விவசாயி தற்கொலை எனத் தெரிந்தும் நான் பேசியிருக்கக் கூடாது: கேஜ்ரிவால் கேட்டார் மன்னிப்பு

புது தில்லி: ஆம் ஆத்மி பொதுக் கூட்டத்தில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் எனத் தெரிந்தும், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டும் நான் என் பேச்சைத் தொடர்ந்திருக்கக் கூடாது என்று கூறியுள்ளார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவார். மேலும், விவசாயி தற்கொலை தொடர்பாகத் தாம் பேசியதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார். இது குறித்து அவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்… ஆம் ஆத்மி கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதும் நான் உடனே பேரணியை ரத்து செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது நான் செய்த தவறு. விவசாயி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று என்னிடம் தகவல் கூறப்பட்டும் நான் என் பேச்சைத் தொடர்ந்திருக்கக் கூடாது. அப்படி நான் நடந்து கொண்டது யார் மனதையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். விவசாயி தற்கொலை குறித்து தில்லி போலீசார் நடத்தி வரும் விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராகவுள்ளேன். இந்த விஷயத்தில் ஆம் ஆத்மி தொண்டர்களை குறை கூறுவது தவறு. தில்லி போலீசார் என்னை அழைத்தால், தேவைப்பட்டால் அவர்கள் முன்பு ஆஜராகி விளக்கம் அளிப்பேன். தில்லி போலீசார் இந்த விஷயத்தில் நேர்மையான, பாரபட்சமற்ற விசாரணையை நடத்த வேண்டும். விவசாயி கஜேந்திரசிங் தற்கொலை விவகாரத்தில் உண்மையான குற்றவாளி கண்டுபிடிக்கப்பட வேண்டும். அவர்கள் போலீஸ்காரர்களாக இருந்தாலும் சரி, ஆம்ஆத்மி தொண்டர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். தில்லியில் மாநில அரசும் மாஜிஸ்திரேட் மூலம் தனி விசாரணை நடத்துகிறது. கஜேந்திரசிங் தற்கொலையை அரசியலாக்குவதை விட்டுவிட்டு, விவசாயிகளுக்கு பயிர் சேதத்துக்கு எத்தகைய கூடுதல் இழப்பீடு கொடுக்கலாம் என்று ஆலோசனை நடத்தி முடிவு செய்ய வேண்டும் என்றார்.