பாஜக., அதிமுக., ஆகியவற்றுடன் பாமக., கூட்டணி சேர்ந்துள்ள நிலையில், கசந்தவர்கள் பாமக.,வில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

அதிமுக.,வுடன் பாமக., கூட்டணி வைத்த முதல் நாளே பாமக இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜேஸ்வரி பிரியா விலகினார். பின்னர் அரசியல் இயக்கங்களில் இருந்து பழகியதால் கமலிடம் போய் தஞ்சமடைந்தார்.

இந்நிலையில், திரைத்துறையை, சினிமாவை, நடிகர்களை எதிர்த்து அரசியல் இயக்கம் நடத்தி வரும் பாமக.,வில் இருந்த நடிகரான ரஞ்சித், பாமக.,வில் இருந்து விலகியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கண்ட பாட்டாளி மக்கள் கட்சி ஊடக உலகிலும், பொதுவெளியில் எதிர்ப்பு அரசியல் இயக்கங்களாலும் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவராக இருந்த நடிகர் ரஞ்சித் கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும், பாமக மாநில துணைத் தலைவருமான ரஞ்சித், அக்கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், 4 பேருக்கு கூஜா தூக்கிக் கொண்டு என்னால் வாழ இயலாது. இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் மக்களை பாமக ஏமாற்றும். இளைஞர்கள், பொதுமக்களை நொடிப்பொழுதில் பாமக ஏமாற்றி விட்டது.

நான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த கட்சியில் சேர்ந்தேன். ஒரு நொடி பொழுதில் எனது கனவு தகர்ந்தது. நான் எனது பதவிகளை விளக்கிக் கொள்ள தான் உங்களை இங்கு அழைத்தேன். எனது அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் விலகி கொள்கிறேன். 8 வழிச் சாலைக்காக நான் மக்களை சந்தித்தேன். அதில் வழக்கு போட்டார்கள். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதை ஒரு நொடி நினைத்து பார்த்தார்களா? எப்படி கூட்டணி அமைக்க முடிந்தது?

முதல்வரையும் மாறி மாறி மடையன், புறம்போக்கு, அடிமை, ஆண்மை அற்றவர்கள் என கடந்த வாரம் வரை பேசி விட்டு, எப்படி அவர்களுடன் இணைந்து செயல்படுகிறார்கள். என்னால் ஜீரணிக்க முடியவில்லை. மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று நம்பி வந்த இளைஞர்களின் வாழ்க்கையில் மண் அள்ளி போட்டுள்ளார் அன்புமணி.

மதுக்கடைக்கு எதிராக போராடியவர்கள். மதுக்கடை வைத்திருப்பவர்கள் உடன் கூட்டணி வைத்துள்ளார்கள். தினமும் போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தினமும் செத்து கொண்டு இருக்கிறார்கள். நாமும் இதைப் போல் நினைப்பது இயல்பு தானே. ஒரு நல்ல தலைவன் முதல்வராக வரமாட்டாரா என்று. அதற்காக தான் அன்புமணியை தேர்ந்து எடுத்தோம்.

10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள் என்று சொல்கின்றனர். இது இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை. ஒரு நொடி பொழுதில் மக்களை ஏமாற்றலாமா. இது என்ன நாடகம் என்றால். உள்ளாட்சி தேர்தல் வரை ஒற்றுமையாக இருப்பார்கள். பின்பு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று கூறி கூட்டணியில் இருந்து விலகி கொள்வார்கள்.

இப்படி முட்டாள் தனமான கோரிக்கைகளை சொல்லலாமா. நான் இந்த கட்சியில் இருந்தபோது ஏதாவது தவறாக நடந்து இருந்தாலோ அல்லது தவறாக பேசி இருந்தாலோ உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் எனது தாயிடம் இதுபற்றி கேட்டேன் காரி துப்புகிறார்கள். வீட்டில் உள்ள அனைவரிடமும் பேசி முடிவெடுத்து உள்ளேன். நான் இந்த கட்சியில் இருந்து விலகி கொள்கிறேன். .. என்று கூறினார்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...