தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த ஜனநாயக திருவிழாவின் முடிவில் மே மாதம் 23ம் தேதி அன்று மீண்டும் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி மீண்டும் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கடந்த 5 வருடங்களில் பாஜக அரசு செய்தது என்ன?

கடந்த கால காங்கிரஸ் ஆட்சியின் அவலங்களினால் நமது நாட்டின் கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சி, அமைதி பாதிக்கப்பட்டது. பணவீக்கம் அதனுடைய உச்சிக்கு சென்றது. தனிமனித செலவினங்கள் அதிகரித்தன. சேமிப்பு குறைந்தது.இதற்கெல்லாம் காரணம் முந்தைய ஆட்சியின் நிர்வாகமின்மை மற்றும் கொள்கை முடக்குவாதம். 2008ம் ஆண்டு துவக்கத்தில் 18 லட்சம் கோடியாக இருந்த வங்கி
கடன்கள் 2014 மார்ச்சில் 52 லட்சம் கோடியாக உயர்ந்தது.

கண்மூடித்தனமாக கொடுக்கப்பட்ட கடன்கள், சிபாரிசு மற்றும் முறையான பிணைகளில்லாமல் கொடுக்கப்பட்ட கடன்கள் இந்தியாவின் வங்கி துறையை மோசமான பாதைக்கு இட்டு சென்றது. ஒரு சில நிறுவனங்களுக்கு பல கணக்குகளில், கடனுக்கு மேல் கடன்களை வழங்கி அதிக வர்த்தகம் இருப்பது போன்ற மாயையை உருவாக்கியது.

ஒரு கடனை பெற்று முந்தைய கடனை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி கொண்டிருந்த மோசடியை பாஜக அரசு தடுத்து நிறுத்தியது. மார்ச் 2014 ல் 2.26 லட்சம் கோடியாக இருந்த வாராக்கடன்கள் மார்ச் 2018 ல் 8.96 லட்சம் கோடியாக உயர்ந்தது. அதாவது தொடர்ந்து ஏமாற்றி ொண்டிருந்தவர்களை அடையாளம் கண்டது பாஜக அரசின் நடவடிக்கை. வெறும் புத்தகத்தில் இருப்புநிலையில், சொத்துக்களாக (வாராக் கடன்களை) வெளிப்படுத்திய நிலையை மாற்றி அவற்றை இருப்பு நிலையிலிருந்து தள்ளி வைத்து (தள்ளுபடி அல்ல) வங்கிகளின் உண்மையான இருப்பை உணரவைத்தது பாஜக அரசின் கொள்கை முடிவுகள்.

தள்ளி வைக்கப்பட்ட இந்த வாராக்கடன்களை மீட்பதற்கு திருத்தப்பட்ட பல்வேறு புதிய சட்டங்களின் மூலம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்த காரணத்தினாலேயே, முந்தைய காங்கிரஸ் அரசின் சிபாரிசினால் பயன்பெற்றவர்கள் சிலர் தங்களின் சொத்துக்களை விட்டு விட்டு வெளிநாட்டிற்கு ஒடி சென்றனர். பொது துறை வங்கிகளுக்கு வரவேண்டிய தொகையை முழுமையாக வசூலிக்கும் கடுமையான சட்டங்களை கொண்டு வந்து மக்களின் பணத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் பாஜக அரசு
முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. வங்கிகளை ஏமாற்றிய கயவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டன.

வாஜ்பாய் அவர்களின் தலைமையிலான பாஜக அரசு 2004ல் விடைபெற்றபோது நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 8.4 விழுக்காடு. ஆனால் 2014ல் காங்கிரஸ் அரசு வெளியேறிய போது 4.8 விழுக்காடு. 2014 மார்ச்சில் 10.4 விழுக்காடு இருந்த நுகர்வோர் விலை பணவீக்கம், தற்போது 4.69 விழுக்காடு என்பது விலைவாசியை இந்த அரசு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதை தெளிவுபடுத்துகிறது.

காங்கிரஸ் அரசு இருந்த போது 4.5 விழுக்காடாக இருந்த நிதி பற்றாக்குறை 2017-18ல் 3.5 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, அடிப்படை விலைவாசி சரிந்து, தனிநபர்களின் சேமிப்பு அதிகரித்தது, செலவினங்கள் குறைந்தது பாஜக
அரசின் குறிப்பிடத்தக்க பொருளாதார கொள்கையினால், நிர்வாகத்திறனால் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி.

ஜன்தன், ஆதார், மொபைல் (JAM).

இதுநாள் வரை அரசு உதவி மற்றும் மானியங்களை பெற உள்ளூர் அரசியல்வாதிகளை எதிர்பார்த்து கொண்டிருந்த மக்களுக்கு ஜன்தன் கணக்குகளை துவக்கி, ஆதார் மற்றும் அலைபேசியுடன் இணைக்கப்பட்டு நேரடியாக பயனாளிகளுக்கான மானியத்தை/ வருவாயை மக்கள் வங்கிக்கணக்கில் செலுத்துவதன் மூலம் இடைத்தரகர்கள் மற்றும் போலி பயனாளிகள் ஒழிக்கப்பட்டதோடு, புதிய தேவையுள்ள பயனாளிகள் இணைக்கப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் மூலம், மக்கள் நல திட்டங்களில் நடைபெற்ற முறைகேடுகள் / ஊழல்கள் தடுக்கப்பட்டு இது வரை சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மதவாதம்

பருவ நிலை மாற்றத்தினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, உலக நாடுகள் பெட்ரோல், டீசல் மற்றும் நிலக்கரி பயன்பாட்டை குறைக்க அழுத்தம் கொடுத்த நிலையில், 2014ம் ஆண்டு ஐ.நா சபையில் உலக நாடுகள் மத்தியில் “எங்கள் நாட்டு மக்கள் முன்னேறிய நாடுகள் அனுபவித்த வசதியை இது வரை பெறவில்லை.

எங்கள் இயற்கை வளங்களை உபயோகித்து அவற்றை, அவர்கள் பெறச் செய்வோம். ஆனால், பருவநிலை மாற்றத்தினால் வரும் கேடுகளை சமாளிக்க எங்கள் நாட்டின் பாரம்பரிய கலை ஒன்று உள்ளது. அதைச் செய்தால் உடலுக்கு நேரும் தீங்குகளை தவிர்க்கலாம் என்று சொல்லி, நமது ‘யோகா’ கலையை உலகம் முழுவதும் உள்ள நாடுகளை (இஸ்லாமிய நாடுகள் உட்பட) ஏற்க செய்தார் நமது பிரதமர்.

ஆனால், இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் இதை மதரீதியாக சித்தரித்து சிறுபான்மை சமுதாயத்தினர் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தினர். அதே போல், பால் தரும் மாடுகள் உமிழும் மீத்தேன் வாயுவினாலேயே உலகம் முழுதும் 50 விழுக்காடு புவி வெப்பமயமாகிறது என்ற ஆய்வின் புரிதலின் படி உலக நாடுகள் பலவற்றிலும் உள்ளது போன்று கால்நடை சந்தைகள் ஒழுங்குபடுத்துதல் உத்தரவை அரசு வெளியிட்டபோது, அதை மாட்டிறைச்சிக்கு எதிராக பாஜக இருப்பதாக விஷம பிரச்சாரம் செய்து மக்களை குழப்பி பதட்டத்தில் ஆழ்த்தியதோடு பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் கேடுகளை சமாளிக்க இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட்டதோடு, மதரீதியாக இந்த விவகாரத்தை திசையை திரும்பின எதிர்க்கட்சிகள்.

இஸ்லாமிய பெண்களின் நலன் கருதி உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டுதலின் படி கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதாவை மாநிலங்களவையில் வரவிடாமல் செய்து சிறுபான்மையின பெண்களுக்கு எதிராக செயல்பட்டன எதிர்க்கட்சிகள். கிருஸ்துவ மதத்தை சார்ந்த ஜாகோபைட்(எதிர்) ஆர்தோடக்ஸ் பிரிவினருக்கிடையே நடந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமுல்படுத்த மறுத்த கேரள கம்யூனிஸ்ட் அரசு, அது மதம் சார்ந்த, உணர்வு சார்ந்த விவகாரம் என்றும் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் குறிப்பிட்ட கால கெடு விதிக்க வேண்டாம் என்றும் அரசு இதில் தலையிட்டு மக்களை அமைதிப்படுத்த நேரம் வேண்டும் என்று மனு செய்த கேரள அரசு, சபரிமலை விவகாரத்தில் அவசரமாக உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தியே தீருவோம் என்று துள்ளி குதித்தது மத சார்பின்மையா ? அல்லது ஹிந்து மத விரோதமா? எது மதவாதம்?

பெரும்பான்மை ஹிந்து மத நம்பிக்கைகளை தொடர்ந்து அவமதிக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் தி மு க கட்சிகளே மத விரோத கட்சிகள்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை:

2004ல் 35 விழுக்காடாக இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் 10 வருடங்களில் 86 விழுக்காட்டை எட்டியது கருப்பு பண சுழற்சிக்கு உதவியது. அத்தியாவசிய பொருட்களின் பதுக்கலுக்கு பயன்பட்டது. தீவிரவாதிகளின்
இயக்கத்திற்கு உதவியது.

இவைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையே பணமதிப்பிழப்பு நடவடிக்கை. வரித் தவிர்ப்பு, வரி ஏய்ப்பு, ணமோசடி, பயங்கரவாத நிதி போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளின் சட்டப்பூர்வமான கட்டமைப்பே போலி நிறுவனங்கள் (Shell Companies) அத்தகைய நிறுவனங்களுக்கு சொந்தமாக குறிப்பிடத்தக்க சொத்துக்கள் இருப்பதில்லை. மேலும் எந்த வணிக நடவடிக்கைகளும் முன்னெடுப்பதில்லை.

இந்த நடவடிக்கையால், 3,38,000 போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு, அதன் இயக்குனர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதுவரையில் 1,3 லட்சம் கோடிக்கும் அதிகமாக கணக்கில் வராத ‘வருமானம்’, வரி விதிப்பிற்குள் வந்துள்ளன. அதாவது பல லட்சம் கோடிகள் புழக்கத்தில் இருந்த கறுப்புப்பணம் முறையாக வங்கி பரிமாற்றங்களுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கருப்பு பணம் புழக்கம் தடைப்பட்டதால் வீக்கமாகியிருந்த நிலங்களின் விலை நாடு முழுவதும் கணிசமாக குறைந்தது இந்த நடவடிக்கையின் சிறப்பு. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு நாட்டில் கள்ள நோட்டுக்கள் புழக்கம், மோசடிகள் குறித்த சம்பவங்கள் குறைந்திருப்பது குறித்து அதிகம் விவாதிக்கப்படவில்லையென்றாலும், இது குறிப்பிடத்தக்க வெற்றியே.

பொருள் மற்றும் சேவை வரி (GST)

நீண்ட காத்திருப்புக்கு பின் வெளிப்படையான வரி முறையை சீரமைத்து அமுல்படுத்திய நிலையில், இரு மடங்கு வருவாயை அரசுக்கு அளித்துள்ளது ஜி
எஸ் டி. இது நாள் வரை வரி தவிர்த்து, வரி ஏய்ப்பு செய்து கொண்டிருந்தவர்கள் இனி முறையாக வரி செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டதோடு மக்கள் நல பணிகளுக்கு செலவிட நிதி பெருக்கத்தை ஏற்படுத்த உதவியுள்ளது.

அதே வேளையில், முறையாக வரிசெலுத்தி வர்த்தகம் நடத்திக் கொண்டிருந்தவர் களுக்கு லாபம் அதிகரித்து, வெளிப்படையான, எளிமையான வரி முறையை அளித்தது அரசு. இது நாள் வரை வரி செலுத்தாமல் 5000 ரூபாய்க்கு விற்று கொண்டிருந்த ஒரு பொருளின் விலை, 18 விழுக்காடு வரிவிதிப்பின் அடிப்படையில் சுமார் ரூபாய் 1000 /- அதிகரித்து 6000 ரூபாய்க்கு விற்பனையாகும்.

ஆனால், இதுநாள் வரை வரி செலுத்தி 6000 ரூபாய்க்கு முறையாக விற்பனை செய்து கொண்டிருந்தவர்கள் 32 விழுக்காடு வரிசெலுத்தி கொண்டிருந்தார்கள் என்பதும் தற்போது அந்த பொருட்கள் 18 விழுக்காடு வரியில் சுமார் 800 ரூபாய் விலை குறைந்தன எனபதும் சிறப்பு. வருங்காலத்தில் ெளிப்படையான, நேர்மையான, எளிமையான வரிவிதிப்பு முறை கட்டமைக்கப்பட்டு அரசின் நிதி நிலைமை மேம்படையும் அதே நேரத்தில், பொருட்களின் விலைகளும் கணிசமாக குறையும்.

விவசாயம்;

2007ல் எம் எஸ் சுவாமிநாதன் தலைமையிலான விவசாயிகளுக்கான தேசிய ஆணையம் பல்வேறு விவசாய சீர்திருத்தங்களை கொடுத்த பின்னரும் முந்தைய அரசு அதை கிடப்பில் போட்டிருந்தது. 201 பரிந்துரைகளில் 191 பரிந்துரைகளை பாஜக அரசு, பல்வேறு துறைகளின் மூலம் அமுல்படுத்தி வருகிறது. குறிப்பாக மண் வள
அட்டை திட்டம்,உரங்களை வழங்கும் முறைகள் மாற்றியமைப்பு, மானியங்கள், நீர் மேலாண்மை, காப்பீடு போன்றவற்றில் பல மாற்றங்களை கொண்டு வந்ததோடு சுதந்திர இந்தியாவில் இது வரை இல்லாத அளவிற்கு விவசாய துறைக்கு நிதி
ஒதுக்கியது, 11 லட்சம் கோடி விவசாய கடன் ஒதுக்கியது பாஜக அரசு. விவசாயிகளின் லாபத்தை இரட்டிப்பாகும் முயற்சிக்கான அனைத்துக் கட்டமைப்புகளையும் கடந்த 4 வருடங்களில் செய்து வந்த பாஜக அரசு, தற்போது 1.5 மடங்கு குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்திருப்பது சிறப்பு.

பல்வேறு மாநிலங்களில் உள்ள வேறுபட்ட தன்மையால் விவசாயிகளுக்கான விலையை இரு மடங்காக்கும் முயற்சியில் சில இடர்பாடுகள் ஏற்பட்டாலும், விரைவில் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க செய்யும். சந்தைப்படுத்துதலில் தேசிய வேளாண் சந்தை, மின்னணு சந்தை போன்ற அறிய திட்டங்களை முன்னிறுத்தி விவசாயிகளின் லாபத்தை இரு மடங்காக்கும் முயற்சியில் வெற்றி பெறும்.

தமிழகம்:

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் காளைகளை காட்சிப்படுத்தக்கூடாத பட்டியலில் இணைத்து தமிழகத்திற்கு அநீதி இழைத்த தி மு க, காங்கிரஸ் அரசினால் ஜல்லிக்கட்டுக்கு எதிரான தீர்ப்பு வந்த நிலையில்,தமிழக அரசை அறிவுறுத்தி
அவசர சட்டத்தை கொண்டு வந்து ஒரே நாளில் குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று தந்தது பாஜக அரசு.

உச்சநீதிமன்றம் நீட் தேர்வை கட்டாயம் நாடு முழுதும் அமுல்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பையடுத்து, நீட் விவகாரத்தில் தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவசர சட்டத்தின் மூலம் ஒரு வருட விலக்கை அளித்தது பாஜக அரசு.

காவேரி தீர்ப்பாயம் கொடுத்த தீர்ப்பை அரசு இதழில் வெளியிட தி மு க அங்கம் வகித்த அரசு 7 வருடங்கள் எடுத்து கொண்டன.ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று கொண்டு காவேரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து தமிழகத்திற்கு நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த நீதியை நிலைநாட்டியது பாஜக அரசு.

ஜி எஸ் டி வரி விதிப்பின் மூலம் அதிக வருவாயை தமிழகம் ஈட்டுவதற்கு காரணம் பாஜக அரசு.

முத்ரா கடன் திட்டம், பயிர் காப்பீட்டு திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம், இலவச எரிவாயு திட்டம், சுகாதார காப்பீடு திட்டம், விவசாயக் கடன்கள் ஆகிய திட்டங்களை ஊழலில்லாமல் நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்த்தது பாஜக அரசு.இதில் பெரும்பாலான திட்டங்களில் இந்தியாவிலேயே அதிக பயன் பெற்ற மாநிலம் தமிழகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லஞ்ச, ஊழலற்ற வெளிப்படையான ஆட்சி, சிறந்த பொருளாதார வளர்ச்சி, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தி, பொது மக்களின் உயிர்களை பலி வாங்கி கொண்டிருந்த குண்டு வெடிப்புகளில்லா ஐந்து வருடங்கள், கட்டமைப்புகளை பெருக்கும் வளர்ச்சி திட்டங்கள் மேலும் தொடர, ஒவ்வொரு வாக்காளரும் முடிவு செய்யட்டும் தான் யார் பக்கம் என்பதை!

கட்டுரை: நாராயணன் திருப்பதி (பாரதிய ஜனதா கட்சி)

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...