‘கோட்சே’க்கு தடையில்லை; நாதுராம் கோட்சேக்கு தடை: சுமித்ரா மகாஜன்

புதுதில்லி: மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேயின் பெயர் ஒன்றும், நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத சொல் இல்லை என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார். கோட்சே பெயர் ‘பயன்படுத்தக் கூடாத சொல்’ என்று நாடாளுமன்றம் தடை செய்திருந்தது. இந்நிலையில், இதனை நீக்க வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில நாசிக் தொகுதி சிவசேனா எம்.பி., ஹேமந்த் துகாராம் கோட்சே தொடர்ந்து குரல் கொடுத்தார். எம்.பி.யாக உள்ள தனது பெயரின் கடைசிப் பெயரில் இடம் பெற்றிருக்கும் கோட்சே என்ற சொல்லை பயன்படுத்தவும் தடை விதிப்பதில் நியாயம் இல்லை என்று அவர் நாடாளுமன்றம், மக்களவைத் தலைவருக்கும் மாநிலங்களவைத் தலைவருக்கும் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், இந்தத் தடையை நீக்கி மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் நாடாளுமன்றத்தில் ‘நாதுராம் கோட்சே’ என்ற பெயர் பயன்படுத்தக்கூடாத சொல் பட்டியலில் தொடர்ந்து இருக்கும் எனத் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.