நாகர்கோவிலில் பொன்னாருக்கு ‘ரூட் க்ளியர்..’!?

தென் தமிழகத்தில் முக்கியமான இரு தொகுதிகள் கன்னியாகுமரியும் தூத்துக்குடியும்! காரணம் இங்கே ஜாதிய ஓட்டுகளையும், மத ஓட்டுகளையும் குறிவைத்து தேசியக் கட்சிகளான காங்கிரஸும் பாஜக.,வும்கூட இயங்குவதுதான்!

தூத்துக்குடி தொகுதியில் நாடார் இன ஓட்டுக்களைக் குறிவைத்து திமுக., சார்பில் கனிமொழி களம் இறங்கப் போகிறார். அதற்கான முன்னேற்பாடுகளை பலமாகச் செய்து வருகிறார்.

அவரை எதிர்த்து இங்கே போட்டியிட தமிழக பாஜக., தலைவர் தமிழிசை முட்டி மோதிக் கொண்டிருக்கிறார். அவரும் நாடார் இன ஓட்டுகளைக் குறிவைத்து இயக்குகிறார்.

அடுத்து கன்னியாகுமரி. நாகர்கோவில் பகுதியில் தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் அதிகம் என்பது ஊரறிந்த ரகசியம் என்றாலும், கடந்த சில வருடங்களாக, பாஜக.,வின் கை தனித்தே ஓங்கிய தொகுதி கன்னியாகுமரி. 96ல் கூட அந்த செல்வாக்கில் தான் வேலாயுதம் என்ற எம்.எல்.ஏ., பத்மநாபபுரம் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு வென்றார்.

இந்நிலையில், 2019 பொதுத் தேர்தலில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் சிவகங்கை, கன்னியாகுமரி, தேனி, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்கிறார்கள்.

கன்னியாகுமரி தொகுதியைப் பொறுத்தவரை அது பாஜகவின் கோட்டை என்ற நம்பிக்கை அக்கட்சியினருக்கு உண்டு. இந்தத் தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்து மத்திய இணை அமைச்சராக இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் தொகுதி மக்களிடம் நல்ல பெயரும் செல்வாக்கும் பெற்றிருந்தாலும், இங்குள்ள கிறித்துவ மிஷனரிகள் அவருக்கு எதிரான சில ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனவாம்.

இந்த தொகுதியில் 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளனர். நாடார் இன ஓட்டுக்கள் அதிகம். என்றாலும், இந்து நாடார், கிறிஸ்துவ நாடார் என மத ரீதியாக பிரிந்திருப்பதும் உண்டு. எனவே நாடார் இன ஓட்டுகளைக் குறிவைத்தே, வசந்தகுமார் இங்கே காங்கிரஸ் வேட்பாளராகக் களம் இறக்கப் படுவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. அவரே மத்திய இணையமைச்சராக உள்ள பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஒரு போட்டியாகவும் இருப்பார் என்றார்கள். காரணம், செல்வ வளத்தில் செல்வாக்கு பெற்றவர். செல்வ பலம், சொந்த டிவி என இருப்பவருக்கே இங்கு வாய்ப்பு அதிகம் என்று கருதப் பட்ட நிலையில், திடீரென வசந்தகுமார் இந்தத் தொகுதியில் நிற்பது கேள்விக்குறிதான் என்கிறார்கள் காங்கிரஸார்.

என்ன காரணம் என்பது குறித்து பெரிதாக தகவல்கள் வெளியாக வில்லை என்றாலும், வசந்தகுமார் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப் படுவதையே விரும்புகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டபோது கட்சியின் செயல்
தலைவர்கள் நால்வரில் ஒருவராக வசந்தகுமார் நியமிக்கப்பட்டார்! எனவே பிரசாரம் செயல்பாடு என்று தன்னை முன்னிறுத்திக்கொண்டு, மாநிலங்களவை வழியே நாடாளுமன்றம் செல்ல யோசித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் க்ரூஸ் நிறுத்தப்படலாம் என்கிறார்கள். கிறிஸ்தவ நாடார் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால், நாடார் வாக்குகளைப் பிரிப்பார் என்று நம்புகிறார்கள். எனவே நாடார் வாக்குகளை மட்டுமே குறிவைத்தால் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பலம் வாய்ந்த போட்டியாளராக இவர் இருப்பார் என்கிறார்கள்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...