சோனியா நிறம் குறித்த விமர்சனம்: நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரினார் கிரிராஜ் சிங்

புது தில்லி: சோனியா காந்தியின் நிறம் குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கிஷோர் முன்னர் கூறிய கருத்துக்கு இன்று நாடாலுமன்றத்தில் மன்னிப்பு கோரினார். அவரது இந்தக் கருத்துக்கு இன்று எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை கூடிய சிறிது நேரத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் மக்களவை கூடியதும் கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு சோனியா குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியது குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜோதிர் ஆதித்யா சிந்தியா ஆகியோர் வலியுறுத்தினர். அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் இதற்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால், அவையை நண்பகல் 11.45 மணி வரை ஒத்தி வைத்தார் சுமித்ரா மகாஜன். பின்னர் அவை கூடியதும் சோனியா காந்தி குறித்த தமது பேச்சுக்கு மன்னிப்பு கேட்பதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார். சுமார் ஒரு மாத கால இடைவெளிக்குப் பின்னர் மக்களவையில் இன்று கூடியது. மே மாதம் 8ஆம் தேதி வரை மக்களவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.