இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு தேவை: மார்க்சிஸ்ட் தீர்மானம்

விசாகப் பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற போர் முடிவடைந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை. தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக அதிபர் சிறிசேனா தலைமையிலான அரசு வாக்குறுதிகளை அளித்து சில நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. என்றாலும் பிரச்சினைகள் நீடிக்கின்றன. இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் நிரந்தர தீர்வு காண வேண்டும். இலங்கை அரசு 13-வது அரசியல் சட்ட திருத்தத்தை நிறைவேற்றி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வேண்டும். சிங்களர்களை போன்று தமிழர்களுக்கும் சமஉரிமை உரிமை வழங்க வேண்டும். தமிழர்கள் பகுதியில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும். 2009-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டது பற்றி நம்பந்தகுந்த, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஐ.நா. பொதுச் செயலாளர் நியமித்த நிபுணர்கள் குழு வழங்கிய சிபாரிசுகள் நிறைவேற்றப்படவேண்டும். இலங்கை அகதிகள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்ல விரும்பினால் அவர்கள் அங்கு சென்று கவுரவத்துடன் வாழ்வதை இந்திய அரசும் இலங்கை அரசும் உறுதி செய்ய வேண்டும். இலங்கையில் புதிய அரசியல் சூழ்நிலை உருவாகி இருப்பதால் அந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் விரைவில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டது.