெனில் ராகுல், சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் கட்சி கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்று வெளிப்படையாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாயாவதியும் தன் பங்குக்கு, ராகுல் என்னதான் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டாலும், அவரால் வர முடியாது என்று உறுதியிட்டுக் கூறுகிறார்.

சட்டீஸ்கரில் இரு தினங்களுக்கு முன்னர் நடந்த பொதுக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகள் பயன்பெறும் வகையில் குறைந்தபட்ச வருமானம் உத்தரவாதத் திட்டம் கொண்டுவரப்படும். இதனை அனைவருக்கும் பயன்படும் வகையில் அமல்படுத்துவேன் என்று கூறினார் ராகுல் காந்தி.

ராகுலின் இந்த அறிவிப்பை கிண்டல் செய்து அகிலேஷூடன் கூட்டணியில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறிய போது, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக., அறிவித்த தேர்தல் வாக்குறுதியைத்தான் தற்போது ராகுல் அறிவித்துள்ளார். இது பொய்யானது. மக்களை ஏமாற்றி வாக்கு பெறுவதில் பாஜக., மிஞ்சியது காங்கிரஸ். இரு கட்சிகளுமே ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று கூறியுள்ளார்.

இப்போது அகிலேஷும் மாயாவதியும் ராகுலை ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டு, தாங்களே பெரியவர்கள் என்று காட்டிக் கொள்ள முனைப்புடன் இருக்கிறார்கள்!

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...