மே 14ல் சிறை நிரப்பும் போராட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

d-raja-cpiபுதுச்சேரி: மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து வரும் மே மாதம் 14ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. மேலும், அன்றைய தினம் ரயில் மறியலும் முற்றுகை போராட்டமும் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார். மார்ச் மாதம் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது அகில இந்திய மாநாடு குறித்த மறு ஆய்வுக் கூட்டம் புதுச்சேரியில் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதன் பின்னர் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களிடம் பேசியபோது… மத்திய அரசு விவசாயி விரோதப் போக்குடன் செயல்படுகிறது. விவசாயத்தை பாதிக்கும் வகையில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டுவரும் முயற்சியில் உள்ளது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறை நிரப்புதல், ரயில் மறியல், ஆர்ப்பாட்டம், உள்ளிட்ட அனைத்து வகையான போராட்டங்களையும் மே 14 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும். நிலம் கையகப் படுத்தும் சட்டம் மட்டுமல்லாது, வகுப்புவாதக் கொள்கையைப் புகுத்த முயற்சி செய்து வருகிறது. மோடி தலைமையிலான ஆட்சியின் கீழ் ஆர்எஸ்எஸ். விஎச்பி, சங் பரிவார் அமைப்புகள் தங்கள் வகுப்புவாதக் கொள்கைகளை தீவிரமாக பரப்ப முனைந்துள்ளன. மதவாத அடிப்படையில் நாட்டைப் பிளவுபடுத்த பா.ஜ.க. அரசு ஊக்குவிக்கிறது. எனவே, அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மத்திய பா.ஜ.க. அரசை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றார் ராஜா.