நாடு நன்கு முன்னேறி வரும் நிலையில், நமக்கு வளர்ச்சிதான் முக்கியமே தவிர மத அடிப்படியில் மோடி மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டு, அவதூறு பரப்புவதை முஸ்லிம்கள் கைவிட வேண்டும். முந்தைய ஆட்சியை விட மோடி ஆட்சியில்தான் நாம் பாதுகாப்பாகவே இருக்கிறோம் என்பதை உணர வேண்டும் என்று தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்:

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்த போது…

என் மதத்தினர் பலர் மதத்தை மட்டுமே காரணமாக வைத்து மோடியை விமர்சித்து வருகின்றனர். அவர் மீது பல அவதூறுகளை பரப்பி வருகின்றனர்! தயவு செய்து அதை யாரும் செய்யாதீர்கள்! ஒருவர் மீது இப்படி அவதூறு பரப்புவது தவறு.

கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் நம் மக்கள் பாதுகாப்பாக வாழ்கின்றனர்! நாம் மதத்தை மையப்படுத்தி மோடியை எதிர்ப்பதால் தான் இந்துக்கள் மதத்தை மையப்படுத்தி மோடியின் பின்னால் அணிவகுக்கின்றனர். நாம் இப்படி மோடி மீது அவதூறு பரப்புவதால் நமக்குத்தான் இழப்பு! எனவே சகோதரர்கள் யாரும் அதை செய்யவேண்டாம்!

நம் நாடு இப்போது நன்கு முன்னேறி வருகிறது. நமது நாடு வல்லரசாக மோடி தேவை!

இந்துக்கள் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். நாமும் நாட்டு முன்னேற்றத்தில் பங்கு கொள்ள வேண்டும்.

மோடி அரசு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் பாகுபாடு எதையும் காட்டுவதில்லை! என்று கூறினார் ஷேக் தாவூத்.

ஷேக் தாவூத் இது குறித்து மேலும் கூறியபோது…

தமிழக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நலத் திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருவதால், அந்தக் கூட்டணியை ஆதரிக்கிறோம்! இந்தத் தேர்தலில் அதிமுக., கூட்டணியில் போட்டியிட தொகுதி கேட்டுள்ளோம். இரட்டை இலைச் சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்றார்.

அதிமுக., பாஜக., கூட்டணி குறித்துக் கூறியபோது, ஜெயலலிதா, மக்கள் தலைவராக இருந்தார். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததால், அதிமுக எதிர்க்கட்சியாக பணியாற்றியது. மத்தியில் இணக்கமான அரசு அமைந்தாலும், தமிழகத்துக்கு தேவையான நல்ல திட்டங்களை முழுமையாக கொண்டுவர இயலவில்லை. இந்தச் சூழலில், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரக்கூடிய சாத்தியக் கூறுகளின் அடிப்படையில், மாநில நலன் கருதி பாஜகவுன் அதிமுக கூட்டணி சேர்ந்திருக்கிறது என்பதை நாங்களும் வரவேற்கிறோம், இந்தக் கூட்டணியை ஆதரிக்கிறோம் என்றார்.

மேலும், பாஜக., ஆட்சியில் சிறுபான்மையினர் உரிமைகள் பறிக்கப்படுவதாக இஸ்லாமிய அமைப்புகளும் காங்கிரஸும் கூறும் போது, நீங்கள் அதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்று கேட்டபோது, பாஜக., குறித்து இஸ்லாமியர்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. 2014 மக்களவைத் தேர்தலில், இஸ்லாமிய மக்கள் அதிகம் உள்ள உத்தரப் பிரதேசத்தில் 73 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் இஸ்லாமியர்களும் வாக்களித்துதான் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்திருக்கிறது.

மேலும், காங்கிரஸ் ஆட்சியில்தான் பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடந்தது. காங்கிரஸ் நினைத்திருந்தால் அதை தடுத்திருக்கலாம். தமிழகத்தில் திமுக ஆட்சியில்தான் கோவை தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதற்காக கைது செய்யப்பட்டவர்கள் இன்னும் சிறையில் இருக்கிறார்கள். அப்படி இருந்தும், காங்கிரஸ், திமுகவுடன் சில இஸ்லாமியக் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

எனவே நாங்கள், எல்லாம் ஒன்றுதான். அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக நாங்கள் பிரசாரம் செய்வோம். இந்தத் தேர்தலில் கட்டாயம் நாங்கள் வெற்றி பெறுவோம். பாஜக ஏதாவது தவறு செய்தாலும் அதை தட்டிக் கேட்போம், போராடுவோம்.

பாஜக., ஆட்சியில்தான் நாட்டின் தொலைநோக்கு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப் பட்டுள்ளன. நதிநீர் இணைப்பு, விவசாயிகளுக்கான நலத் திட்டங்கள், அனைவருக்குமான மருத்துவக் காப்பீடு என பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது.

ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல் வரைதான் தலைவர்களை கட்சி சார்ந்தவர்களாக பார்க்க வேண்டும். வெற்றி பெற்று பிரதமராக தேர்வான பின்னர் ஒரு கட்சி சார்ந்தவராக பார்க்கக் கூடாது. மக்களுக்குக் கொண்டு வந்துள்ள திட்டங்களைத்தான் பார்க்க வேண்டும்… என்றார் அவர்.

இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் மசூதிகள் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் விதமாக, மத ரீதியாக பிரிவினை பேசும் போது,  இஸ்லாமியர்களின் அமைதியான வாழ்க்கைக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் ஆதரவாக வெளிப்படையாக ஷேக் தாவூத் கூறியுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...