கட்சியை பிளவுபடுத்த ஒரு கட்சி முயற்சி செய்கிறது: இ.கம்யூ., தா.பாண்டியன்

Tha-Pandiyan சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பிளவுபடுத்த ஒரு தமிழக அரசியல் கட்சி தூண்டிவிடுகிறது என்றும், அதை விரைவில் பகிரங்கப்படுத்துவேன் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்தார். சென்னை தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,. “ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழக கூலித் தொழிலாளர்கள் கடந்த 6ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர். அநியாயமாக கொல்லப்பட்ட தமிழக கூலித் தொழிலாளர்களுக்கு ஆந்திர அரசும், தமிழக அரசும் நிதி உதவி செய்ய வேண்டும். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அவசரச் சட்டமாக கையில் எடுத்திருக்கிறது மத்திய அரசு. இது விவசாய நிலத்தைப் பறிக்கும் சட்டம். அதை அதிமுக ஆதரிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். நாடே எதிர்க்கிற போது, தமிழக அரசும் எதிர்க்க வேண்டும். கடந்த 2 நாட்களாக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தி வருகிறது… கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாட்டில் மாநிலச் செயலாளராக முத்தரசன் தேர்ந்தெடுக்கப்பட்டதில் முறைகேடு, வாக்குப்பதிவு சரியாக நடத்தவில்லை என 2 பேர் குற்றம்சாட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். கட்சி உறுப்பினர்கள் என்று குறிப்பிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்கள் மாநிலக்குழு உறுப்பினர்கள் அல்லர். அவர்கள் ஒழுங்குமுறையை மீறியவர்கள் ஆகிறார்கள். இந்த வழக்கைத் தொடர்ந்தவர்கள் வெறும் ஏவப்பட்ட அம்புகள் தான். தேர்தலை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியை பிளவுபடுத்த தமிழ்நாட்டின் ஒரு அரசியல் கட்சி தூண்டிவிடுகிறது. அதை விரைவில் பகிரங்கமாக உரிய காலத்தில் வெளியிடுவேன். எங்களைப் பொறுத்தவரையில் விதிகள் மீறப்படவே இல்லை. இதுபோன்ற சீர்குலைக்கும் செயல்களை ஒழிப்பதில் கட்சி தோழர்கள் ஒன்றுபட வேண்டும்” என்று கூறினார்.