விவசாயி தற்கொலை: ஷாருக் கான் அறிவுரையுடன் கூடிய அனுதாபம்

தில்லியில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், ஒருவருக்கு ஒருவர் பழி கூறிக் கொள்வதை நிறுத்திக் கொண்டு ஆவன செய்யுமாறு நடிகர் ஷாருக்கான் வலியுறுத்தியுள்ளார். நிலம் கையகப்படுத்தும் மசோதாவைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் தில்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற பேரணியில், கேஜ்ரிவால் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் விவசாயி ஒருவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் ஒன்றுக்கொன்று பழி சுமத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தனது ட்விட்டர் பதிவில், “தங்கள் வாழ்வை முடித்துக் கொள்வதற்காக யாரும் தற்கொலை செய்வதில்லை, தங்கள் வேதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே அவர்கள் அவ்வாறு தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒரு நொடி சிந்தியுங்கள். அவர்கள் வேதனையை உணர்ந்து பாருங்கள். அதை விடுத்து ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.