தீமூகா கூட்டணியில் உறுதி… – அது போன வாரம்! டீடீவீ கூட்டணியில்… – இது இந்த வாரம்!

File Picture

தங்கம் விலை தினந்தோறும் ஏறி இறங்கி வருவது போல், பெட்ரோல் விலையும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிலையில் இருப்பது போல் ஆகிவிட்டது, தமிழகத்தில் அமையும் கூட்டணிகளின் நிலைமை.

நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நெருங்குகிறது. தேர்தல் கூட்டணி குறித்து ஒவ்வொரு கட்சியுமே தீவிரமாக யோசித்து ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் தவித்து வருகின்றனர். காரணம், இன்னமும் தெளிவான நிலை தெரியாததால்!

திமுக., அதிமுக. ,என்ற இரு பெரும் திராவிடக் கட்சிகளின் தலைமையில் தமிழகத்தில் கூட்டணி அமைகிறது. இந்நிலையில், இரு கட்சிக் கூட்டணிகளிலும் இடம் பெறாமல் தவிப்பவர்கள் தனியாக நின்று போட்டியிடாமல், மூன்றாவது அணி என்ற ஒன்றை அமைத்துப் போட்டியிடுவது வழக்கமான ஒன்றுதான்!

தற்போது, அதிமுக., பாஜக., ஆகியவை கூட்டணி இறுதி செய்யப் பட்டு விட்டதாகக் கூறி வருகின்றன. இருப்பினும் இன்னும் முழு விவரங்களைத் தெரிவிக்கவில்லை. கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளையும் இறுதி செய்து அறிவிக்க இயலவில்லை.

அடுத்து உள்ள மற்றொரு கூட்டணியான, திமுக. கூட்டணியில், காங்கிரஸ் அதிக இடங்களை எதிர்பார்ப்பதும், பத்துக்கும் மேல் போட்டியிட ஆர்வமாக இருப்பதும், திமுக.,வுக்கு நெருக்கடியைக் கொடுத்திருக்கிறது.

ஐந்தாறு தொகுதிகளுடன் காங்கிரஸ் கணக்கை முடித்துக் கொண்டு, அடுத்து உள்ள சிறு சிறு கட்சிகளுக்கு நான்கைந்து கொடுத்துவிட்டு, முப்பது இடங்களுக்குக் குறையாமல் போட்டியிட திமுக., தயாராகி வரும் நிலையில், கூட்டணிக்குள் குழப்பமே ஏற்பட்டு மிஞ்சியிருக்கிறது.

திமுக., கூட்டணியில், காங்கிரஸ் மட்டுமே இதுவரை உள்ளதாக துரை முருகன் தெளிவாகக் கூறியிருக்கிறார். கம்யூனிஸ்ட்கள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக., ஆகியவை கடந்த சட்ட மன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியாக களத்தைச் சந்தித்தன.

இந்நிலையில் திமுக., கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இருப்பதாக அதன் தலைவர் திருமாவளவன் மட்டுமே வலியுறுத்திக் கூறி வருகிறார். கூட்டணிக்குள் குழப்பத்தை உருவாக்க பலரும் முயற்சி செய்து வருவதாகவும், எனவே திமுக., கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் வெளியேறி விடும் என்பது போன்ற விஷமத்தனமான செய்திகளை நம்பவேண்டாம் என்றும் திருமாவளவன் கூறி வந்தாலும், நிலைமை என்னவோ அப்படித்தான் இருக்கிறது.

தற்போது மக்கள் நலக் கூட்டணி, திமுக.,வுடன் நெருக்கத்தில் இருந்தாலும், திமுக., கொஞ்சம் தள்ளியே பார்க்கிறது. மேலும், அதில் இருந்த தேமுதிக., மற்றும் பாமக., ஆகிய கட்சிகள் இரு தரப்பிலும் பேரம் பேசி வருவதாகவும் எது படிந்ததோ அந்தக் கூட்டணியில் இருக்கும் என்றும் கூறப் பட்டது.

திமுக.,வுடன் பாமக.,வும் பேரம் பேசி வருவதாக வெளியான செய்திகள், விட்டுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. காரணம், விசிக.,யின் பரம எதிரியான பாமகவுடன் கூட்டணி வைப்பது குறித்து திமுக பேசிக் கொண்டிருப்பது தங்களை அவமானப் படுத்துவது என்று விடுதலை சிறுத்தைகள் எண்ணுகின்றனர்.

இதனால்தான் பாமக இருக்கும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இருக்காது என்று அழுத்தம் திருத்தமாக ஆரம்பம் முதலே கூறி வருகிறார். இருப்பினும், திருமாவளவனை கூட்டணியில் இருந்து ஓரங்கட்டவே, பாமகவுடன் திமுக கூட்டணி குறித்து பேசினார்களா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில்தான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்களில் ஒருவரான வன்னி அரசு, தனது பேஸ்புக் பக்கத்தில் தொடர்ச்சியாக சில கருத்துகளைப் பதிவு செய்து வந்தார். ஏற்கெனவே வைகோ, விருதுநகரில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசியபோது, வன்னியரசு குறித்தும், திருமாவளவனுக்கு தாம் தேர்தல் செலவுக்குப்பணம் கொடுத்தது குறித்தும் பேசினார். அது அப்போது பிரச்னை ஆனது.

தற்போது, வன்னியரசுவின் கருத்துகள் திமுக., கூட்டணிக்குள்ளே பிரச்னையை ஏற்படுத்தியிருக்கின்றது. வன்னி அரசின் கருத்து, திமுகவுடன் கூட்டணி அமைப்பதை விடுதலைச் சிறுத்தைகள் விரும்பவில்லை என்பதைக் காட்டுவதாக கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தான், அமமுக.வின் டிடிவி தினகரன், கமல்ஹாசன், சரத் குமார், விஜயகாந்த் என சிலர் சேர்ந்து மூன்றாவது அணி உருவாக்கக் கூடும் என்றும், அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப் படும் என்று தகவல்கள் வெளியாயின.

இதற்கு வலு சேர்ப்பது போல், டிடிவி தினகரன், திருமாவளவன் தரப்புடன் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் மன ரீதியாகவும் ஒத்துப் போகும் என்பதால், மூன்றாவது அணி என ஒன்று அமையும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இதற்குக் காரணகர்த்தாவாக, அண்மையில் பதவி பறிப்புக்கு ஆளான காங்கிரஸ் தலைவரையே சிலர் சுட்டிக் காட்டுகின்றனர்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...