spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு இந்து முன்னணியின் கோரிக்கைகள்!

தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு இந்து முன்னணியின் கோரிக்கைகள்!

- Advertisement -

ramagopalan2

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்து முன்னணி ஜனநாயக வழியில் செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு சில கோரிக்கைளை முன் வைத்துள்ளது. அவற்றை ஏற்று தங்களது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக தரும் அரசியல் கட்சியை இந்து முன்னணி ஆதரிக்கும்  என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்து முன்னணியின் கோரிக்கைகள் இவை…

தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளிடம் இந்து முன்னணியின் கோரிக்கைகள் :

ஆலயங்களைப் பாதுகாத்திட..

புராதனமான கோயில்கள், சிற்பங்கள், ஓவியங்கள், இறைவன் திருமேனிகள், அரிய கட்டிட கலைகள், நமது ஆயிரமாயிரம் ஆண்டு வரலாற்றிற்குச் சாட்சியாக இருக்கும் கல்வெட்டுகள் முதலானவற்றை, வழிபாட்டுடன் கூடிய பாதுகாப்பு திட்டத்தை வகுக்க வேண்டும்.

இயற்கை விவசாயம் முன்னுரிமை வழங்குக..

பசுஞ்சாண உரம், இயற்கை பூச்சிக் கொல்லி மருந்து போன்றவற்றை பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்ய ஊக்கப்படுத்த வேண்டும்.

நாட்டுப் பசு பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தருக..

நாட்டுப் பசுவை பாதுகாக்கவும், நாட்டு பசு இனம் பெருகிடவும் கவனம் கொடுக்க வேண்டும். மாட்டிறைச்சி ஏற்றுமதியையும், மாட்டுத்தோல் பொருட்களையும் தடை செய்ய வேண்டும். தோல் தொழிற்சாலைகளால் ஆறுகள், நிலத்தடி நீர் நாசமாகிறது. அதனால், சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு, நிலத்தடி நீர் பாழாவதுடன், மர்ம நோய்கள் பரவுகின்றன. எனவே, மாமிச ஏற்றுமதி, தோல் பொருட்கள் ஆகியவற்றைத் தடை செய்ய நடவடிக்கை தேவை.

இந்துக்களும் சேவை மையங்கள், கல்வி நிலையங்கள் நடத்திட அனுமதி.. சலுகை..

சிறுபான்மையினர், அவர்கள் மதத்தை பரப்பிடவும், மதத்தின் பெயரால் சேவை மையங்களும், கல்வி நிலையங்களும் நடத்திடவும் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. கல்வி துறையும் எந்தவித கட்டுப்பாடுமின்றி அனுமதி வழங்குகிறது. ஆனால், பெரும்பான்மையான இந்துக்களுக்கு இச்சலுகைகள் மறுக்கப்படுகின்றன. இந்த பாகுபாட்டை நீக்கி, இந்து சமுதாயத்தை, சமயத்தை பாதுகாத்திட, வளர்த்திட சேவை மையங்கள் நடத்திடவும், கல்வி நிறுவனங்கள் நடத்திடவும் அனுமதி அளித்திட வேண்டும். உரிய உதவித் தொகை, வரி சலுகை முதலானவையும் வழங்கிட வேண்டும்.

இந்து விரோத தொலைக்காட்சி, பத்திரிகைகள் போன்றவற்றின் மீது நடவடிக்கை..

தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் தொடர்ந்து திட்டமிட்டு இந்து விரோத கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. இதனை தடுக்க நடவடிக்கைத் தேவை.
குடும்ப உறவுகளை கெடுத்தும், கலாச்சார சீரழிகளை ஏற்படுத்தியும் ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி மெகா தொடர்களுக்கு தணிக்கை (சென்ஸார்) அவசியம். மதுக்குடிக்கும் காட்சிகளுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும்.

பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்..

எஸ்.டி.பி.ஐ., பி.எப்.ஐ. போன்ற இஸ்லாமிய அமைப்புகள் கொலை முதலான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக அந்த அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அந்த அமைப்புகள் தடை செய்யப்படவில்லை., அவர்களுக்கு உதவியவர்கள், குற்றவாளிகளை பாதுகாத்தவர்கள், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறவர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, முற்றிலும் பயங்கரவாதம் ஒழிக்க முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஊடக கருத்துரிமையை ஒழுங்குப்படுத்த வேண்டும்..

பொய்யுரை விவாதங்கள், தவறான தகவல்களைப் பரப்பும் தொலைக்காட்சி ஊடகத்திற்கும், சமூக ஊடகத்திற்கும் சட்ட கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும். கருத்துரிமை என்ற பெயரில் பொய்யான தகவல்கள், தேசவிரோத கருத்துக்கள் பரப்புவதையும், சமூக விரோத நிகழ்ச்சிகள் நடத்துவதையும் தடுக்க சட்டம் கொண்டுவந்து, கடுமையான நடவடிக்கைகள் மூலம் சமூக பொறுப்புணர்வோடு செய்திகள், கருத்துக்கள், விவாதங்கள் நடைபெற வழிகாண வேண்டும்.

தேச விரோத கருத்தை பரப்பும் பொதுக்கூட்டங்கள், பொது நிகழ்ச்சிக்குத் தடை..

தேசவிரோத கருத்துக்களை பரப்புகின்ற நகர்புற நக்ஸல் அமைப்புகளையும், பயங்கரவாத ஆதரவு அமைப்புகளையும் நாடு முழுவதும் களைவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பொருளாதாரத்தை சீர்குலைக்கும் போக்கை மாற்றுக..

பட்டாசு, நெசவு போன்ற உள்ளூர் தொழில்களை முடக்கும் போக்கு அதிகரித்துள்ளது. உள்ளூர் தொழில்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
தீபாவளி, ஜல்லிக்கட்டு, விநாயகர் சதுர்த்தி போன்ற இந்து பண்டிகைகளை திட்டமிட்டு ஏதேதோ காரணம் கூறி சீர்குலைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

மதமாற்றத்தை தடை செய்க..

மதமாற்றம் தேசிய அபாயம். இந்துக்களை குறிவைத்து நடத்தப்படும் மதமாற்றத்தை தடுக்க வேண்டும். ஆசைகாட்டி, அச்சுறுத்தி மதமாற்றுவதைத் தடுக்க தேசிய அளவில் சட்டம் இயற்றப்பட வேண்டும்.

நீர் நிலைகள், மலைகள், மழைக் காடுகள் பாதுகாக்கப்பட வேண்டும்..

நீர் நிலைகள், மலைகள், காடுகள் முதலானவை இறைரூபமாக பார்க்கப்பட்டதால் தான் இது நாள் வரை அவை இருக்கின்றன. சமீபகாலமாக கிறிஸ்தவ மிஷனரிகள் இவற்றை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றன. அதுபோல காடுகள், சதுப்பு நிலங்கள் முதலானவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்பாளர்களை அகற்றவும் உறுதியான நடவடிக்கை தேவை.

தேசத்தின் வளர்ச்சியை தடுக்கும் தேசவிரோத கும்பல் மீது தகுந்த நடவடிக்கை..

தவறான பிரச்சாரத்தின் மூலம் பொது மக்களைக் குழப்பி, தேசத்தின் வளர்ச்சியை தடுக்க நகர்புற நக்சல் மற்றும் என்.ஜி.ஓ.க்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இவர்களை ஒடுக்க உறுதியான சட்ட நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.

ஆன்மீக நம்பிக்கையை காத்திடக..

ஐயப்பன் கோயிலில் வழிபாட்டில் தேவையில்லாமல் தலையீட்டு உச்சநீதி மன்றம் தீர்ப்பு பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தை தனது அரசியல் ஆதாயத்திற்காக கேரள இடதுசாரி அரசாங்கம் பயன்படுத்திக்கொண்டுள்ளது. பக்தர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டும், ஐயப்ப வழிபாட்டில் ஆண், பெண் பாலின பாகுபாடு இல்லை என்பதை எடுத்துக் கூறியும், நெடுங்காலமாக இருந்து வரும் ஐதீகத்தை காத்திட உரிய நடவடிக்கையை சட்ட ரீதியாக எடுக்க ஆவண செய்ய வேண்டும்.

ஆன்மீக யாத்திரைக்கு சலுகை வழங்குக..

நாடு நெடுகிலும் இந்துக்கள் யாத்திரை சென்று வருவது தொன்றுதொட்டு நடைபெறும் ஆன்மிக நிகழ்வு. இதன் மூலம் பாரதத்தின் இறையாண்மை, ஒற்றுமை உணர்வு பலப்படுகிறது. எனவே, ஆன்மீக யாத்திரைக்கு சலுகைகள் வழங்கிடவும், பக்தர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து தரவும் முன் வர வேண்டும்.

பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை மாற்றிட நடவடிக்கை..

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ஓரினசேர்க்கை குற்றம் இல்லை என்றும், ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமண செய்துகொள்ளலாம் என்றும், தகாத உறவு தவறில்லை என்றும் நமது பாரத பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கு எதிரான வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்புகள் வழங்கி உள்ளது. இது மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை மாற்ற, சட்ட நடவடிக்கையை மேற்கொண்டு, நமது பாரம்பரிய பண்பாடு, நாகரிகம் காத்திட ஆவண செய்ய வேண்டும்.

கல்வியில்..

அனைத்து பள்ளிகளிலும் தாய்மொழியும், தேசிய மொழியான இந்தி மொழியும் கற்பிக்க தேசிய கல்வி கொள்கை வகுக்கப்பட வேண்டும். அத்துடன், ஆரம்பக் கல்வி கட்டாயம் தாய்மொழியில் அமைந்திட வேண்டும்.

ஒவ்வொரு நாளும், யோகா, விளையாட்டு மற்றும் நன்னேறிக் கல்வி வகுப்பும் பள்ளிகளில் இடம் பெற வேண்டும்.

மருத்துவ கல்லூரி நுழைவு தேர்வில் (நீட் தேர்வில்) இந்தியாவிலேயே அதிக இடங்களில் தமிழக மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதே சமயம், அதன் பலனை எல்லோரும் பெற்றிட, விருப்பம் உள்ள மாணவர்களுக்கு எட்டாம் வகுப்பு முதலே, இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

பள்ளியிலேயே தொழில் கல்வி கற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திட வேண்டும்.

சிறுபான்மையினருக்கு அளிக்கப்படும் கல்வி உதவித்தொகை போல, ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கிட வேண்டும்.

இந்து முன்னணி, வைக்கும் இக்கோரிக்கைகள் குறித்த உங்களின் மேலான பதிலை உடனே எதிர்பார்க்கிறோம்.

  • என்று அந்த அமைப்பின் சார்பில் இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe