ராகுல் கையை தூக்கிப் பிடித்தார்! இப்போது அசிங்கப்படுகிறார்! – முதிர்ச்சியற்ற மு.க.ஸ்டாலின்!

திமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை தில்லியில் நடைபெற்று இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது. இன்று மாலை முகுல் வாஸ்னிக் சென்னை வருகிறார். கூட்டணி குறித்தும் தொகுதிகள் குறித்தும் அண்ணா அறிவாலயத்தில் வைத்து அறிவிக்க இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி, திமுக., கூட்டணியில் 15 தொகுதிகள் வரை கேட்டு வருவதால் திமுக அதற்கு ஒப்புக் கொள்ளாமல் இருந்தது. எளிதாக முடியும் எனக் கருதப்பட்ட
கூட்டணிப் பேச்சு, ஜவ்வாக இழுத்துச் சென்றது. முந்திரிக் கொட்டைத் தனமாக
திமுக., செய்த செயலே இப்போது அதற்கு வினையாகப் போயுள்ளது.

கருணாநிதி இருந்த வரை, தில்லியில் இருந்து காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள் சென்னை வந்து, திமுக.,வுடன் கூட்டணிக்காக முட்டி மோதுவார்கள். 2ஜி ஊழலில் சிக்கிக் கொண்ட போது, கடந்த 2009 தேர்தலின் போது தான், உண்ணாவிரத நாடகம் எல்லாம் போட்டு, இங்கே முதல்வராக இருந்த கருணாநிதி தில்லிக்கு காவடி எடுத்து, எப்படியாவது கூட்டணியை இறுதி செய்ய வேண்டும் என்று துடித்தார்.

இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில், அதுவரை காங்கிரஸை தாக்கிப்
பேசிய கருணாநிதி, ஊழல்களும் வழக்குகளும் துரத்திய போது, அதே சக்கர நாற்காலியில் அமர்ந்து, சோனியாவின் காலில் விழுந்து, எப்படியாவது கூட்டணி என்று கெஞ்சினார்.

அது அல்லாமல், பெரும்பாலும், காங்கிரஸாரே சென்னைக்கு வந்து கூட்டணியைப் பேசியிருக்கின்றனர். ஆனால் தற்போது திமுக பிரதிநிதிகள்  காங்கிரஸைத் தேடிச் சென்று கூட்டணிப் பேச்சை முடித்துக் கொண்டிருக்கின்றனர். காரணம், திமுக தலைவர் ஸ்டாலின்!

அனுபவமின்மை, அவசரக் குடுக்கைத் தனம், வழிகாட்ட தகுந்த நபர்கள் இன்மை இவற்றால் தள்ளாடும் ஸ்டாலின், தான் செய்யும் செயல்களுக்கான பின்விளைவுகளை அறியாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது அவருக்கு வினையாகத்தான் முடிகிறது.

வடக்கே உள்ள எல்லாக் கட்சிகளும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என அறிவிக்கத் தயங்கி ஒதுங்கும் நிலையில், தாமாக முன்வந்து, காங்கிரஸின் சதிவலையில் சிக்கிக் கொண்டார் ஸ்டாலின். சென்னைக்கு ராகுலை வரவழைத்து, தம் வாயாலே, அவர்தான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்ததில் தொடங்கி, திமுக., காங்கிரஸின் காலடியில் விழுந்து கிடப்பதும், ஸ்டாலின் தனக்கான பிடியை தவறவிட்டுவிட்டதும், உலகறிந்த ரகசியமாகி விட்டது.

இதனிடையே, திமுக., தரப்பு தொகுதிப் பங்கீடு குறித்து ரகசியமாகப் பேசப்பட்ட தகவல்கள் இப்போது ரகசியக் காப்பை மீறிக் கடந்து வெளியில் உலா வருகின்றன. காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளைக் கேட்டதாகவும், திமுக தரப்பில் முதலில் 6 தொகுதிகளுக்கு மேல் இல்லை என்று கூறி, பின்னர் 10 தொகுதிகள் வரை இறங்கி வந்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

கூட்டணிக்காக முட்டி மோதிய திமுக பிரதிநிதி கனிமொழி, காங்கிரஸ்
தலைவர் ராகுலைச் சந்தித்துப் பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சியின்
ஆலோசகர் அஹமது படேல், ப சிதம்பரம், தமிழக காங்கிரஸின் புதிய தலைவர் கே.எஸ்,அழகிரி உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்தப் பேச்சுவார்த்தையின் போது இறுதி முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது.

அப்போது, பாமக., அறிவிக்கும் கூட்டணி முடிவுக்காக திமுக., காத்திருந்ததும், பாமகவிற்காக ஒதுக்கி இருந்த இடங்களை  எங்களுக்குக் கொடுக்க வேண்டும் என
பகிரங்கமாக காங்கிரஸ் வலியுறுத்த, தொடர்ந்து இந்தப் பேச்சு 3 மணி நேரத்துக்கும் மேல் நீடித்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே, சூடு சுரணை என்றெல்லாம் ஸ்டாலின் பாமக., ராமதாஸைப் பற்றிப் பேசுவதற்குக் காரணம், ராமதாஸ் தம்முடன் கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்த்து கடைசிக் கட்டத்தில் ஏமாந்து போனதையும் வெளிப்படுத்தியுள்ளது. இது திமுக., தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று பௌர்ணமி முழு மதி நாள் என்பதால் கூட்டணியை இறுதி செய்து கையெழுத்திட்டது அதிமுக., தரப்பு! மேலும், மாசி மகம், ஜெயலலிதா பிறந்த ஜன்ம நட்சத்திரம் என்பதால், செண்டிமெண்டாக களத்தில் இறங்கி, இரு கட்சிகளுடன் கூட்டணியை இறுதி செய்து, கையெழுத்திட்டு, அறிவித்தது.

இன்று அடுத்த நாளான பிரதமை என்பதால், நல்ல செயல்களைச் செய்ய மாட்டார்கள் நம்பிக்கை உள்ளவர்கள். திமுக.,வுக்கு செண்டிமெண்ட் மீதோ, நாள் நட்சத்திரங்களின் மீதோ நம்பிக்கை கிடையாது என்பதால், இன்றைய தினம் கையெழுத்தாகி, இன்று அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.