கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைக்கப்படும்: சீதாராம் யெச்சூரி

seetharam_yechury விசாகப்பட்டினம்: இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் இணைக்கப்படும், அதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன என்று மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார். நேற்று விசாகப் பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய சீத்தாராம் யெச்சூரி இதனைக் குறிப்பிட்டார். செய்தியாளர்களிடம் அவர் பேசிய போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளையும் ஒன்றாக இணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இரு கட்சிகளையும் ஒன்றாக இணைப்பதற்கு கால அளவை நிர்ணயிக்கவில்லை. முடிந்த அளவுக்கு விரைவில் இரு கட்சிகளையும் ஒன்றாக இணைக்க முயற்சி செய்து வருகிறோம். அது, அடுத்த 2 மாதங்களிலும் நடக்கலாம் அல்லது 6 மாதங்களிலும் நடக்கலாம். ஆனால், இரு கட்சிகளும் ஒன்றாக இணைவது நிச்சயம் என்று குறிப்பிட்டார். முன்னதாக அவர் பொதுச் செயலராகத் தேர்வு செய்யப்பட்ட பின்னர் கட்சியினரிடையே பேசும்போது, ஜனநாயக சக்திகளையும், இடதுசாரி இயக்கத்தையும் வலுப்படுத்த வேண்டியது நமது பணி. உலக அளவில், முதலாளித்துவத்தால் ஏற்படும் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. இந்தப் பிரச்னைக்கு, தீர்வு காண சோஷலிசத்துக்கான போராட்டத்தை வலுப்படுத்துவதைத் தவிர வேறு மாற்று எதுவும் கிடையாது. மனித சமுதாயத்தின் எதிர்காலம் சோஷலிசத்தையே சார்ந்துள்ளது என்றார்.