வைகோ., மீது ஹெச்.ராஜா ஆவேசப்பட அப்படி என்ன இருக்கிறது?

வைகோவால் கலிங்கப்பட்டியில் வார்டு கவுன்சிலராக ஆக முடியுமா? மோடி பற்றி பேச வைகோவிற்கு என்ன தகுதி இருக்கிறது என்று பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா ஆவேசப்பட்டு பேசியிருக்கிறார்.

ஆவேசப்பேச்சில் கைதேர்ந்தவர் மதிமுக., பொதுச் செயலர் வைகோ. அவர் பேச்சைக் கேட்டு மேலும் ஆவேசப் பட்டு பேச ஹெச்.ராஜா முயன்றிருப்பது தேவையற்றது என்றே தோன்றுகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு ஆதரவாகவே பேசி வந்தார் வைகோ. விஜயகாந்த், ராமதாஸ் உள்ளிட்டோரும் மோடிக்கு ஆதரவாகவே பேசி வந்தனர். அடுத்த தேர்தலில், மக்கள் நலக் கூட்டணிக்காக பாதை மாறிய வைகோ, உடனே தன் பேச்சை மாற்றிக் கொண்டார்.

அதற்கு முன்னதாக, திமுக.,வை எதிர்த்தே எல்லா மேடைகளிலும் படுகேவலமாகப் பேசி வந்தார். அவரது பேச்சைக் கேட்ட திமுக.,காரர் எவரும் வைகோவின் முகம் கண்டாலே காறித் துப்பும் மனநிலையில்தான் இருந்தார்கள். அதனால்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதியை தன் திடீர் பாசத்தால் பார்க்க வந்த வைகோவுக்கு செருப்பை எறிந்து கோபத்தை வெளிப்படுத்தினர் திமுக., தொண்டர்கள்.

இன்னும் சொல்லப் போனால், ஈழத்தமிழரை கொன்ற கட்சி திமுக., பார்வதிஅம்மாளை தரையிலேயே வரவிடாமல் திருப்பி அனுப்பியது திமுக தலைமை, சாதிக் பாட்சாவை கொன்ற கொலையாளி ஸ்டாலின், கனிமொழியை பலிகடாவாக்கி 2ஜி பணத்தை கொள்ளை அடித்தவர் ஸ்டாலின், மானமுள்ளவன் திமுக.,வுடன் கூட்டு வைக்கமாட்டான், தமிழுணர்ச்சி செத்துப் போனவந்தான் திமுக.,வுடன் பேசுவான் என்றெல்லாம் நார்நாராய் கிழித்துப் போட்டவர் வைகோ. அவரையும் திமுக.,வினர் ஏற்றுக் கொண்டு மேடை ஏற்றவில்லையா? திமுக.,வினர் காறித்துப்பினாலும், செருப்பைக் கொண்டு எறிந்தாலும் இப்போது வைகோ அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் வருங்கால முதல்வர் ஸ்டாலின் அவர்களே என்றெல்லாம் கூக்குரலிடவில்லையா?

ஹெலிகாப்டரில் பயணித்த போது மோடியை கை காட்டி ஹெலிகாப்டரில் ஏறி அமர்ந்து அளவளாவும் வைகோ…

நாளையே திமுக., கூட்டணியில் மதிமுக.,வுக்கு 2 தொகுதிகள்தான் என்று தொகுதிப் பங்கீடு பேசப் பட்டால், சுவரில் அடித்த பந்து போல வைகோ கூட ஒரு சீட் கொடுங்க என்று சொல்லி அதிமுக., கூட்டணியில் ஓட்டிக் கொள்வார். அப்போது பாஜக.,வும் அதே கூட்டணியில் இருந்தால்… வைகோ.,வுக்கு வேண்டுமானால் இந்த அரசியல் பழகிப் போய் இருக்கலாம்! ஆனால் பாஜக.,வினர் வைகோ விஷயத்தில் கொஞ்சம் உணர்ச்சிவசப் படாமல் இருப்பது நல்லது! நாளையே மோடிக்காக மீண்டும் தெருத்தெருவாக சுற்றி வந்து, நாளைய அமெரிக்க அதிபர் நரேந்திர மோடியே என்றோ, ஐ.நா.,வை வென்றெடுத்த ந.மோ., என்றோ ஏதாவது ஒரு குக்கிராமத்தில் வேனில் நின்றபடி பேசிக் கொண்டிருப்பார்…! அப்படிப்பட்ட ஒரு விளம்பரத் தூதரை பாஜக.,வினர் இழக்க வேண்டுமா என்று ஹெ.ராஜா யோசிக்க வேண்டும்!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...