தனித்துப் போட்டியிட தயங்க மாட்டோம்: பிரேமலதா எச்சரிக்கை!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தேமுதிக., தனித்துப் போட்டியிடத் தயங்காது என்று கூறியுள்ளார் தேமுதிக., பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.

அதிமுக., கூட்டணியா, திமுக., கூட்டணியா என்று இன்னமும் பேரம் பேசிக் கொண்டிருக்கும் தேமுதிக., குறித்துதான் இப்போது அனைவரின் பார்வையும் பதிந்துள்ளது. அதே நேரம், தேமுதிக.,வுக்கு வெற்றி பெறச் செய்யும் அளவுக்கு வலிமை இருப்பதை விட, அக்கட்சி தனித்து நின்றால் வாக்குகளைப் பிரித்து ஒரு வேட்பாளரை குறைந்த ஓட்டுகளில் தோல்வி அடையச் செய்யும் வலிமை உள்ளது என்பதுதான், இரு தரப்பும் தேமுதிக.,வின் பக்கம் பேரம் பேசிக் கொண்டிருக்கக் காரணம்.

இந்நிலையில், எந்தக் கூட்டணிக்கும் பிடிகொடுக்காமல், வைகோ.,வின் தூண்டுதலால் மக்கள் நலக் கூட்டணி தந்த மயான அடியில் இருந்து எழுந்திருக்கவே சிரமப் பட்டுக் கொண்டு இருக்கிறது தேமுதிக.! மக்கள் நலக் கூட்டணியின் படுதோல்வியின் போதே, விஜயகாந்த் இனி மதிமுக., விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவற்றுடன் கூட்டணி அமைந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். அப்போதும், கூட்டணி விவகாரத்தில், பிரேமலதா மற்றும் சுதிஷ் ஆகியோர் எடுத்த தவறான முடிவுகள் தான் இந்தத் தோல்விக்குக் காரணம் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினர் கட்சியின் மூத்த தலைகள் சிலர்.

இந்நிலையில், மக்கள் நலக் கூட்டணி தந்த மறக்க இயலாத தோல்வியைத் தொடர்ந்து  திமுக., கூட்டணியில் முதல் ஆளாக துண்டு போட்டு வைத்தார் வைகோ! 2016 தேர்தல்  நேரத்தில், மானமுள்ளவன், ரோசமுள்ளவன், தமிழுணர்ச்சி செத்துப் போகாதவன் தான் திமுக.,வுடன் கூட்டணி வைப்பான் என்று பேசிக் கொண்டிருந்த வைகோ, தோல்விக்குப் பின்னர் திமுக.,வுடன் நெருங்கினார். கருணாநிதியின் மீது மீண்டும் பாசமழை பொழிந்தார்.

ஆனால் இந்தக் காட்சிகளை எல்லாம் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் அரசியல் வெகுளி என்றும் அப்பாவி என்றும் வர்ணிக்கப்பட்ட விஜயகாந்த். இப்போதும், திமுக., கூட்டணியில் அதே மதிமுக., விடுதலைச் சிறுத்தைகள்தான் காத்திருக்கின்றன. சிதம்பரம் தொகுதியில் தானே போட்டியிடப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் தனக்குத்தானே கூட்டணித்  தலைமை என்ற எண்ணத்தில் அறிவித்துக் கொண்டார்.

இப்போது தேமுதிக.,வின் நிலைப்பாட்டுக்காக திமுக., காத்திருக்கிறது. வந்தால் என்ன செய்வது, வராவிட்டால் எப்படி பகிர்ந்து கொள்வது என்ற இரட்டை மனநிலையுடன் திமுக., கூட்டணிக் குழப்பத்தில் தவித்து மேற்கொண்டு முன்னேறாமல் தேங்கி நிற்கிறது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, திமுக.,வுக்கு அடி கொடுக்கும் விதமாக, ஸ்டாலின் சொன்னதை மாற்றிச் சொல்லி, எங்களுடன் திமுக., அரசியல் பேசியது. அப்படியே விஜயகாந்தின் உடல் நலமும் விசாரித்தார் ஸ்டாலின் என்று கூறி தூபம் போட்டிருக்கிறார். இதனால் நிச்சயம் திமுக.,வுக்குள் தன்மானம் சுயமரியாதை எல்லாம் பொங்கி தேமுதிக.,வை கழற்றிவிட யோசிக்கும் என்ற கருத்து பரவலாகியுள்ளது.

அதேநேரம், இன்று தேமுதிக., மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் பிரேமலதா செய்தியாளர்களிடம் பேசிய போது … மக்களவை தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 300க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு பெற்றுள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும், 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு கேட்டோம், ஒரே நாளில் 300க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

எனவே கட்சி இன்னமும் துடிப்புடன் இருக்கிறது.  கடந்த ஒரு தேர்தலை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு தேமுதிக.,வை எடை போடக் கூடாது! தேமுதிக.,வின் பலம் எங்களுக்கு நன்றாக தெரியும்!

நாங்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமையும்! இல்லாவிட்டால், நாங்கள் தனித்துப் போட்டியிட தயங்க மாட்டோம் என்று  கூறினார்.

எனவே தேமுதிக., மூன்றாவது அணி, அல்லது தனித்துப் போட்டி என்று களமிறங்க வாய்ப்புகள் உள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது. அதே போல், டிடிவி தினகரன், கமல்ஹாசன் ஆகியோரும் தனித்துக் களம் இறங்க முயன்று வருவதால், போட்டி பலமாகி, ஓட்டுக்கள் சிதறி  விடும் என்று கூறப்படுகிறது.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...