சீத்தாராம் யெச்சூரிக்கு ராமதாஸ் வாழ்த்து

சென்னை:
மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக சீத்தாராம் யெச்சூரி தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு பாமக நிறுவுனர் ராமதாஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த வாழ்த்துச் செய்தியில்,
மார்க்சீய பொதுவுடமைக் கட்சியின் ஐந்தாவது பொதுச்செயலாளராக சீத்தாராம் யெச்சூரி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் இக்கட்டான சூழலில் இந்த புதிய  பொறுப்பேற்றுள்ள யெச்சூரி அவரது அனைத்துக் கடமைகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்டை மாநிலமான ஆந்திரத்தைச் சேர்ந்த யெச்சூரி சென்னையில் பிறந்தவர். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே மார்க்சீய கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அந்த கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். 2004 ஆம் ஆண்டில் அப்போதைய மத்திய ஆட்சிக்கு எதிராக  வலுவான அணி அமையவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி புதிய அரசு அமைக்கவும் மார்க்க்சீய பொதுவுடமைக் கட்சியின் அப்போதைய பொதுச்செயலாளர் மறைந்த ஹர்கிஷன்சிங் சுர்ஜித் அவர்களுடன் இணைந்து உழைத்தவர். அனைத்துக் கட்சிகளிலும் நண்பர்களைக் கொண்ட இவரது தலைமை மார்க்சீய பொதுவுடமைக் கட்சிக்கு வலுசேர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதேபோல், மார்க்சீய பொதுடமைக் கட்சியின் செல்வாக்கு மிகுந்த அமைப்பான அரசியல் விவகாரக் குழுவின்(பொலிட்பீரோ) உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள ஜி. ராமகிருஷ்ணனுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். – என்று குறிப்பிட்டுள்ளார்.