முதல்வரின் கார் முன் படுத்து, தடியடி வாங்கி போராடவும் தயார்: குஷ்பு

KUSHBOOசென்னை: எந்தப் போராட்டமானாலும் என்னை ஒதுக்கிவிடாதீர்கள், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கார் முன்னர் தலை கொடுத்துப் படுத்தும் போராடத் தயாராகத்தான் இருக்கிறேன் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமை தாங்கினார். முற்பகல் 11 மணிக்குத் தொடங்கிய கூட்டம் மூன்று மணி நேரம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், எழுத்தாளர் ஜெயகாந்தன், பேராசிரியர் கிள்ளிவளவன், ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்கள் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் உட்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் பேசிய குஷ்பு, 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும். முன்னதாக மக்கள் பிரச்னைகளை முன்வைத்து போராட்டங்களையும் நடத்த வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக நான் இருந்தாலும், தமிழகத்தில் காங்கிரஸ் நடத்தும் போராட்டங்களில் என்னை ஒதுக்கிவிட வேண்டாம். எல்லாப் போராட்டங்களிலும் நான் பங்கேற்க தயார். காங்கிரசார் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கும், போராட்டங்களுக்கும், நான் வர மாட்டேன் என, யாரும் கருத வேண்டாம். காங்கிரசை வளர்க்கத் தான், கட்சியில் இணைந்தேன். அதிமுக அரசை எதிர்த்து, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கார் முன்பு படுத்து போராட வேண்டுமா?, எதற்கும் நான் தயாராக இருக்கிறேன். முதல்வர் வீட்டின் முன், காங்கிரசார் போராட்டம் நடத்தினால், அதில் நானும் கலந்து கொள்வேன். போராட்டம் நடத்தி, சிறை செல்லவும் தயார்; ஏன், போலீசார் தடியடி நடத்தினால், அதையும் ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்று பேசினார்.