எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்! மனதின் குரலைத் துவக்கும் வேளையில் இன்று என் மனம் கனத்துக் கிடக்கிறது.

10 நாட்களுக்கு முன்பாக, பாரத அன்னை தன் வீர மைந்தர்களை இழந்திருக்கிறாள். பராக்கிரமம் நிறைந்த இந்த வீரர்கள், 125 கோடி நாட்டுமக்களான நம்மனைவரையும் காக்கும் பொருட்டுத் தங்களையே இழந்திருக்கிறார்கள். நாட்டுமக்கள் நிம்மதியாக உறங்கவேண்டும் என்பதற்காக, நம்முடைய இந்த வீர மைந்தர்கள், இரவு பகல் எனப்பாராமல் தங்களை அர்ப்பணித்திருந்தார்கள். புல்வாமாவின் பயங்கரவாதத் தாக்குதலில், நெஞ்சுரம் நிறைந்த நம் வீரர்களின் தியாகத்திற்குப் பிறகு, நாட்டுமக்களின் மனங்கள் காயமடைந்திருக்கின்றன,

கோபத்தில் கொப்பளித்துக் கொண்டிருக்கின்றன. தியாகிகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் தொடர்பாக நாலாபுறத்திலிருந்தும் இரங்கல் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக உங்கள் மனங்களிலும் என் மனதிலும் ஏற்பட்டிருக்கும் ஆவேசமும் கொதிப்பும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனிடத்திலும் கனன்று கொண்டிருக்கிறது,

மனிதநேயம் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் உலகின் அனைத்து மனிதநேய சக்திகளுக்குள்ளும் கொதிப்பு இருக்கிறது. பாரத அன்னையைக் காக்க, தங்களது உயிர்களை அர்ப்பணம் செய்யும், தேசத்தின் தீரம் நிறை வீரர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். இந்தத் தியாகம், பயங்கரவாதத்தை வேரடி மண்ணோடும் அழிக்க நமக்கு நிரந்தரமாக உத்வேகம் அளிக்கும், நமது மனவுறுதியை மேலும் பலப்படுத்தும். தேசத்தின் முன்பாக இருக்கும் இந்த சவாலை எதிர்கொள்ளும் பணியை, நாமனைவரும் சாதியவாதம், மதவாதம், பிராந்தியவாதம் போன்ற அனைத்து கருத்து வேறுபாடுகளையும் மறந்து மேற்கொள்ளவேண்டும்; அப்போது தான் பயங்கரவாதத்திற்கு எதிராக நமது முனைப்புகளும் முடிவுகளும் உறுதியாக, கடுமையாக, முடிவேற்படுத்துவதாக அமையும்.

நமது ஆயுதப்படையினர் என்றைக்கும் எப்போதும் யாருக்கும் சளைக்காத சாகசத்தையும், பராக்கிரமத்தையும் வெளிப்படுத்தி வந்திருக்கின்றார்கள். அமைதியை நிலைநிறுத்த ஒருபுறம் அவர்கள் தங்கள் மிகச்சிறப்பான திறமையை வெளிக்காட்டும் அதே வேளையில், தாக்குதல் தொடுப்பவர்களுக்குப் புரியக்கூடிய அதே மொழியிலேயே பதிலிறுக்கும் பணியையும் புரிந்திருக்கிறார்கள். தாக்குதல் தொடுக்கப்பட்ட 100 மணி நேரத்திற்குள்ளாகவே எந்த வகையில் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை நீங்களே பார்க்கலாம்.

பயங்கரவாதிகளையும் அவர்களுக்குத் துணை செல்பவர்களையும் வேரோடு கெல்லி எறியும் உறுதிப்பாட்டை இராணுவத்தினர் மேற்கொண்டிருக்கிறார்கள். வீரம்நிறை இராணுவத்தினரின் உயிர்த்தியாகத்திற்குப் பிறகு, ஊடகங்கள் வாயிலாக அவர்களின் உறவினர்கள் வெளிப்படுத்தியிருக்கும் உத்வேகம் அளிக்கும் சொற்களும், கருத்துக்களும் பரவலாக்கம் செய்யப்பட்டு, நாடு முழுமையிலும் மன வலுவைக் கூட்டி பலம் அளித்திருக்கின்றன.

பிஹாரின் பாகல்புரைச் சேர்ந்த தியாகி ரத்தன் டாக்குரின் தந்தையார் ராம்நிரஞ்ஜன் அவர்கள், இந்த துக்ககரமான வேளையிலும் கூட, தன் உள்மனக் கிடக்கையை வெளியிட்டிருப்பது நம்மனைவருக்குமே உத்வேகம் அளிக்கிறது. எதிரிகளோடு போரிட தனது இரண்டாவது மகனையும் அனுப்புவேன் என்றும், தேவைப்பட்டால் தானுமே கூட களத்தில் இறங்கத் தயார் என்று அவர் கூறியிருக்கிறார்.

ஒடிஷாவில் ஜகத்சிங்புரைச் சேர்ந்த தியாகி பிரசன்னா சாஹூவின் மனைவி மீனா அவர்களின் எல்லையற்ற சாகசத்தை நாடுமுழுவதும் போற்றுகிறது. தனது ஒரே மகனையும் மத்திய எல்லைப்புறப் பாதுகாப்புப் படையில் சேர்ப்பேன் என்று சபதம் அவர் ஏற்றுள்ளார். மூவண்ணக் கொடியால் போர்த்தப்பட்ட தியாகி விஜய் ஷோரேன அவர்களின் பூதவுடல் ஜார்க்கண்டின் கும்லாவை அடைந்தபோது, அவரது பிஞ்சு மகன், நானும் இராணுவத்தில் இணைந்து பணியாற்றுவேன் என்று சூளுரைத்தான்.

இந்தப் பிஞ்சு உள்ளத்தின் பேராவல் தான் இன்று பாரதநாட்டின் ஒவ்வொரு குழந்தையின் உடலுக்குள்ளே, ஊனுக்குள்ளே, உயிருக்குள்ளே கலந்த உணர்வாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இப்படிப்பட்ட உயிர்ப்புள்ள உணர்வுகளைத் தான் நமது வீர தீர பராக்கிரமசாலிகளான தியாகிகள் ஒவ்வொருவர் வீட்டிலும் நம்மால் காண முடிகிறது. நமது எந்த ஒரு வீரருமோ, அவர் தம் குடும்பமுமோ இதற்கு விதிவிலக்கல்ல. அது தேவரியாவின் தியாகி விஜய் மௌர்யாவின் குடும்பத்தார் ஆகட்டும், காங்க்டாவின் தியாகி திலக்ராஜின் பெற்றோராகட்டும் அல்லது கோடாவைச் சேர்ந்த தியாகி ஹேம்ராஜின் ஆறு வயதே நிரம்பிய பாலகனாகட்டும் – தியாகிகளின் ஒவ்வொரு குடும்பத்தின் கதையும், உத்வேகத்தின் ஊற்றுக்கண்ணாய், உள்ளத்தைக் கரைப்பதாய் இருக்கின்றது.

இந்தக் குடும்பங்கள் எந்த உணர்வை வெளிப்படுத்தியிருக்கின்றனவோ, எந்த இலக்கை சுட்டுகின்றனவோ, அவற்றை நாம் அறிந்து, தெரிந்து, புரிந்து கொள்ள முயற்சிக்கவேண்டும் என்று நான் இளைய சமுதாயத்தினரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். தேசபக்தி என்றால் என்ன, தியாகம் – தவம் என்றால் என்ன, என்பது பற்றியெல்லாம் அறிந்து கொள்ள நாம் வரலாற்றின் கடந்த கால ஏடுகளைப் புரட்டிப் பார்க்கவேண்டும் என்ற அவசியமில்லை. நமது கண்களின் முன்னே, காட்சிப்பொருளாக, தெள்ளத் தெளிவாக, வாழும் எடுத்துக்காட்டுக்களாக இவர்கள் மலையென உயர்ந்து நிற்கிறார்கள், ஒளிபடைத்த பாரதத் திருநாட்டின் எதிர்காலத்துக்கான உத்வேகக் காரணிகள் இவர்கள் தாம், இவர்களே நமது கலங்கரை விளக்கங்கள்!

மனதின் குரல் – 53வது பகுதி
24.2.2019 அன்று வானொலியில் ஒலிபரப்பானதன் தமிழ் வடிவம்
ஒலிபரப்பு: அகில இந்திய வானொலி, சென்னை

தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...