தந்தி தொலைக்காட்சியே ஒரு குறிப்பிட்ட கட்சியின் அல்லது கூட்டணியின் கைக்கூலி ஆகாதே என்ற தலைப்பில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் நடுநிலை நாளேடு என்ற பெயரில் என்றுமே நடுநிலையாக நின்றதாக வரலாறு இல்லாத தினத்தந்தி நிறுவனத்தின் சார்பில் வெளியாகும் தந்தி டிவியில் ஒரு அப்பட்டமான பொய் புளுகு கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்

கருத்துக்கணிப்பு என்ற பெயரில் 21 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு 40 சதவிகிதத்திற்கு மேல் ஓட்டு வங்கியிருப்பதாக தந்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டு இருப்பதாக ஆதங்கப்படுகிறார்

இதில் கூட்டணி குறித்த அல்லது கூட்டணியின் போக்கு குறித்த எந்த கருத்தையும் எடுத்துக் கொள்ளாமல் தேர்தலுக்கு முன்னதாகவே இப்படி ஒரு கருத்துக் கணிப்பு வெளியிட வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியை முன்வைத்து அவர் கூறியுள்ள சில கருத்துகளும் தந்தி தொலைக்காட்சியைப் புறக்கணியுங்கள் என்று தனது கட்சியினருக்கு அவர் விடுத்துள்ள வேண்டுகோளும் கொண்ட அவரது அறிக்கை…

தந்தி தொலைக்காட்சியே! ஒரு குறிப்பிட்ட கட்சியின் / கூட்டணியின் கைக்கூலி ஆகாதே!

நடுநிலை நாளேடு என்ற பெத்தப்பெயர்! ஆனால் என்றுமே நடுநிலையாக நின்ற வரலாறு இல்லை! நான்கரை ஆண்டுகள் ஆளுங்கட்சிக்கு வால்பிடிப்பது, ஆறுமாதம் எதிர்ப்பது, மீண்டும் ஆளுங்கட்சிக்கு வால்பிடிப்பது. இதுவே தினத்தந்தி பத்திரிக்கையின் வரலாறும் கலாச்சாரமும் ஆகும். ஆபாசத்தையும், அருவாள் கலாச்சாரத்தையும், கலப்படத்தையும், கட்டப்பஞ்சாயத்தையும், ஜாதியத் தூக்கலையும் தினத்தந்தி பத்திரிக்கையைப் போல பட்டவர்த்தனமாக வேறு எந்தவொரு செய்தித்தாளும் செய்த வரலாறுகள் இல்லை. தென்தமிழகத்தில் இரண்டு உழைக்கும் வர்க்க மக்களிடத்தில் மிகப்பெரிய பகைமையை வளர்த்ததே இந்த ஊடகம் தான் என்ற குற்றச்சாட்டு பல வருடங்களாக உண்டு. பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் காலைப் புழுகு மாலைப் புழுகு என்று பட்டம் சூட்டப்பட்ட வரலாறு இந்தப் பத்திரிக்கைக்கு உண்டு.

இந்த நடுநிலை தந்தி பத்திரிக்கையின் குழந்தையே தந்தி எனும் தொந்தி தொலைக்காட்சி என்பதாகும். எனவே அதனுடைய குணாதிசயங்கள் மாறும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது வாலை சுருட்டி வைத்துக் கொண்டிருந்த அந்த தொந்தி பத்திரிக்கையும், தொந்தி தொலைக்காட்சியும் இப்பொழுது வாலை மெல்லமெல்ல வெளியே நீட்டுகின்றன. இரண்டரை இலட்சம் வாக்காளர்கள் இருக்கக்கூடிய ஒரு சட்டமன்றத் தொகுதியில், தேர்தல் நடப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாக எதை வைத்து இவர்கள் ஆய்வு செய்கிறார்கள்? நான்கரை ஆண்டுகாலம் மத்திய அரசிடமும், மூன்று வருடங்கள் மாநில அரசிடமும் விளம்பரங்களைப் பெற்று தங்களை வளப்படுத்திக் கொள்ள முடிந்தது.

இப்பொழுது கருத்துக்கணிப்பு என்ற பெயரில் 21 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு மட்டும் 40 சதவீதத்திற்கு மேல் வாக்குவங்கி இருப்பதாக இந்த தொந்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருக்கிறது.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் டெப்பாசிட் கூட வாங்க முடியாத ஒரு கட்சி எப்படி 21 சட்டமன்றத் தொகுதிகளில் முன்னணியில் இருக்க முடியும்? தமிழ்நாட்டில் அந்த இரண்டு கட்சிகள் தான் இருக்கின்றவா? ஆளும் அதிமுக, தேசிய கட்சியான பாஜக, புதிய தமிழகம், தினகரனின் அமமுக, விஜயகாந்தின் தேமுதிக, பாமக, சரத்குமாரின் அஇசமக உள்ளிட்ட எந்தக் கட்சிகளுமே கூட்டணி குறித்து தங்களது நிலைப்பாட்டை அறிவிக்காத போது, அரைவேக்காட்டுத்தனமாக ஒருதலைபட்சமாக சர்வே செய்ய வேண்டிய அவசியம் என்ன? இந்தக் கருத்துக்கணிப்பு எவ்வளவு விசமத்தனமானது, குரோதமானது என்பதை ஒரு சான்றிலிருந்து நான் சொல்ல விரும்புகிறேன்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் 1996-ல் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிட்டு 27.32 % வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. 2001-ல் 42.59 % வாக்குகளைப் பெற்று, வெறும் 651 வாக்கு வித்தியாசத்தில் மட்டும் வெற்றி வாய்ப்பை இழந்தது. 2006-ல் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிட்டு 29.74 % வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது, அதிமுக வெற்றி பெற்றது, திமுக – காங்கிரஸ் கூட்டணி மூன்றாவது இடத்தையே பிடித்தன. 2011-ல் 56.41 % வாக்குகளைப் பெற்று புதிய தமிழகம் கட்சி வெற்றி பெற்றது. 2016-ல் 40.26 % வாக்குகளைப் பெற்று வெறும் 490 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு இழந்தது. தொடர்ந்து கடந்த 20 வருடங்களாக ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் வாக்குவங்கியில் முன்னணியில் இருக்கக்கூடிய புதிய தமிழகம் கட்சியின் செல்வாக்கை கருத்துக்கணிப்பு என்ற பெயரில் இந்த தொந்தி தொலைக்காட்சி முற்றாக மறைத்துள்ளது.

ஓட்டப்பிடாரம் மட்டுமல்ல, புதிய தமிழகம் கட்சிக்கு கணிசமான வாக்குவங்கி உள்ள சாத்தூர், பரமக்குடி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, திருவாரூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட பல சட்டமன்றத் தொகுதிகளிலும் இந்த தொந்தி தொலைக்காட்சி புதிய தமிழகம் கட்சியின் செல்வாக்கை திட்டமிட்டு மறைத்துள்ளது.
இன்று மட்டுமல்ல, கடந்த 20 வருடங்களாக இந்த தொந்தி பத்திரிக்கையும் தொந்தி தொலைக்காட்சியும் இதுபோன்றே நம்முடைய செல்வாக்கை மறைத்து வந்துள்ளன.

எனவே இதனை புதிய தமிழகம் கட்சிக்கு எதிரான தொந்தி தொலைக்காட்சியின் போராகவே கருதுகிறோம். நேற்று தொந்தி தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பு வெளிப்படையாகவும், நேர்மையாகவும் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு அல்ல; மாறாக, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு அந்தக் கட்சிக்கு ஆதரவாக வெளியிடப்பட்ட கருத்துத் திணிப்பு ஆகும். இது விசமத்தனமானதும், ஒருதலைபட்சமானதும், குறுகிய எண்ணம் கொண்டதுமாகும்.

இது தமிழகத்தின் பல அரசியல் கட்சிகளுடைய நலனுக்கு எதிரானதாகும்; இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தொந்தி தொலைக்காட்சியின் இந்த ஜனநாயக விரோதப் போக்கை தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் கண்டிக்க வேண்டும். இவர்களின் இந்த செயலை அனுமதித்தால் இது தமிழக மக்களுக்கு பேராபத்தாக அமைந்துவிடும். எனவே இந்த கருத்துத் திணிப்புகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். புதிய தமிழகம் கட்சியும், தேவேந்திரகுல வேளாளர்களும் இந்த தொந்தி பத்திரிக்கையையும், தொலைக்காட்சியையும் புறக்கணியுங்கள்; தங்களது கண்டனங்களைப் பதிவு செய்யுங்கள்.

இப்படிக்கு,
டாக்டர்.க.கிருஷ்ணசாமி,MD.Ex.MLA

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...