ஆந்திரத்தில் தெரிந்த ஆவேசம்..! தமிழகத்தில் தணிந்த மர்மம்?

தமிழகத்தில் எந்த பிரதமருக்கும் இதுவரை இல்லாத எதிர்ப்பு, எந்த அரசியல்வாதிக்கும் இல்லாத எதிர்ப்பு, பிரதமர் மோடிக்கு மட்டும் காட்டப்படும் மர்மம் என்ன என்று எல்லோரும் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் போது, எந்த மாநிலத்திலும் வீராவேசம் காட்டும் மோடி தமிழகத்தில் மட்டும் அமைதியாகச் செல்வது ஏன் என்று இப்போது மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று மாலை தமிழகத்தில் பல்வேறு நலத் திட்டங்களைத் தொடங்கி வைக்க வந்திருந்தார் பிரதமர் மோடி. கோவை வந்து பின்னர் திருப்பூருக்கு வந்த மோடிக்கு உத்ஸாக வரவேற்பு கொடுக்கப் பட்டது. ஆனால் அதற்கு முன்னர் நண்பகல் அவர் ஆந்திரத்தில் பொதுக்கூட்டத்தில் பேசினார். அவரது பேச்சில் ஆவேசம் தெரிந்தது.

ஆந்திர மாநிலம் குண்டூரில் பேசிய பிரதமர் மோடி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்கினர். பாஜக.,வினர் சொந்தக்காசில் கட்சி வளர்க்கின்றனர். ஆனால் மக்கள் பணத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு போய் தில்லியில் அணிவகுப்பு நடத்தி கட்சியை நாட்டு மக்களுக்குக் காட்ட விரும்புகின்றார் என்றார். நாயுடு ஒரு திருஷ்டிப் பொட்டு போல் கருப்பு பலூர் பறக்கவிட்டார் என்றார். இன்னும் தனிப்பட்ட தாக்குதல்கள் அதிகம் இருந்தன. ஆனால் திருப்பூர் வந்த பிரதமர் பெயருக்கு வழக்கம் போல் காங்கிரஸை விமர்சித்து விட்டு, தமிழகத்துக்கு தாம் செய்த வளர்ச்சிப் பணிகள், வளர்ச்சித் திட்டங்கள் என்றெல்லாம் பேசி கூடியிருந்த பாஜக., தொண்டர்களையேகூட போர் அடிக்க வைத்தார்.

இவ்வளவுக்கும் தமிழகத்தில் மோடி குறித்து அவதூறுகள் மிக அதிகம். பாஜக.,வைத் தவிர பெரும்பாலும் எல்லாக் கட்சிகளுமே அவதூறுப் பிரசாரங்களை அள்ளித் தெளித்து வருகின்றனர். திமுக., மேற்கொண்டிருக்கும் வெறுப்பு பிரசாரமோ பொதுமக்களையே முகம் சுளிக்க வைக்கிறது.

வைகோ., உள்ளிட்டோரின் கருப்புக் கொடி, பலூன் ஆர்ப்பாட்டங்கள் இவ்வளவு நடந்தும், வைகோவை சந்தித்துப் பேசுகிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். இது குறித்து மோடி எந்த விமர்சனமும் செய்யவில்லை. திமுக.,வினரின் டிவிட்டர் பொய்ப் பிரசாரம் ஊரறிந்த உண்மை. ஆனால் அது குறித்தும் எதுவும் சொல்லவில்லை மோடி.

வரிசை கட்டி நிற்கும் தமிழக அரசியல் நிலவரம் குறித்தோ, பிரச்னைகள் பற்றியோ ஒரு வார்த்தை கூடப் பேசாமல், இவை எதுவுமே தமிழகத்தில் நடக்காமல் ஏதோ அமைதிப் பூங்காவாகத் தமிழகம் திகழ்வது போன்ற த்வனியில் சென்றார் மோடி. ஆனால் காரசாரமான தேர்தல் பிரசாரத்தை தமிழகத்தில் எதிர்பார்த்த பாஜக.,வினருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.

என்ன நடக்கிறது தமிழக பாஜக.,வில்! நடப்பவை எதுவுமே மோடிக்குத் தெரிவிக்காமல் தமிழக பாஜக.,வினர் மறைக்கிறார்களா? அல்லது இவை எல்லாம் வெறும் தூசு என்று தூசிதட்டிச் செல்கிறாரா மோடி..?!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...